Published:Updated:

பட்ஜெட் 2020: கெமிக்கல் துறை சார்ந்தவர்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன?

Representational Image
Representational Image

இந்தியத் தயாரிப்புகளின் விற்பனை வாய்ப்பை அதிகரிக்கும்பொருட்டு வெளிநாட்டு கெமிக்கல் தயாரிப்புகளின் இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். அதேவேளை, கெமிக்கல் தயாரிப்புகளுக்கான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரியை 0% என்றுகூட குறைக்கலாம்.

பட்ஜெட் தாக்கலுக்கான நாள் நெருங்க நெருங்க அதன்மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு துறையைச் சார்ந்தவர்களும், வெவ்வேறான தேவைகள், எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட்டை அணுகுகிறார்கள். கெமிக்கல் துறையைப் பொறுத்தவரை, உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாது, இறக்குமதிகளையும் நம்பியிருக்கும் துறை. இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கான பட்ஜெட் தேவைகள் குறித்து, `சீடெக்ஸ் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான சிவ.இளநகையிடம் கேட்டோம்.

சிவ.இளநகை,
தலைவர்,
சீடெக்ஸ் பெட்ரோகெமிக்கல்ஸ்
சிவ.இளநகை, தலைவர், சீடெக்ஸ் பெட்ரோகெமிக்கல்ஸ்
vikatan

``கெமிக்கல் துறையைப் பொறுத்தவரை முக்கியமான சில கோரிக்கைகளை எங்களுடைய பட்ஜெட் எதிர்பார்ப்பாக வைக்கிறோம். வெளிநாடுகளிலிருந்து முழுமையான கெமிக்கல் தயாரிப்புகளை விற்பனைக்காக இந்தியாவுக்குள் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி தற்போது 7.5 சதவிகிதமாக உள்ளது. இதன்காரணமாக வெளிநாட்டு கெமிக்கல் தயாரிப்புகளை இந்தியாவுக்குள் கொண்டுவந்து குவிக்கிறார்கள். அந்தத் தயாரிப்புகளோடு உள்நாட்டு கெமிக்கல் தயாரிப்புகள் போட்டிபோட முடியாமல் திணறுகின்றன. ஏனென்றால், உள்நாட்டில் கெமிக்கல் பொருள்களின் தயாரிப்புக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி-யால் வெளிநாட்டுத் தயாரிப்புகளைவிடக் குறைந்த விலையில் அளிப்பது கடினமானதாக உள்ளது.

இந்தியத் தயாரிப்புகளின் விற்பனை வாய்ப்பை அதிகரிக்கும்பொருட்டு வெளிநாட்டு கெமிக்கல் தயாரிப்புகளின் இறக்குமதிக்கான சுங்க வரியை 15 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். அதேவேளை, கெமிக்கல் தயாரிப்புகளுக்கான மூலப்பொருள்கள் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரியை 0% என்றுகூட குறைக்கலாம். இதன்காரணமாக மூலப்பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும். 'மேக் இன் இந்தியா' என்ற திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு இத்தகைய வரி மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்கிறோம்.

Representational Image
Representational Image

பார்மசூட்டிகல் துறையில் நிறுவனம் தொடங்குவதற்கு யாராவது விண்ணப்பித்தால், அதிக அலைச்சல் இல்லாமல் சிங்கிள் விண்டோ முறையில் அனைத்துக்கும் ஒரே விண்ணப்பத்தில் ஒப்புதல் கிடைக்கும்படி உள்ளது. அதேபோல கெமிக்கல் துறையிலும் சிங்கிள் விண்டோ ஒப்புதல் முறை கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில், ஒருவர் கெமிக்கல் நிறுவனம் தொடங்குவதாக இருந்தால் அதற்காக ஒவ்வொரு பிரிவு அதிகாரிகளிடமிருந்தும் ஒப்புதல் பெற வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் விண்ணப்பித்து, அவர்கள் அனைத்தையும் சரிபார்த்து ஒப்புதல் தருவதற்குள் மூன்று ஆண்டு காலம்வரை ஆகிவிடுகிறது. மூன்றாண்டு காலத்துக்குள் கெமிக்கல் துறையில் மூலப்பொருள்களின் விலை, தயாரிப்புச்செலவு ஆகியவை, திட்டவரையறையைவிட அதிகமாகின்றன. அதனால் எதிர்பார்த்தபடி நிறுவனத்தை லாபகரமாக நடத்தமுடியாமல் சிரமப்படுகிறார்கள்.

எனவே, இத்தகைய கால இடைவெளியைக் குறைத்து. அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்குள் நிறுவனத்துக்கு ஒப்புதல் கிடைக்கும்படி இருக்க வேண்டும். நிறுவனத்தைப் புதிதாகத் தொடங்குபவரின் தகுதி, தயாரிப்புப் பொருளுக்கான தேவைப்பாடு போன்றவற்றை மட்டும் தீர ஆய்வுசெய்து அதன்பின் அனுமதியளிக்கலாம். இல்லையெனில், நிறுவனத்துக்கான அரசாங்க ஒப்புதலைப் பெறுவதற்குள் நிறுவனத்தை நடத்துவதற்கான ஆர்வமே தடைபட்டுப்போகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யும்முன் பெரிய தொழிலதிபர்களை மட்டும் அழைத்து அரசாங்கம் கருத்துக் கேட்கிறது. இப்படி கருத்துக்கேட்பது நல்ல விஷயமே. ஆனால், சிறுகுறு தொழில்நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடமும் கருத்துக்கேட்பது அவசியம். குறிப்பாக, எங்களுடைய அமைப்பைப்போன்ற சிறுதொழில் நிறுவனங்களுக்கான அமைப்புகளின் கருத்துகளைக் கேட்டால்தான் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருக்கும் சிறுதொழில் நிறுவனங்களும் பட்ஜெட்டால் பலனடையக்கூடும்.

Representational Image
Representational Image
எப்படி போடப்படுகிறது இந்திய பட்ஜெட்...? #DetailedReport

எனவே, வரக்கூடிய பட்ஜெட்டில், பல்வேறு விதிமுறைகளைக் காரணம்காட்டி, கெமிக்கல் துறைசார்ந்த நிறுவனங்களைத் தொடங்க ஒப்புதல் தருவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளக் கூடாது. கெமிக்கல் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய சுங்க வரியை அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு கெமிக்கல் தயாரிப்பாளர்களின் ஏற்றுமதிக்கு ஊக்கம் தர வேண்டும். இத்தகைய எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதாக வரவுள்ள பட்ஜெட் இருக்குமென்று நம்புகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு