Published:Updated:

பட்ஜெட் 2022: சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?

Nirmala Sitharaman ( AP Photo / Manish Swarup )

பொருளாதாரத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் சம்பளதாரர்களின் பங்கு முக்கியமானது என்பதால், இந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்பு என்ன என்று பார்ப்போம்.

பட்ஜெட் 2022: சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?

பொருளாதாரத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் சம்பளதாரர்களின் பங்கு முக்கியமானது என்பதால், இந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்பு என்ன என்று பார்ப்போம்.

Published:Updated:
Nirmala Sitharaman ( AP Photo / Manish Swarup )

எதிர்வரும் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 1-ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிதிநிலை அறிக்கை மூலம் பல தரப்பினருக்கும் பல விதமான வரிச் சலுகைகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவினாலும், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் சில வரிச் சலுகைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

Savings
Savings
Photo by Micheile Henderson on Unsplash

நம் நாட்டில் வரி கட்டுபவர்களில் சம்பளதாரர்களின் பங்கு கணிசமானது. மாதந்தோறும் சம்பளம் வாங்கும்போது, வரிப் பிடித்தம் செய்யப்பட்டுவிடுவதால், இவர்கள் சரியாக வரி கட்டுவதில் முன்னிலையில் இருக்கிறார்கள். தவிர, இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அதிகம் செலவு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இப்படிச் செலவு செய்வதால்தான், பல பொருள்கள் விற்பனையாகி, பலருக்கும் வேலை கிடைக்கிறது. ஆக, பொருளாதாரத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதில் சம்பளதாரர்களின் பங்கு முக்கியமானது என்பதால், இந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. இந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்பு என்ன என்று பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முதலில், தற்போது 80C பிரிவில் செய்யப்படும் செலவு மற்றும் முதலீட்டுக்கு ரூ.1,50,000 வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வரம்பைக் குறைந்தபட்சம் ரூ.2,50,000-மாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்க்கை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாகவே இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் வீட்டு வாடகையும், பிள்ளைகளின் பள்ளி, கல்லூரிக் கட்டணமும் மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. சில நகரங்களில் ஆரம்பப் பள்ளிக்கே லட்சக் கணக்கில் கல்விக் கட்டணத்தைக் கட்டும் நிலைகூட இருக்கிறது. இந்த நிலையில், இதற்கு செய்யப்படும் செலவுக்கே ரூ.1,50,000 சரியாகப் போய்விடுவதால், முதலீட்டுக்கு அதிக தொகையை ஒதுக்க முடியாத நிலை உள்ளது. இந்த வரம்பு ரூ.2,50,000-மாக உயர்த்தப்பட்டால், வாய்ப்புள்ள பலரும் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இப்படிச் செய்யப்படும் முதலீடு பிற்காலத்தில் உதவும் என்கிற அதே சமயம், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய உதவி செய்வதாகவும் இருக்கும்.

Rupee
Rupee
Photo by Ravi Roshan from Pexels

இரண்டாவதாக, வீட்டுக்கடனில் வீடு வாங்கி, அதில் வசித்து வரும்பட்சத்தில், அந்தக் கடனுக்காகக் கட்டப்படும் வட்டிக்கு ரூ.2,00,000 வரை வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இதை ரூ.2,50,000-மாக உயர்த்தினால், மாதச் சம்பளதாரர்கள் கூடுதலாக சில நன்மைகளை வேகமாகப் பெறுவார்கள். தவிர, கூடுதலான பணத்தைக் கட்டி கடனை சீக்கிரமாக அடைக்கவும் வாய்ப்புண்டு. இதனால், ரியல் எஸ்டேட் துறை சுறுசுறுப்படைந்து, பலருக்கும் வேலை கிடைக்கும் நிலை உருவாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மூன்றாவதாக, கோவிட்டின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மருத்துவச் செலவுகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், 80D பிரிவில் குடும்பத்துக்கு எடுக்கப்படும் மருத்துவக் காப்பீடு பிரீமியத்துக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை ரூ.25,000-லிருந்து ரூ.50,000-ஆகவும், மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை ரூ.50,000-லிருந்து ரூ.75,000-மாக உயர்த்தினால், சம்பளதாரர்களுக்கு மிகப் பெரிய அளவில் பயன்படும். இன்றைய நிலையில், எந்த விதமான மருத்துவச் செலவை செய்வதாக இருந்தாலும், ரூ.50,000-த்துக்குமேல் செலவாகிறது. எனவே, இந்தக் கோரிக்கை காலத்துக்கேற்ற மிகச் சரியான கோரிக்கையாகவே இருக்கிறது.

Representational Image
Representational Image

நான்காவதாக, விருப்பு சேமலநல நிதியில் (VPF) தனியார் நிறுவன ஊழியர்கள் ரூ.2,50,000-த்துக்குமேல் சேர்க்கும் தொகைக்கு வரி கட்ட வேண்டும் என்று மத்திய அரசாங்கம் சொல்லி இருக்கிறது. இந்த வரம்பை ரூ.5,00,000 வரை உயர்த்தினால், இன்னும் அதிகமானவர்கள் அதிக தொகையை இதில் சேர்ப்பார்கள். ஓய்வுக் காலத்தில் நிதிச்சுமை இல்லாமல் இருக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது பலரும் வீட்டிலிருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. ஆனால், பணியாளர்களோ புதிதாக டேபிள், சேர் வாங்க, இன்டர்நெட் சாதனங்களை வாங்க என பல வகையிலும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, இந்த வகையில் செய்யப்படும் ரூ.50,000 வரையிலான செலவுக்கு வரிச் சலுகை தந்தால், பல லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்.

சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் இந்தக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் நிறைவேற்றினால், அவர்கள் நிச்சயம் மனம் மகிழ்வார்கள். இதனால் அரசுக்கு சிலபல ஆயிரம் கோடி ரூபாய் வரி வருமானம் குறைந்தாலும், பொருளாதாரம் வளர்ந்து அரசுக்கு வருமானம் அதிகரிக்கவே செய்யும். எனவே, சம்பளதாரர்களின் இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தத் தரப்பினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

இதேபோல உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism