Published:Updated:

ரிசர்வ் வங்கி: சக்தி காந்த தாஸ் பதவியை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்த மத்திய அரசு; இதுதான் காரணமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக தற்போது இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 10-ம் தேதியுடன் முடிகிறது. இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் அவரே கவர்னராக இருப்பார் என்று அறிவித்திருக்கிறது மத்திய அரசாங்கம்.

புவனேஸ்வரில் பிறந்த சக்திகந்த தாஸ், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாறு படிப்பைப் படித்தவர். 1980-ல் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் பணியாற்றத் தொடங்கினார். தொழில்துறை, வருவாய்த்துறை, உரத்துறை எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் சக்திகந்த தாஸுக்கு உண்டு.

Shaktikanta Das
Shaktikanta Das
Photo: RBI

படித்தது வரலாறு எனினும், நிதித்துறையில் அவருக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு. இதனால், ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank,) ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infracture Investment Bank) ஆகிய உலகப் புகழ்வாய்ந்த அமைப்புகளில் பணியாற்றும் அனுபவம் அவருக்குக் கிடைத்தது. உலக வங்கிக்கு இந்தியாவின் சார்பில் மாற்று கவர்னராகவும் பணியாற்றிய சிறப்பு அவருக்கு இருக்கிறது.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் 15-வது நிதி கமிஷனில் சிறப்புப் பதவியை வகித்துவந்தார். இந்த நிலையில் 2018-ம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராகத் திடீரென அறிவிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகு துணை கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேலை ரிசர்வ் வங்கியின் கவர்னராக ஆக்கியது பா.ஜ.க அரசாங்கம். ஆரம்பத்தில் மோடி அரசாங்கத்துடன் நல்லுறைவைப் பேணிவந்தார் உர்ஜித் பட்டேல். ஆனால், நாள் செல்ல செல்ல மத்திய அரசுடன் கருத்துவேறுபாடு ஏற்பட ஆரம்பித்தது. இதனால் மன நெருக்கடிக்கு உள்ளான உர்ஜித், தனது கஷ்டத்தை வெளியே சொல்ல முடியாமல் மனதுக்குள் புதைத்துக்கொண்டு அமைதியாக இருந்தார். ஆனால், ஒரு கட்டத்துக்குமேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை என்பதால், 2018-ம் ஆண்டு டிசம்பரில் ஆர்.பி.ஐ கவர்னர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்திருக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.

Urjid Patel
Urjid Patel
Screenshot from RBI Youtube Channel
ஒரே நாளில் 14 வங்கிகளுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி; என்ன காரணம்?

சக்தி காந்த தாஸைத் தேடிவந்த வாய்ப்பு!

ஆர்.பி.ஐ கவர்னர் பதவியை உர்ஜித் பட்டேல் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என்கிற கேள்வியுடன் தகுதி வாய்ந்த ஒருவரை வேக வேகமாகத் தேட ஆரம்பித்தது மத்திய அரசாங்கம். பல பொருளாதார நிபுணர்களின் பெயரை வைத்து, யாராவது இந்தப் பதவிக்குப் பொருந்தி வருவார்களா என்று பார்த்த மத்திய அரசாங்கம், கடைசியில் சக்திகந்த தாஸின் பெயரைத் தேர்வு செய்தது. மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறை செயலாளராக அவர் முன்பு இருந்ததால், அவரால் ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்று, சிறப்பாக செயல்பட முடியும் என்று நினைத்தது மத்திய அரசாங்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்பாகச் செயல்பட்டவர்

இப்படி நெருக்கடியான சூழலில் கவர்னராகப் பதவியேற்ற, சக்தி காந்த தாஸ் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக, 2020-ல் உருவான கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் இறக்கம் கண்டது. நாடுமுழுக்க அன்றாட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுமார் 20% வரை மைனஸில் இருந்தது. ஆனால், ரிசர்வ் வங்கி அறிவித்த பல்வேறு கடன் உதவித் திட்டங்கள், தொழில் துறை மீண்டும் உயிர்பிழைத்து செயல்பட மிகவும் உதவியாக இருந்தது. நெருக்கடியான இந்தச் சமயத்தில் மத்திய அரசாங்கம் செய்ய நினைத்த திட்டங்களுக்கு ஆர்.பி.ஐ மூலம் சரியான முறையில் ஆதரவு தந்தார். இதனால் மிகப் பெரிய வீழ்ச்சியில் இருந்து, இந்தியப் பொருளாதாரம் ஓரளவு தப்பிக்க உதவினார்.

Shaktikanta Das
Shaktikanta Das
Screenshot from RBI Youtube Channel
`இனி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சம்பளம் போட முடியும்!' - வழிசெய்த ரிசர்வ் வங்கி

கருத்து மோதலில் ஈடுபட விரும்பாதவர்!

சக்திகாந்த தாஸிடம் இருக்கும் பாசிட்டிவான குணமே, கருத்து மோதலில் ஈடுபட விரும்பாத அவரது அணுகுமுறைதான். ரிசர்வ் வங்கியின் முந்தைய கவர்னர்களாக இருந்த சுப்பாராவ், ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் போன்றவர்கள், ரிசர்வ் வங்கியின் பாரம்பர்யத்தைக் காக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆளும்கட்சியினருடன் மோதல் போக்கையே கடைப்பிடித்தனர். ஆனால், சக்திகாந்த தாஸ் அப்படிப்பட்டவர் அல்ல. ரிசர்வ் வங்கிக்கு பாதகம் ஏற்படக் கூடாது என்று நினைக்கும் அதே நேரத்தில், ஆளும்கட்சியினர் செய்ய நினைக்கும் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடாமல், முடிந்தவரை நிறைவேற்றித் தருபவர். ரிசர்வ் வங்கியின் கவர்னராக அவரது பதவிக் காலம் முடிந்த நிலையிலும், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்ததற்கு இது ஒரு முக்கியமான காரணம் ஆகும் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

தகுதியான நபர்கள் கிடைப்பதில்லையா?

மத்திய அரசில் முக்கியமான அமைப்புகளில் உயர்பதவிக்குத் தகுதியான நபர்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதாக டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்த நிர்வாகப் பணித்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். பிரதமருக்கான பொருளாதார முதன்மைச் செயலாளராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் வரும் டிசம்பருடன் அந்தப் பதவியிலிருந்து விலகி, மீண்டும் கல்விப் பணிக்குத் திரும்புகிறார். இந்தப் பதவிக்கு யாரை நியமிப்பது என மத்திய அரசாங்கம் பலமாக யோசித்து வருகிறது. உடனடியாக யாரும் கிடைக்காத நிலையில், தற்போது நிதித் துறையின் பொருளாதார முதன்மை ஆலோசகராக இருக்கும் சஞ்சீவ் சன்யல் அடுத்து இந்தப் பதவிக்கு வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், 2022 பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால், பொருளாதார ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் பணி இப்போதிலிருந்தே தொடங்கப்பட வேண்டும். இந்த ஆய்வறிக்கையைத் தயாரிக்கும் வேலை சஞ்சீவ்விடம்தான் தரப்பட்டுள்ளது.

K.V. Subramanian at a Press Conference
K.V. Subramanian at a Press Conference
PIB India
பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து விலகும் சுப்பிரமணியன்; விலகலுக்கு இதுதான் காரணமா?

இப்படி உயர்பதவிக்குரிய நபர்களைத் தேடுவது மிகப் பெரிய பிரச்னையாக இருப்பதால், ஆர்.பி.ஐ கவர்னர் பதவிக்கு தகுதியான இன்னொரு நபரைத் தேடுவது இன்றைய நிலையில் மத்திய அரசுக்குக் கடினமான காரியம். எனவேதான், சக்திகாந்த தாஸின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு