Published:Updated:

உதவாத சொத்து... வறட்டு கெளரவம்... புதையல் காக்கும் பூதங்கள்!

சொத்து
பிரீமியம் ஸ்டோரி
சொத்து

சொத்து

உதவாத சொத்து... வறட்டு கெளரவம்... புதையல் காக்கும் பூதங்கள்!

சொத்து

Published:Updated:
சொத்து
பிரீமியம் ஸ்டோரி
சொத்து

வாழ்வில் வளம் சேர்க்க பணம் அவசியம் என்னும் பேருண்மை நம்மில் பலருக்கும் புரிந்திருக்கிறது. இளைஞர்கள் முதல் முதியவர் வரை இன்று பணம் பெருக்கும் வழிகளைக் கண்டறிந்து செயலாற்றி வருகிறார்கள்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

இந்தியாவில் இருக்கும் உயர் சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் (High Net Worth Individuals) எனப்படும் செல்வந்தர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 3,57,000 என்னும் இலக்கத்தைத் தொட்டிருக்கிறது. ஆனால், பணத்தை சம்பாதிக்கவும், சேர்த்து வைக்கவும் தெரிந்த எத்தனை பேருக்கு அதை முறையாக அனுபவிக்கத் தெரிந்துள்ளது?

பணத்தின் வேலை நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. அதை உணராமல் பணத்தைப் புதைத்து வைத்து பூதம் போல் காத்து, தானும் அனுபவிக்காமல் அடுத்தவருக்கும் பயன் படாமல் செய்யும் அறியாமையை இன்று பலரிடமும் காண நேர்கிறது. சொத்து என்பது வெறுமனே சேர்த்து வைப்பதற்காக மட்டுமல்ல, நம் வசதிக்காகப் பயன்படுத்தவும்தான் என்கிற தெளிவு அவர்களிடம் இல்லை.

சொத்துப் பராமரிப்பில் உணர்வுகள் தலையீடு

சிலர், மூதாதையர் விட்டுச் சென்ற சொத்து களின் மதிப்பு கரைவதை அறியாமல், அவற்றை விற்பதைக் குற்றமாகக் கருதும் மனப்பான்மை கொண்டுள்ளனர். இன்னும் சிலர், அடுத்தவர் பொறாமைப்படும் அளவு ஒரு சொத்தை வாங்கிய பின், அதை விற்றால் ஏளனத்துக்கு உள்ளாவோமோ என்கிற பயம் கொள்கின்றனர்.

வேறு சிலர், அடுத்த தலைமுறைக்கு நம் சொத்து உதவுமா என்று சிந்திக்காமல், மேலும் மேலும் சேர்த்து வைப்பதிலேயே குறியாக உள்ளனர். இதுபோன்ற உணர்வுகள் நம்மை அந்தச் சொத்துகளின் உண்மையான பயனை அனுபவிக்கவிடாமல் தடுக்கின்றன.

சொத்து விற்பது தொடர்பாக என் நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னிடம் பகிர்ந்துகொண்ட எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

உதவாத சொத்து... வறட்டு கெளரவம்... புதையல் காக்கும் பூதங்கள்!

உதவாமல் போகும் சொத்து 1...

அவருக்கு வயது 70. எளிய பணி செய்து ஓய்வு பெற்றவர். 35 வயதுள்ள அவர் மகளின் திருமணம் நடத்துவதற்குத் தேவையான பணம் இல்லாமல் கஷ்டப்படு கிறார். பழைய, சிதிலமடைந்த பூர்வீக வீட்டில்தான் அவர் குடியிருக்கிறார். ஊரின் நடுவில் இருக்கும் அந்த வீட்டை விற்றாலே பல லட்சம் ரூபாய் அவருக்குக் கிடைக்கும். ஆனால், பூர்வீக வீட்டை விற்பது தாய், தந்தையருக்குத் துரோகம் செய்வதற்கு ஒப்பானது என்று திடமாக நம்புகிறார். மூதாதையர் வீட்டைக் கண் போல் காக்கும் இவர், தன் காலத்துக்குப் பின் தன் மகளின் கதி என்ன என்பதை ஏன் எண்ணிப் பார்க்க மறுக்கிறார்?

உதவாமல் போகும் சொத்து 2...

அவருக்கு வயது 35. சென்னையில் பலசரக்குக் கடையில் வேலை பார்க்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ், வாடகை, மாதாந்தரச் செலவுகள் என்று பணம் வரவுக்குமேல் செலவாகிறது.

தமிழ்நாட்டின் தென்கோடி கிராமத்தில் பூட்டிக் கிடக்கும் எட்டுக் கட்டு வீட்டுக்கு மராமத்து செலவு செய்ய ரூ.60,000 தேவை. அந்தப் பணத்தை எப்படித் திரட்டுவது என்று யோசிக்கிறாரே தவிர, யாரும் குடியிருப்பதற்கு பயன் இல்லாமல் கிடக்கும் அந்த வீட்டை இனி ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கேள்வியை கேட்கவே மறுக்கிறார்.

உதவாமல் போகும் சொத்து 3...

அவருக்கு வயது 45. வளை குடா நாடுகளில் டிரைவராகப் பணியாற்றி கோவிட் பிரச்னை யால் ஊர் திரும்பியவர். அங்கு பணியாற்றும்போது வந்த பணம் முழுவதையும் மனைவிக் கும், பத்து வயது மகளுக்கும் நகை வாங்கப் பயன்படுத்தி அவற்றைப் பத்திரமாக லாக்கரில் வைத்திருக்கிறார்.

வளைகுடாவிலிருந்து மீண்டும் திரும்பிய பின் அவருக்கு நல்ல வேலை எதுவும் கிடைக்கல்லை. ஊபர், ஓலா வில் கார் ஓட்டி, கொஞ்சம் வருமானம் சம்பாதிக்கலாம் என்றாலும், டிரைவர் வேலையைத் தொடர அவருக்கு மனம் இல்லை; சொந்தமாக கார் வாங்கும் அளவுக்கு கையிலும் பணம் இல்லை. ‘நகைகளை விற்றால் சொந்தங் கள் சிரிக்குமே...’ என்ற கவலை யிலேயே அவரது நாள்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன.

உதவாமல் போகும் சொத்து 4...

வாரிசுகளுக்கு சொத்து விட்டுச் செல்வதுதான் தங்கள் அன்பை நிரூபிக்கும்; பிள்ளை களின் நன்றியைப் பெற்றுத் தரும் என்று பலர் எண்ணு கிறார்கள். அதற்காக இவர்கள் தங்கள் வசதிகளைக் குறைத் துக்கொள்வதையும், மிக எளிய வாழ்க்கை வாழ் வதையும் கடமையாகவும், மாபெரும் தியாகமாகவும் கருதுகிறார்கள்.

வாரிசுகளுக்கு சொத்து விட்டுச் செல்வது பல இடங் களில் தவறாக முடிகிறது. பெற்றோர் செல்வந்தர்களாக இருந்தால், “தேவைக்கதிக மாகப் பணம் இருக்கிறதே; நான் எதற்காகப் படிக்க வேண்டும் அல்லது உழைக்க வேண்டும்” என்பது போன்ற சிந்தனைகள் பிள்ளைகள் மனதில் உருவாகிவிடுகிறது.

அளவுக்கதிகமாகச் சேர்த்து வைத்த சொத்துதான் பல குடும்பங்களில் பெரும் சண்டை உருவாவதற்குக் காரணமாக அமைந்துவிடு கிறது. இதற்கு அம்பானி குடும்பத்தைவிட வேறொரு உதாரணம் தேவையா என்ன?

பூர்வீகச் சொத்தைப் பிரிக்கப் போனால், சண்டை யும் சச்சரவும் வருமே என்று நினைத்துதான் உயில் எழுதும் வேலையைப் பல பெற்றோர் கள் செய்யாமலே போய்விடு கிறார்கள். மேலும், சிலர் தங்கள் சொத்துகள் பற்றிய விவரங்களை சரியாகப் பகிர்ந்துகொள்ளாததால், வாரிசுகள் அவை பற்றி அறியாமல் இழப்பு நேர்வதும் நடக்கிறது.

உதவாமல் போகும் சொத்து 5...

இன்று இன்னொரு விதத் திலும் பூர்வீகச் சொத்துகள் பயனற்றுப் போகின்றன. பல குடும்பங்களில் தாய், தந்தையரைவிட மிக நல்ல பொருளாதார வசதியுடன் பிள்ளைகள் வாழ்கிறார் கள். அவர்களைப் பொறுத்தவரை தாய், தந்தையர் மிகுந்த முயற்சி எடுத்து, விட்டுச் செல்லும் சொத்து பண அளவில் அதிக மதிப்பு இல்லாதது. அயல் நாடுகளில் வேறூன்றிவிட்ட பிள்ளைகளுக்கு இங்கு உள்ள சொத்துகளைத் தொடர்ந்து கண்காணிப்பதும், தொடர்ந்து அவற்றைப் பராமரிப்பதும் கடினம்; அந்த சொத்துகளை விற்றுவரும் பணத்துக்கு இரண்டு நாடுகளிலும் வரி கட்ட வேண்டிய சூழ்நிலையில் உள்ள பிள்ளைகள் “எனக்கு அந்தச் சொத்தே வேண்டாம்” என்று புறக்கணிப்பதும் நடக்கிறது. இந்த நிலையை நினைத்து, “கூடுவிட்டிங்கு ஆவிதான் போயினபின், யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்” என்று ஔவைப் பிராட்டி அன்று கேட்டது இன்றும் பொருந்துவதாக உள்ளது.

உதவாத சொத்து... வறட்டு கெளரவம்... புதையல் காக்கும் பூதங்கள்!

சிந்தியுங்கள்; செயல்படுங்கள்

பணத்தைச் சம்பாதித்து சொத்து சேர்த்து கட்டிக் காப்பதற்குத் திறமை முக்கியம் எனில், தேவைப்படும் இடங்களில், தேவைப்படும் நேரங்களில் அந்த சொத்தை விற்கும் மனத்திடமும் நிச்சயம் வேண்டும். இன்று ஒரு சொத்தை விற்றுவிட்டால், பிற்பாடு வாங்க முடியாது என்பது உண்மை. ஆனால், குழந்தைகள் கல்விக்கு உதவாத, திருமணத்துக்கு உதவாத, தன் சொந்த வாழ்வின் மேம்பாட்டுக்கு உதவாத, சமூகத்துக்கு உதவாத சொத்துகள் இருந்துதான் என்ன பயன்?

இது போன்ற சிந்தனை களால்தான் இன்றைய உலகின் பொருளாதார ஹீரோக்களான பில் கேட்ஸ், வாரன் பஃபெட் போன்றோர் தங்கள் திரண்ட சொத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே தங்கள் வாரிசுகளுக்கு எழுதி வைத்திருக்கிறார்கள்.

பணத்தைச் சேர்ப்பவர்களும் சரி, பெறுபவர்களும் சரி, அதன் முழுப்பயனையும் அடைவதே அந்தப் பணத்துக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். கஞ்சத்தனமாக இருந்து, பார்த்துப் பார்த்து சேர்த்த பணம், கடைசியில் யாருக்கும் பயன்படாமல் பாழ்பட்டுப் போவது எத்தனை கொடுமையான விஷயம் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்!