Published:Updated:

பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம்... ஐ.எஃப்.எஸ் சொல்வது நிஜமா?

வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்

புலனாய்வு

பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம்... ஐ.எஃப்.எஸ் சொல்வது நிஜமா?

புலனாய்வு

Published:Updated:
வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்
பிரீமியம் ஸ்டோரி
வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்

நம் நாட்டில் ஒரு நிறுவனம் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம்; உரிய அனுமதிகளை அரசு அமைப்புகளிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டும்தான் ஒரே கண்டிஷன். ஆனால், ‘‘வேலூரைச் சேர்ந்த ஐ.எஃப்.எஸ் (International Finance Services) நிறுவனம், அரசு அமைப்புகளிடமிருந்து எந்த அனுமதியும் வாங்காமல் ஆண்டுக்கு 24% வருமானத்தைத் தருவதாகப் பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தந்து, பல ஆயிரம் நபர்களிடம் பல நூறு கோடியை வசூலித்து வருகிறது’’ என்கிற புகார்கள் வேலூர் சுற்றுவட்டாரத்தில் பரவத் தொடங்கி, அது நம் காதுவரை வந்து சேர, இந்த நிறுவனத்தில் அப்படி என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேலூருக்குச் சென்று விசாரித்தோம். நமக்குக் கிடைத்தத் தகவல்கள் இதோ...

வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்
வேலூர் ஐ.எஃப்.எஸ் அலுவலகம்

‘‘வேலூர், சத்துவாச்சாரி அருகேயுள்ள வள்ளலார் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் சுந்தரம். இவருக்கு ஜனார்த்தனன் மற்றும் வேத நாராயணன் என இரண்டு அண்ணன்கள். தன்னை, பங்குச் சந்தை நிபுணர் என்று சொல்லிக்கொள்ளும் தம்பி லட்சுமி நாராயணன், பங்குச் சந்தையின் போக்கு பற்றி, தான் கணிப்பவற்றை மீடியாக்களில் விளம்பரமாகக் கொடுப்பார். ‘நாணயம் விகடன்’ இதழிலும் இவருடைய விளம்பரங்கள் வந்ததுண்டு. இது பங்குச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’யின் (SEBI) விதிகளை மீறும் வகையில் இல்லை என்பதால், பிரச்னை இல்லை.

அதே சமயம், ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருகிறேன்’ என்று சொல்லி, பலரிடமும் பணம் வாங்க ஆரம்பித்தார் கள் லட்சுமி நாராயணன் சகோதரர்கள். வேலூரில் உள்ள ஹெச்.டிஎஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் வைத்திருந்த கணக்குகள் மூலம், மக்களிடமிருந்து பணம் வாங்கவும், திரும்பத் தரவும் செய்தார் லட்சுமி நாராயணன். ஒரு கட்டத்தில், சுமார் 44,000 பணப் பரிவர்த்தனைகள் நடந்த நிலையில், லட்சுமி நாராயணனை அழைத்தது ஹெச்.டி.எஃப்.சி வங்கி. ‘‘நீங்கள் என்ன செய்கிறீர்கள், இத்தனை பணப் பரிவர்த்தனைகளை ஏன் செய்கிறீர்கள், அதற்கான ஆதாரங்களைக் கொடுங்கள்’’ என்று கேட்டது. லட்சுமி நாராயணனால் ஆதாரங்களைத் தர முடியவில்லை. இதை அடுத்து, ‘‘இந்தப் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ‘சந்தேகத்துக்குரியவை’ (Suspicious Tranction Report) என ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ரிசர்வ் வங்கிக்கு ரிப்போர்ட் அனுப்பியது. இது ஒரு செய்தித்தாளில் செய்தியாக வெளியானது.

லட்சுமி நாராயணன் சகோதரர்கள்
லட்சுமி நாராயணன் சகோதரர்கள்

இதற்குப் பிறகு, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் செயல்பாடுகளை மொத்தமாக மாற்றியமைத் தார்கள் லட்சுமி நாராயணன் சகோதரர்கள். தனி நிறுவனமாக இருந்த ஐ.எஃப்.எஸ்ஸை பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாற்றினார்கள். பணத்தை நேரடியாக வாங்குவதை நிறுத்திவிட்டு, ஏஜென்ட்டுகள் மூலம் வசூலிக்க ஆரம்பித்தார்கள். மக்களிடம் வாங்கும் பணத்துக்கு பத்திரங்களை எழுதிக் கொடுக்கத் தொடங்கினார்கள். அதாவது, ‘என்னுடைய அவசர நிமித்தம் வியாபார அவசிய செலவுக்கு வேண்டி’ என்கிற வகையில் பத்திரங் களில் எழுதிக் கொடுத்துவிட்டு, பொதுமக்களிடம் இருந்து லட்சம் லட்சமாகப் பணம் வாங்கினார்கள். மக்களிடமிருந்து வாங்கிய பணத்துக்கு ‘100 ரூபாய்க்கு மாதம்தோறும் இரண்டு ரூபாய் வட்டி வழங்கப்படும்’ எனப் பத்திரங்களில் குறிப்பிடு கிறார்கள். ‘பத்திரத்தில் குறிப்பிடுவது 2% தான். ஆனால், 6% தருவோம்’ என்று வாய்மொழி வாக்குறுதி தருகின்றனர்.”

இவையெல்லாம் காட்பாடி மற்றும் வேலூர் சுற்று வட்டாரப் பகுதி மக்களிடம் பேசித் திரட்டிய தகவல்களே. இதையடுத்து, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் ஒருவரிடம் ரூ.10 லட்சத்தை டெபாசிட் செய்த காட்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பேசினோம்.

‘‘ஏழு மாசத்துக்கு முன்ன ரூ.10 லட்சம் டெபாசிட் செஞ்சேன். 5% வட்டி கணக்குப் போட்டு, மாதம் ரூ.50,000 கொடுத்தாங்க. அப்புறம் டெபாசிட் செஞ்ச ரூ.10 லட்சத்தையும் ரிட்டர்ன் வாங்கிட்டேன். இப்ப, திரும்பவும் ரூ.20 லட்சம் டெபாசிட் செஞ்சிருக்கேன். ஷேர் மார்க் கெட் இன்வெஸ்ட்மென்ட்டுனு சொல்லித்தான் பணம் வாங்கு றாங்க. ஆனா, அவங்களுக்கு நான் கடன் கொடுத்ததாகவும், அவங்க கடன் வாங்கியதாகவும் ஒரு பத்திரத்துல எழுதிக் கொடுத் துட்டுதான் வாங்கிக்கிறாங்க. எனக்குக் கொடுத்த பத்திரத்தில் யாருன்னே தெரியாத நபரோட பேரைத்தான் போட்டிருக்காங்க’’ என்றார்.

மாதம்தோறும் 5% வருமானம் எனில், ஆண்டுக்கு 60% வரு மானம். இந்த அளவுக்கான வரு மானம் எந்தத் தொழில் செய் தாலும் தர முடியாது. குறிப்பாக, ஏற்ற இறக்கம் மிகுந்த பங்குச் சந்தை மூலம் இப்படிப்பட்ட வருமானம் ஆண்டுதோறும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள் சந்தை நிபுணர்கள்.

அது மட்டுமல்ல, ‘‘கடன் வாங்குவதாக பத்திரத்தில் எழுதித் தந்தால், அது வெறுமனே கடன் சார்ந்த பிரச்னையாகப் போய்விடும். ஆனால், முதலீடு செய்வதாகச் சொல்லி எழுதித் தந்தால், செபியிடம் அனுமதி வாங்க வேண்டும். மேலும், இந்தப் பத்திரத்தை வைத்து இந்த நிறுவனத்தின்மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. காரணம், பணம் வாங்கித் தந்தவர்கள் ஏஜென்டுகள்தானே, அவர்கள்தானே பிடிபடுவார்கள் எனத் தெளிவாகத் திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏஜென்டுகளுக்கு 2% கமிஷன் தரப்படுவதால், அவர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு, பணத்தை வசூலித்துத் தள்ளுகிறார்கள். எம்.எல்.எம் முறையிலும் பணம் வசூலிக்கப்படுவதால், ஏஜென்டுகளுக்கான கமிஷன் தொகையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்று பணம் கொடுக்கும் மக்கள், நாளைக்கு தங்கள் மீது புகார் கொடுத்தால் தங்கள் நிலை என்னவாகும் என்று ஏஜென்ட்டுகள் யோசிப்பதில்லை’’ என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

பங்குச் சந்தை முதலீட்டில் ஆண்டுக்கு 24% வருமானம்... ஐ.எஃப்.எஸ் சொல்வது நிஜமா?

ஐ.எஃப்.எஸ் நிறுவனம் தொடர்பாக இதுவரை யாரும் காவல் துறையில் புகார் தரவில்லை. என்றாலும், இப்படி பணத்தை வசூலிப்பதற்கும் லட்சுமி நாராயணன் சகோதரர்களுக்கும் தொடர்பிருக்கிறதா, ஐ.எஃப்.எஸ் நிறுவனம் என்ன செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள லட்சுமி நாராயணனின் அண்ணன் ஜனார்த்தனனுடன் தொடர்புகொண்டு, சில கேள்விகளைக் கேட்டார் நமது நிருபர் லோகேஸ்வரன். அவர் கேட்ட கேள்விகள் அனைத்தையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்ட ஜனார்த்தனன், ‘‘முகாந்திரம் இல்லாத கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஐ.எஃப்.எஸ்ஸுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அப்படியே சம்பந்தம் இருந்தாலும், ஐ.எஃப்.எஸ் என்பது பப்ளிக் லிமிடெட் கம்பெனி. என் மீதும், என் நிறுவனத்தின் மீதும் கூறப்படும் எந்தவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் உங்களிடம் பதில் சொல்ல முடியாது’’ என்றவர், கடைசி வரை நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை.

லட்சுமி நாராயணன்
லட்சுமி நாராயணன்

இதையடுத்து, ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் இணையதளத் தில் உள்ள இ-மெயில் முகவரிக்கு கேள்விகளை அனுப்பி னோம். அது சரியான மெயில் முகவரியாக இல்லை. அடுத்து, மார்க் (MARC) நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்த இ-மெயிலுக்கும் கேள்விகளை அனுப்பினோம். எந்தப் பதிலும் வரவில்லை. மாறாக, கேள்வி கேட்ட நமது நிருபர் மீது மிரட் டல் புகார் விடுக்கப்பட்டு இருக்கிறது. (பார்க்க, கீழே உள்ள பெட்டிச் செய்தி) ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மூலம் லட்சுமி நாராயணன் சகோதரர்கள் செய்யும் அனைத்துமே சட்டவிதிகளுக்கு உட்பட்டுத் தான் நடக்கிறது எனில், நம் கேள்விகளுக்கு பதில் சொல் வதில் என்ன தயக்கம்? ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக நாம் கேட்ட கேள்விகளுக்கு தக்க சான்றுகளுடன் விளக்கம் அளித்தால், அதை வெளி யிடத் தயாராக இருக்கிறோம்!

பி.ஏ.சி.எல், மதுரை எம்.ஆர்.டி.டி, திருச்சி செந்தூர் ஃபின் கார்ப், கோவை யு.டி.எஸ், நெல்லை சி.டி.எஸ், சமீபத்திய ஆருத்ரா என பல நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்துவிட்டன. அந்த வரிசை யில் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதுதான் நம் எண்ணம். எதுவுமே சட்டத்துக்குட்பட்டதாக, ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் விதிமுறைகள் மற்றும் அறிவுரைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண் டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு, காவல் துறைக்கும், அதன் பொரு ளாதாரக் குற்றப் பிரிவுக்கும் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, முதலீடு செய்யப்படும் பணம் தங்களுடையது என்பதால், மக்கள் மிக மிக உஷாராகவே இருக்க வேண்டும்!

ஜனார்த்தனன்
ஜனார்த்தனன்

சி.எஸ்.ஆர் போட்ட இன்ஸ்பெக்டர்; கேன்சல் செய்த எஸ்.பி!

ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து நமது நிருபர் லோகேஸ்வரன் ஒருபக்கம் விசாரித்துக்கொண்டிருக்க, கடந்த 21-ம் தேதியன்று, நமது நிருபரைத் தொடர்புகொண்ட காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், ‘‘ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை மிரட்டியதாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. விசாரனைக்காக நீங்கள் காட்பாடி காவல் நிலையம் வர வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். விகடன் குழும சட்டக் குழுவுடன் ஆலோசித்துவிட்டு, காட்பாடி காவல் நிலையத்துக்குச் சென்று தேவையான விவரங்களை அளிக்கும்படி நிருபரிடம் கூறியிருந்தோம்.

ஜூன் 24-ம் தேதி மாலை மீண்டும் போனில் அழைத்த ஆய்வாளர் ஆனந்தன், “உங்கள் மீது சி.எஸ்.ஆர் (community service register)போட்டு விட்டேன். நாளை காலையில் என்னைச் சந்திக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். மறுநாள் காலையில் காவல் நிலையத்துக்கு நம் நிருபர் சென்றபோது, ஆனந்தன் அங்கே இல்லை. தொடர்ந்து, மூன்று முறை போனில் அழைத்தபோதும் எடுக்கவில்லை. மாலை 6 மணியளவில் மீண்டும் போன் செய்தபோது, “இன்று பிஸியாக இருந்துவிட்டேன். பிறகு அழைக்கிறேன்’’ என்று கூறியுள்ளார் ஆனந்தன்.

இந்த நிலையில், 26-ம் தேதி காலை வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஷ்கண்ணன் தரப்பி லிருந்து நம் நிருபரைத் தொடர்புகொண்ட தனிப்பிரிவு போலீஸார் (ஸ்பெஷல் பிராஞ்ச்), “விகடன் மீதும், உங்கள் மீதும் வந்த புகார் தொடர்பாக இதுவரை எஸ்.பி-யின் கவனத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை. அதைக் கேள்விப்பட்டு, ஆய்வாளர் ஆனந்தனை அழைத்து விசாரித் திருக்கிறார் எஸ்.பி. ‘இன்னமும் சி.எஸ்.ஆர் போடவில்லை’ என்று எஸ்.பி-யிடம் ஆனந்தன் கூறியிருக்கிறார்’’ என்று கூறியுள்ளனர். இந்த நிலையில், ஐ.எஃப்.எஸ் தரப்பிலிருந்து, சி.எஸ்.ஆர் காப்பி ஒன்று வெளியில் பகிரப்பட, அது நம் கைகளுக்கும் வந்து சேர்ந்தது. இதையடுத்து, வேலூர் எஸ்.பி தரப்பில் விசாரித்தபோது, ‘சி.எஸ்.ஆர் போட்டது உண்மைதான். அதை கேன்சல் செய்யச் சொல்லி எஸ்.பி உத்தரவிட்டுவிட்டார்’ என்று சொன்னார்கள். காட்பாடி டி.எஸ்.பி-யான பழனி, நம் நிருபரைத் தொடர்புகொண்டு அதை உறுதிப்படுத்தியுள்ளார்.

காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “இந்த விவகாரத்தில், ஆய்வாளர் ஆனந்தன் தனிப்பட்ட முறையில் சி.எஸ்.ஆர் போடாமலேயே ஏதோ ஆதாயம் தேடப்பார்த்திருக்கிறார். ஆய்வாளர் ஆனந்தன், லாட்ஜ் நடத்துவது உள்ளிட்ட வேறு சில தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார். ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் ரூ.3 கோடி வரை முதலீடும் செய்திருக்கிறார். அதனால் தான் நிருபரை மிரட்டப் பார்த்திருக்கிறார்’’ என்றார்கள். லட்சுமி நாராயணன் சகோதரர்கள் செய்யும் அனைத்துமே சட்டவிதிகளுக்கு உட்பட்டுத்தான் நடக்கிறது எனில், நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், கேள்விகளை எழுப்பிய நிருபர் மீதே புகார் தந்திருக்கிறார் ஜனார்த்தனன். இது, தன்னைப் பற்றி யாரும் எதுவும் கேட்கக் கூடாது என்று மிரட்டும் செயலன்றி வேறில்லை!