Published:Updated:

பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? - எக்னாமிக் சர்வே 2021 சொல்வது என்ன?

ECONOMIC SURVEY

பிரீமியம் ஸ்டோரி

பட்ஜெட் 2021

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை 2021 கடந்த வாரம் வெளியானது. நடப்பு நிதியாண்டின் (2020-21) முக்கிய பொருளாதார நிகழ்வுகளையும் வருங்காலத்துக்கான மதிப்பீட்டையும் வழங்கும் இந்த ஆய்வறிக்கை, இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகரின் நேரடி மேற்பார்வையில் மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதாகும். கொரோனா பேரிடரால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ள இந்தியப் பொருளா தாரத்தின் தற்போதைய நிலை குறித்து பல அதிகாரபூர்வமான தகவல்களை உள்ளடக்கியுள்ள இந்தப் பொருளா தார ஆய்வறிக்கை நமக்கு உணர்த்தும் உண்மைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

நூற்றாண்டுப் பேரிடரின் தாக்கங்கள்...

டிசம்பர் 2019-ல் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக விரைவாகப் பரவியதுடன், உடல்நலன் சார்ந்த முதல் உலகப் பொருளாதாரச் சிக்கலுக்கு அடிகோலியது. போர், பஞ்சம், கடன் நெருக்கடி போன்ற வற்றால் உருவான முந்தைய பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்தப் பேரிடரை எதிர்கொள்ள உலக நாடுகள் புதுமையான யுக்திகளைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மிக எளிதில் பரவக்கூடிய கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருந்ததும், அரசின் கொள்கை முடிவுகளின் மீது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. நம் நாட்டில் மனித உயிர்களைக் காக்கவும், மக்களின் நீண்டகால நலன்களைக் கருத்தில் கொண்டும், மார்ச் 2020-ல் மிகக் கடுமையான பொதுமுடக்கம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இந்திய அரசின் பொதுமுடக்க நடவடிக்கையால் பல கோடி அப்பாவி மக்கள் கொரோனாவுக்கு பலியாகிவிடாமல் காப்பாற்றப்பட்டு இருப்பதாக இந்தப் பொருளாதார சர்வே தெரிவிக்கிறது.

எக்கனாமிக்
எக்கனாமிக்

அரசின் அதிவேக நடவடிக்கைகள்...

மிகக் கடுமையான கட்டுப்பாடு களுடன்கூடிய பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியாகப் பெரும் சவால்களை எதிர்கொண்ட சாமான்யர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, 80.96 கோடி மக்கள் தொகையை இலக்காகக் கொண்ட உலகின் மிகப்பெரிய உணவு மானியத் திட்டம் இந்திய அரசால் அதிவேகமாக மேற் கொள்ளப்பட்டதாகவும் நலிவடைந்த சிறுகுறு தொழில் நிறுவனங்களை மீட்பதற்காக அவசரகாலக் கடன் உதவித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மீண்டுவரும் பொருளாதாரம்...

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9% வீழ்ச்சியடைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இரண்டாம் காலாண்டில் 7.5% மட்டுமே சரிவடைந்தது. மூன்றாவது காலாண்டில், இந்தியப் பொருளாதாரத்தில் உற்சாகம் தரக்கூடிய (ஒரு லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்த மாதாந்தர ஜி.எஸ்.டி வரி வருவாய், மின்சாரம் மற்றும் எஃகு போன்ற உற்பத்தி மூலப் பொருள்களின் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட) ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தேறின. அதிகப்படியான அரசு செலவினங்கள் மற்றும் நிகர ஏற்றுமதி ஆகியவை ஜி.டி.பி-யின் மீட்சிக்கு பெரிதும் உதவிகரமாக அமைந்தன. டிசம்பர் (2020) மாத வாக்கில், நுகர்வோர் பணவீக்கம் குறைவடைந்ததும் மத்திய வங்கியின் கொள்கை முடிவு களுக்கு சாதகமாக அமைந்தது.

ஆக மொத்தத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 15.7 சதவிகிதமும் இரண்டாம் பாதியில் 0.1 சதவிகிதமும் இந்தியப் பொருளாதாரம் சரிவடையும் என்று மதிப்பிடும் பொருளாதார ஆய்வறிக்கை, ஒட்டு மொத்த நிதியாண்டில் (2020-21) இந்தியாவின் ஜி.டி.பி 7.7% வரை வீழ்ச்சி அடையும் என்று மதிப்பிட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் (2021-22) இந்தியாவின் வளர்ச்சி 11 சதவிகிதமாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை பற்றி கவலைப்படாதீர்கள்...

சூரியனால் ஆவியாகும் நீர், எப்படி மழையாகத் திரும்ப பூமிக்கே கிடைப்பது போல, அரசு வசூலிக்கும் வரிப்பணம் மக்கள் நலத் திட்டங்களுக்காகவே என்னும் மகாகவி காளிதாசரின் கருத்தை மேற்கோள் காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, துரிதமான பொருளாதார வளர்ச்சிதான் (தேசியக்) கடனைத் திரும்பச் செலுத்தும் சக்தியை அதிகரிக் கிறது என்றும், குறைந்த கடன்களுடன் கூடிய சிக்கனமான நடவடிக்கைகள் அதிக பலன் தராது என்றும் தெரிவித் துள்ளது.

‘‘மேற்கத்திய நாடுகளைப்போல, அல்லாமல், இந்தியாவில் அரசுக் கடன் களின் மீதான வட்டி விகிதத்தைவிட தேசியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் (Interest Rate – Growth Rate Differential) அதிகமாக இருப்பதால், அரசுக் கடன் அளவின் (Fisca Deficit) மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்’’ என்று வாதாடுகிறது பொருளாதார ஆய்வறிக்கை. குறிப்பாக, பொருளாதார வீழ்ச்சி கால கட்டங்களில் நிதிக் கொள்கையைக் கவலைப்படாமல் தளர்த்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறது.

நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கே இதுவரை அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்த தற்போதைய அரசின் மிக முக்கிய கொள்கை மாற்றமாக பொருளாதார ஆய்வறிக்கையின் மேற்குறிப்பிட்ட வாசகங்கள் கருதப்படுகின்றன. பொருளாதார ஆய்வறிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை 9.5 சதவிகிதமாகவும் அடுத்த நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவிகிதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. முந்தைய பட்ஜெட் அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நிதிப் பற்றாக் குறையின் அளவு தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்கும் என்று அறிவித் திருப்பது அரசின் மனநிலை மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

நிதிப் பற்றாக்குறையின் அளவு குறித்த அரசின் புதிய நிலைப் பாட்டால், ஜி.டி.பி-யில் அரசின் செலவினப் பங்கு கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தற்போதைய கொரோனா பொருளாதாரப் பேரிடர் காலத்தில், தனியார் முதலீடுகள் அதிகமாக உருவாகாத இக்கட்டான சூழ்நிலையில், அரசின் செலவினங்களை அதிகப்படுத்துவது பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பெருமளவு உதவும் என்றும் நம்பப்படுகிறது.

தர நிர்ணயம் பற்றிய கவலை வேண்டாம்...

உலகின் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரத்தின் தர நிர்ணயம் வரலாறு காணாத வண்ணம் குறைவாக உள்ளது என்று சுட்டிக்காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, தர வரிசைப் பட்டியலில் இந்தியாவின் தற்போதைய நிலை, நடைமுறை எதார்த்தத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை என்றும் குற்றம் சாட்டுகிறது. இந்தியாவின் பொருளாதார வளம் மற்றும் கடனைத் திரும்பச் செலுத்தக் கூடிய சக்தி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உலகத் தர நிர்ணய நிறுவனங்கள் இந்தியாவுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் தற்போதைய தரநிலை முதலீட்டுக்கு உரிய கடைநிலையான BBB-ஆகும். இந்தத் தரநிலை கொண்ட பல உலக நாடுகளைக்காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வலிமை மேம்பட்டதாக உள்ளதைப் பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. ஜி.டி.பி வளர்ச்சி, பணவீக்கம் விகிதம், அரசு கடன் அளவு, வர்த்தகப் பற்றாக்குறை, அரசியல் ஸ்திரத்தன்மை, அந்நிய செலாவணிக் கையிருப்பு போன்ற முக்கியக் கூறுகளைக் கருத்தில்கொண்டு இந்தியாவின் தர வரிசையை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் உண்மையான பொருளாதார வலிமையை, உலகத் தர நிர்ணய நிறுவனங்கள் பிரதிபலிக்கத் தவறியதால்தான், முந்தைய ரேட்டிங் மாற்றங்கள் இந்தியாவின் நிதிச் சந்தைகளையும் அந்நிய முதலீடுகளையும் பெருமளவு பாதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியாவின் நிதிக் கொள்கை ரேட்டிங் மாற்றங்களைச் சார்ந்து செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், தமது செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர வேண்டும். எனவே, ரேட்டிங் பற்றியும் அதிகம் கவலைப்பட வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்...

அடுத்த நிதியாண்டில் (2021-22) இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 11 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ள இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தால், பன்னாட்டு வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், இறக்குமதி யைக் காட்டிலும் ஏற்றுமதி சற்று அதிகமாக இருப்பதால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியாவின் பன்னாட்டு வர்த்தகத்தில் ‘வர்த்தக உபரி’யை எதிர்பார்க்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தத்தில், கொரோனா எனும் நூற்றாண்டு பேரிடர் நமது பொருளா தாரத்தைக் கடுமையாகப் பாதித் திருந்தாலும், வருங்காலம் நமக்கு நம்பிக்கை தருவதாகவே உள்ளது என்பதை சுட்டிக் காட்டியமைக்கும், நிதிப் பற்றாக்குறை குறித்த அரசின் மிக முக்கிய கொள்கையில் உரிய மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை.

பிட்ஸ்

ரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்னும் மத்திய அரசின் திட்டத்தை இந்தியாவின் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக் கொண்டு உள்ளன. மீதமுள்ள மாநிலங்களில் இந்த ஆண்டு இதை ஏற்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு