Published:Updated:

ஆயிரம் முதல் லட்சம் வரை..!

வி.கே.டி.பாலன்
பிரீமியம் ஸ்டோரி
வி.கே.டி.பாலன்

பண அனுபவம்

ஆயிரம் முதல் லட்சம் வரை..!

பண அனுபவம்

Published:Updated:
வி.கே.டி.பாலன்
பிரீமியம் ஸ்டோரி
வி.கே.டி.பாலன்

சமூக உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன் நான். என் சொந்த ஊர் திருச்செந்தூர். அம்மா, அப்பா ரெண்டு பேரும் சலவைத் தொழிலாளி. சின்ன வயசிலேயே நிறைய அவமானங்களைச் சந்திச்சுருக்கேன்” - உணர்ச்சி பொங்க பேச ஆரம்பிக்கிறார் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் வி.கே.டி.பாலன்.

“அப்பா இறந்ததுக்குப் பிறகு, நான் சென்னைக்கு வந்து அமெரிக்கத் தூதரகம் முன்பு தெரியாத்தனமாகப் படுக்க, அதுவே வருமானம் தரும் வாய்ப்பாக அமைஞ்சதையும், அதன்பிறகு நான் ஒரு டிராவல் ஏஜென்டாக மாறி பணம் சம்பாதிக்கத் தொடங்கியதையும், இலங்கை செல்லும் வியாபாரிகளுக்கான டிக்கெட்டை பாம்பன் ரயில் பாலத்தில் நடந்து போய் தந்ததால ஆயிரம் ரூபாய் கிடைத்ததையும் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.

இப்படி நான் பணம் சம்பாதிக்கத் தொடங்கிய பிறகு, ஒரு குடும்பம் இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால திருமணம் செஞ்சுகிட்டேன். என் திருமணத் துக்கு எக்மோரில் எனக்கு பழக்கமான ஆட்டோக்காரரில் இருந்து, ரிக்‌ஷாக்காரர்கள் வரை ஆயிரம் பேரை அழைச்சு இருந்தேன். அவர்களுக்கெல்லாம் வயிறு நிறைய சாப்பாடு போட்டதைத் தவிர, என்னுடைய கல்யாணத்தில் எந்த ஆடம்பரச் செலவும் நான் பண்ணல. திருமணம் முடிஞ்சுதான் என் அம்மாவைப் பார்க்கப் போனேன். நான் உசுரோட இருக்கேனானுகூட தெரியாத என் அம்மா என்னைப் பார்த்ததும் திக்குமுக்காடிப் போயிட்டாங்க. அம்மாவை சென்னைக்கு கூட்டிட்டு வந்து பாய் விரிச்சு சாப்பாடு போட்டதை இப்பக்கூட மறக்க முடியல.

வி.கே.டி.பாலன்
வி.கே.டி.பாலன்

அடிக்கடி டிராவல் ஏஜென்சிகள் கூடவே சில ஆண்டுகள் பயணம் செஞ்சதால, அந்தத் தொழிலில இருக்கிற நெளிவுசுளிவுகளைக் கத்துக்கிட்டேன். அதன்பிறகு, எனக்குனு ஒரு ஆபீஸ் தொடங்கணும்னு ஆசை வந்துச்சு. பத்துக்கு பத்து அளவில் சென்னையில் மண்ணடியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, ‘மதுரா டிராவல்ஸ்’ என்ற என்னுடைய சொந்த பிசினஸை ஆரம்பிச்சேன். அப்ப இன்னும் வேகமா ஓட வேண்டிய நேரம். ஆனா, எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம். அதைப் பார்த்து, ஒரு பக்கம் கோபம், இன்னொரு பக்கம் வருத்தம். அந்த நஷ்டத்துல இருந்து மீண்டு வர ஒரு வருஷமாச்சு.

இப்ப எல்லாரும் ஈஸியா வெளிநாட்டுக்குப் போய் வர்றாங்க. ஆனா, 25 வருஷத்துக்கு முன்னால அது பெரிய விஷயம். வெளிநாடு களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு தமிழ்க் கலைஞர்களின் பயணத்தை ஏற்பாடு செய்ய ஆரம்பிச்சேன். முதல்முதலா சீர்காழி கோவிந்தராஜனை வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சேன். அடுத்து, இளையராஜா தொடங்கி நடிகர் சிவகுமார் வரை நிறைய ஆர்ட்டிஸ்ட்கள், வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு என்னைக் கேட்க ஆரம்பிச்சாங்க. இதனால என் வருமானம் லட்சங்களா மாறிடுச்சு.

