Published:Updated:

அரசுக்கும் நஷ்டம், மக்களுக்கும் கஷ்டம்..!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

அரசுக்கும் நஷ்டம், மக்களுக்கும் கஷ்டம்..!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

எந்த விஷயமாக இருந்தாலும் முதலில் அரசு மாறும்; பிற்பாடு அரசைப் பின்பற்றி மக்களும் மெள்ள மெள்ள மாறுவார்கள். ஆனால், ஆன்லைன் பணப் பரிவர்த்தனையைப் பொறுத்தவரை, மக்கள் வேகமாக மாறிவருகிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம், கடந்த மே மாதத்தில் யு.பி.ஐ மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தின் அளவு ரூ.10 லட்சம் கோடி என்கிற முக்கியமான இலக்கைத் தொட்டதுதான். இது, கடந்த ஏப்ரலில் ரூ.9.83 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், ஒரே மாதத்தில் ரூ.17,000 கோடி அதிகரித்து, ரூ.10 லட்சம் கோடி என்கிற இலக்கைத் தொட்டிருப்பது நிச்சயம் கணிசமான வளர்ச்சிதான்.

2016-ம் ஆண்டு பணமதிப்பு நீக்கம் திடீரென கொண்டுவரப்பட்டபோது மத்திய அரசாங்கம் இந்த யு.பி.ஐ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த நடைமுறையை மக்கள் புரிந்துகொண்டு செயல்படுத்த அதிக காலம் ஆகும் எனப் பலரும் அப்போது சொன்னார்கள். ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளில் நம் நாட்டில் உள்ள முதல்நிலை நகரங்களைத் தாண்டி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள மக்கள்கூட எளிதில் பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்நுட்பமாக மாறியிருக்கிறது யு.பி.ஐ தொழில்நுட்பம். 10 ரூபாய்க்கு டீ குடித்துவிட்டு, அந்தப் பணத்தை யு.பி.ஐ மூலம் செலுத்துகிற அளவுக்கு இன்றைக்கு அதன் பயன்பாடு வெகுவாக அதிகரித்திருக்கிறது.

யு.பி.ஐ தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை இன்னும் எந்தெந்தத் துறைகளில் எல்லாம் மத்திய அரசாங்கம் கொண்டுவர முடியுமோ, அங்கேயெல்லாம் கொண்டுவரும் முயற்சியைச் செய்ய வேண்டும். இப்போதும் பல நிறுவனங்கள் யு.பி.ஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியைத் தருவதில்லை. குறிப்பாக, அரசு அலுவலகங்களிலேயே இந்த வசதி தரப்படுவதில்லை. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், இணையவசதி போதுமான அளவுக்கு இல்லை என்பதுதான். இந்த இணையவசதியை அதிகரித்துத் தரும் பணியை மத்திய அரசாங்கம் செய்து தந்துவிட்டால், பிற்பாடு எல்லோருமே இந்த யு.பி.ஐ தொழில்நுட்ப வசதியைத் தர ஆரம்பித்துவிடுவார்கள்.

இதனால் அரசுக்கும் நன்மை, மக்களுக்கும் நன்மை. உதாரணமாக, தற்போது கள்ள நோட்டுகளின் புழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டு 39,453 என்கிற எண்ணிக்கையில் இருந்த கள்ள நோட்டுகள், 2021-22-ல் 79,669 ஆக உயர்ந்திருக்கிறது. பணத்தை அச்சுத் தாளாகப் பயன் படுத்தாமல், ஆன்லைன்மூலம் பரிமாற்றம் செய்யும்போது கள்ள நோட்டு என்கிற பிரச்னை வரவே வராது. இதனால் அரசும் மக்களும் நிம்மதியாக இருக்க முடியும்.

மத்திய அரசைப் பொறுத்தவரை, டிஜிட்டல் இந்தியா... டிஜிட்டல் இந்தியா என்று மேடைகளில் மட்டும் முழங்கிப் பயன் இல்லை. யு.பி.ஐ போன்ற ஆன்லைன் தொழில்நுட்பங்களை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டு, மக்களுக்கு கஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism