Published:Updated:

ஐ.எஃப்.எஸ் மோசடியில் மத்திய உளவுப் பிரிவு... புலம்பித் தவிக்கும் மக்கள்!

ஐ.எஃப்.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.எஃப்.எஸ்

ஃபாலோ அப்

ஐ.எஃப்.எஸ் மோசடியில் மத்திய உளவுப் பிரிவு... புலம்பித் தவிக்கும் மக்கள்!

ஃபாலோ அப்

Published:Updated:
ஐ.எஃப்.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஐ.எஃப்.எஸ்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுப் பிரிவு அதிகாரிகள், ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்து விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து, செபி போன்ற மத்திய அரசு அமைப்பு களையும், தமிழக அரசையும் உள்துறை அமைச்சகம் கேள்வி கேட்கக்கூடும் எனத் தெரிகிறது.

போலீஸார் பணம் போட்டதுதான் காரணமா?

சுமார் ரூ.50,000 கோடியுடன் தலைமறைவாகி இருக்கும் ஐ.எஃப்.எஸ் ஃபிராடு பிரதர்ஸ் தப்பித்து ஓடும் வரை பொறுமையாக இருந்து விட்டு, தற்சமயம் `தேடுகிறோம்’ என்ற பெயரில் `பாவலா’ காட்டிக்கொண்டிருக்கிறது தமிழக காவல்துறையின் ஓர் அங்கமான பொருளா தாரக் குற்றப்பிரிவு. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணிபுரியும் உளவுப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸார் பலரும் லட்சக் கணக்கில் ஐ.எஃப்.எஸ்ஸில் பணம் முதலீடு செய்திருப்பதால், அது குறித்த தகவல்களை மேலிடத்துக்கு `ரிப்போர்ட்டாக’ கொடுக்காமல் அவர்கள் அமைதியாக இருந்தார்களா..? வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணன் மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்னரே ஐ.எஃப்.எஸ் விவகாரத்தில் முதலீடு செய்த வேலூர் போலீஸாரை எச்சரித்திருக்கிறார். ஆனால், எஸ்.பி தரப்பிலிருந்தும் மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்படாதது ஏன் என்கிற கேள்வியை மத்திய உளவுப் பிரிவு எழுப்பத் தொடங்கியிருக்கிறது.

ஐ.எஃப்.எஸ் மோசடியில் மத்திய உளவுப் பிரிவு... புலம்பித் தவிக்கும் மக்கள்!

மாவட்ட கலெக்டர் அடக்கி வாசித்தது ஏன்?

அதேபோல, ஜூனியர் விகடன் இதழில் முதல் கட்டுரை வெளியான அன்றே வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஐ.எஃப்.எஸ் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்திருக்கிறார். அதன்பிறகு, ஆட்சியரும் மௌனமாக இருந்தது ஏன் என்பது குறித்தும், ஆருத்ரா விஷயத்தில் அதிரடியாகச் செயல்பட்ட வேலூர் மாவட்ட கலெக்டர், ஐ.எஃப்.எஸ் விஷயத்தில் அடக்கி வாசித்தது ஏன் என்கிற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள் மத்திய உளவுப் பிரிவினர். ஆருத்ரா மீது நடவடிக்கை எடுக்க ஐ.எஃப்.எஸ் தந்த மறைமுக நெருக்குதல்தான் காரணமா என்பதையும் மத்திய உளவுப் பிரிவு கேள்வி எழுப்புகிறது.

ஆளும் தரப்பு தந்த நெருக்கடி

ஆளும் தரப்பிலிருப்பவர்களின் தலையீட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகார மட்டத்திலிருப்பவர்கள் அனைவரும் வாயைமூடி மௌனமாகிவிட்டனர். பின்னர், உயர் நீதிமன்றம் தலையிட்டதன் பேரில் பொருளாதாரக் குற்றப் பிரிவு, பெயருக்கு சோதனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸுக்கு உதவியதாகக் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் காத்திருப்போர் பட்டியலுக்குத் தூக்கியடிக்கப்பட்டார். சில தினங்களிலேயே, வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயாவும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸைத் தப்பிக்க வைக்க ஆனிவிஜயா சுமார் ரூ.2.5 கோடி மாமூல் பெற்றதாக யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது, ஆளும் தரப்பினரின் ஆதரவு இருந்த காரணத்தால்தான் லட்சுமி நாராயணன் பிரதர்ஸ் தமிழகத்தை விட்டு தப்பியிருக்கிறார்கள். இந்த பிரதர்ஸ் எப்படித் தப்பித்தார்கள், இவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார் என்கிற கோணத்திலும் மத்திய உளவுப் பிரிவு விசாரிக்கிறது. அதேபோல, ஐ.எஃப்.எஸ் சகோதரர்களால் தொடங்கப்பட்ட `மார்க்’ என்ற மற்றொரு மோசடி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் பல வி.ஐ.பி-க்கள் கலந்துகொண்டது எப்படி, இந்த அமைப்பின் மூலம் எத்தனை கோடி ரூபாய் திரட்டப்பட்டது, ‘மார்க்’ மூலம் வெளிநாடுகளுக்குப் பணம் கொண்டு செல்லப்பட்டதா என்கிற கோணத்திலும் மத்திய உளவுப் பிரிவு விசாரிக்கிறது.

செபி நடவடிக்கை எடுக்கத் தவறியது ஏன்?

சென்னையிலிருக்கும் `செபி’, முன்கூட்டியே விசாரணை வளையத்துக்குள் ஐ.எஃப்.எஸ் சகோதரர்களைக் கொண்டுவந்து நடவடிக்கை எடுத்திருந்தால், அவர்கள் தப்பியிருக்க மாட்டார்கள். செபியும் கவனக்குறைவாக இருந்திருக்கிறது. தேசிய ஊடகங்களில் ஐ.எஃப்.எஸ் மோசடி குறித்த செய்தி வெளியான பிறகாவது, மும்பையிலிருக்கும் செபி தலைமையகம் இதுபற்றி சென்னை அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அப்படிக் கேட்காமல் இருந்ததன் காரணம் என்ன என்பது குறித்து மத்திய உளவுப் பிரிவு கேட்கிறது.

ஏஜென்டுகளை வளைக்கும் இ.ஓ.டபிள்யூ...

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் தங்கள் புகார்களை பொருளாதாரக் குற்றப் பிரிவில் அளிக்கலாம் என்று சொல்லி, அதற்கான விண்ணப்பத்தையும் வெளி யிட்டிருக்கிறது. இந்த விண்ணப்பத்தில் மொத்தம் 14 விஷயங் கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த 14 விஷயங்களில் ஒரு முக்கியமான விஷயம், நீங்கள் எந்த ஏஜென்ட் மூலம் பணம் கட்டினீர்கள் என்பது. இந்த விஷயத்தை மக்களிடம் இருந்து வாங்கிய பின்பு, அதிகம் புகார் வரும் ஏஜென்டை வளைக்கும் முடிவை பொருளாதாரக் குற்றப் பிரிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பயந்தே பல ஏஜென்டுகள், புகார் தர வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்களாம். பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிய ஐ.எஃப்.எஸ் பிரதர்ஸ் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தேடுவதை விட்டுவிட்டு, எங்களை வளைத்து என்ன செய்யப்போகிறார்கள் என்று புலம்புகிறார்கள் ஏஜென்டுகள்.

டெலிகிராமில் கூடும் மக்கள்...

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் பணம் கட்டிய மக்களின் நிலை படுபரிதாபமாக உள்ளது. பணம் போட்டவர்களில் சில ஆயிரம் பேர் டெலிகிராம் சமூக வளைதளத்தில் தினமும் ‘சாட்’ செய்கின்றனர். ‘‘லட்சுமி நாராயணன் சுந்தரம் எங்கே இருக்கிறார், அவர் எப்போது வருவார்’’ என்று கேட்கிறார்கள் சிலர். ‘‘நாம் புலம்பிக்கொண் டிருந்தால் ஒன்றும் நடக்காது. புகார் தர வேண்டும். களத்தில் இறங்கிப் போராட வேண்டும். அப்போதுதான் அரசாங்கம் ஆக்‌ஷன் எடுக்கும். மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்யலாம்’’ என்று யோசனை சொல்கிறார்கள்.

பல ஆயிரம் கோடி ரூபாய்களை இழந்த மக்கள், இப்படியெல்லாம் பரிதாபமாக பேசிக் கொண்டிருக்க, அவர்களுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டிய தமிழக முதல்வரும், காவல் துறை அதிகாரிகளும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்களோ?!