ஒருமுறை சில்க் ஸ்மிதாவை வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்காக அணுகியிருந்தோம். அவர் நேரில் வரச் சொல்லியிருந்தார். நிகழ்ச்சிக்கு பேசி ஒப்புதல் வாங்கிய பிறகு 8,000 ரூபாயை ஒரு கவரில் போட்டு சில்க் ஸ்மிதாவின் கையில் கொடுத்து, ‘எண்ணிப் பார்த்துக்கோங்கம்மா’னு சொன்னேன். ‘அட போ நைனா, மனுஷங்க மேல நம்பிக்கை வேணும்’னு சொல்லி, அப்படியே உள்ள வச்சுட்டாங்க. கலை நிகழ்ச்சிக்காக அவங்க வெளிநாடு போயிட்டு வந்ததும் மீண்டும் அவங்களைப் பார்க்கப் போனேன். நான் கொடுத்த பணத்தை கவரைக்கூடப் பிரிக்காமல், அப்படியே என் கையில் கொண்டு வந்து கொடுத்தாங்க. ‘ஏம்மா...’ன்னு கேட்டேன். ‘நான் வெளி நாட்டுக்குப் போயி, சுத்திப் பார்த்து சந்தோஷமா இருந்தேன். அதுவே எனக்குப் போதும் நைனா, இந்த காசை நீயே வெச்சுக்கோ’னு சொன்னாங்க. ‘இது உங்க உழைப்புக்கு கிடைக்க வேண்டிய காசு’னு ரொம்பத் தீர்க்கமாக மறுத்து அந்தப் பணத்தை அவங்ககிட்ட கொடுத்துட்டு வந்தேன்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் என் நிலை உயர்ந்துச்சு. இப்போ தமிழக சுற்றுலாப் பயணம் மற்றும் விருந்தோம்பல் சங்கத் தலைவராக இருக்கேன். இத்தனை வருஷ அனுபவத்தில் நான் கத்துக்கிட்ட அனுபவங்கள் ரெண்டு. முதலாவது, பணம் சம்பாதிக்க அடுத்தவர்களை ஏமாத்தவோ, கீழே தள்ளிவிடவோ கூடாது. நாம் சம்பாதிக்கும் பணம் என்பது நம்முடைய அடையாளம். நம் தலைமுறைக்கான சேமிப்பு. என் அப்பா, பணத்தை நேர்மையாகத்தான் சம்பாதித்தார் எனக் குழந்தைகள் சொல்லுமளவுக்கு வாழ வேண்டும். இரண்டாவது, சொந்தபந்தம், நண்பர்கள் உட்பட யாரிடமும் கடன் வாங்கா தீர்கள். இவை இரண்டையும் கடைப்பிடித்தாலே நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்.

என் தொழிலில் நான் தவறு செய்தால், அதை நஷ்டம் பார்க்காமல் பொறுப்பேற்பேன். பிரான்ஸில் ஒரு கலை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்தேன். மனோரமா, பாரதிராஜா என நிறைய பிரபலங்கள் அந்தக் குழுவில் இருந்தார்கள். அவங்க போகிற விமானம் ஜெர்மன் வழியாகப் போறதால, ஜெர்மனுக்கும் விசா எடுக்கணும்னு எனக்குத் தெரியாது. ஜெர்மன் விசா இல்லாததால் அவங்களை அந்த விமானத்துல அனுமதிக்கல. அது என்னுடைய கவனக்குறைவுதான். அதனால் நானே நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்து அவர்களுக்கு அடுத்த விமானத்தில் டிக்கெட் போட்டுத் தந்தேன். அதனால எனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம். இந்தத் தொகை அப்ப எனக்கு ரொம்ப பெரிசுதான். தொழில்ல பணம் சம்பாதிப் பதைவிட, பேர் முக்கியம்ங்கிறதுக்காக அதைச் செஞ்சேன். அந்தக் கலை நிகழ்ச்சி நல்லபடியா நடந்து முடிஞ்சதால, நிகழ்ச்சி நடத்தினவரே எனக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்.

இன்னைக்கு என் வருமானம் கோடிகளாக மாறியிருக்கு. நான் யாரைப் பார்த்தாலும் கேட்கும் முதல் கேள்வி, ‘சாப்பிட்டீங்களா..?’ என்பதுதான். யாராவது என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டாங்களானு ஏங்கிய நாள்கள் உண்டு. என்கிட்ட நிறைய பேர் வேலை கேட்டு வருவாங்க. ‘எதுக்காக வேலை கேட்டு வந்தீங்க..?’னு முதலில் கேட்பேன். குடும்பம், சாப்பாடுனு காரணம் சொல்றவங்களுக்கு என் நிறுவனத்தில் இடம் கிடையாது. ‘நான் முதலாளி ஆகணும்’னு பதிலைச் சொல்றவங்களைத்தான் நான் வேலைக்கு எடுத்துப்பேன். அப்பதான் அந்த நபர் தனக்காக உழைக்க ஆரம்பிப்பான்; அவன் வளரும்போது என் நிறுவனமும் வளரும்.

நான் பரம ஏழையா இருந்து இன்னைக்கு ஓரளவு பணம் சம்பாதிச்சுருக்கிறேன். ‘பணம் சம்பாதிக்க வழி என்ன..?’னு என்கிட்ட நிறைய பேர் கேட்பாங்க. அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். ஏன்னா கடவுள் நம்ம எல்லார் கிட்டயும் தனித்தனி வினாத்தாள்களைக் கொடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கார். நான் எழுத வேண்டிய பதிலை நீங்க எழுதினா உங்களுக்குத் தோல்விதான் மிஞ்சும்.

பணம் சம்பாதிக்கிறது, பிசினஸில் ஜெயிக்கிறதுல ஒருத்தரை ரோல்மாடலா எடுத்துக்கொள்ளலாம் தவறில்லை; ஆனா, அவரோட பாதையிலேயே பயணிக்காதீங்க. இந்தக் கொள்கையை நான் தீவிரமா நம்புறேன். அதனாலதான் என்கிட்ட வேலை பார்த்தவங்க புதுசா ஒரு டிராவல்ஸ் தொடங்கும்போது எனக்கு எந்த வருத்தமும் இருந்ததில்ல. நானே அவங்களுக்கு ஊக்கம் தான் கொடுப்பேன். கடந்த 30 வருஷத்தில் என் தலைமுறையும் தலைவிதியும் எவ்வளவோ மாறிருச்சு. ஆனா, நான் இன்னும் மாறல. இப்பவும் ரோட்டுக் கடையில்தான் சாப்பிடுவேன். எந்த நாட்டுக்குப் போனாலும் கதர் வேட்டி சட்டையும், ரப்பர் செருப்பும்தான் என்னுடைய அடையாளம். என்கிட்ட மொத்தம் இருப்பதே பத்து செட் ஆடைகள்தான். தரையில்தான் படுத்துத் தூங்குறேன். இன்னைக்கும் நான் படுத்துக்கிடந்த பிளாட் ஃபார்மை நான் மறக்கல.

சம்பாதிச்ச பணத்தைச் செலவு பண்ணலாம். தப்பு இல்லை. ஆனா, ஆடம்பரம் வேண்டாம். ஆடம்பரமாக வாழ ஆரம்பிச்சா உழைப்புக்கு மரியாதை இல்லாம போயிரும். வாழ்க்கையில் ஒரு ரூபாய் சம்பாதிக்கிறதுதான் ரொம்ப கஷ்டம். அதைச் சம்பாதிக்கிறதுக்கான வழியைக் கண்டு பிடிச்சு அதில் பயணம் செய்ய ஆரம்பிச்சுட்டா நிச்சயம் வெற்றி தான்.

எந்த பிசினஸா இருந்தாலும் சரி, 100 சதவிகித உழைப்பைக் கொடுங்க. மற்ற மாற்றங்கள் தானாக நிகழும்” என்கிற பன்ச் லைனுடன் நமக்கு விடை தந்தார் வி.கே.டி.பாலன்.