Published:Updated:

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மீள என்ன வழி? - தேவை, போர்க்கால உதவி!

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

குமார் துரைசாமி, ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர், திருப்பூர்

இந்தியா, தனது ஊரடங்கை படிப்படியாகத் தளர்த்திவருகிறது. தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. சிறு நிறுவனங்கள், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், இந்தியச் சமூகத்தில் நிலவிவரும் வேலை இழப்புகளையும் அவற்றிலிருந்து எப்படி மீள்வது குறித்தும் பார்க்கலாம்.

ஊரடங்குக்குப் பிறகு இந்தியாவில் நான்கில் ஒருவர் வேலையை இழந்துள்ளார் என்கிறது சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியன் எக்னாமிக் (CMIE). அது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் 11.4 கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். தமிழகத்தில் 49.8%, ஜார்கண்ட்டில் 47.1%, பீகாரில் 46.6% வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒன்பது கோடி சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் தொழிலை இழந்துள்ளார்கள். 1.8 கோடி சிறு தொழில்முனைவோர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளார்கள். 1.7 கோடி மாதச் சம்பளதாரர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

ஊரடங்கு படிப்படியாகத் தளர்வு செய்யப்பட்டு, முற்றிலும் விலக்கிக்கொள்ளும் காலகட்டத்தில், இந்த நிலையில் மாற்றம் வருமா என்றால் நிச்சயம் சாத்தியமில்லை. ஏனெனில், மேலே குறிப்பிட்ட வேலை இழப்புகள் பெருவாரியாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிலேயே நடந்துள்ளன. தவிர, இந்த நிறுவனங்களின் வேலை இழப்பு கொரோனாவுக்குப் பிறகானது மட்டுமல்ல...கடந்த மூன்று வருடங்களாக உள்ள தேக்கநிலையின் நீட்சியே. விவசாயத்துக்கு அடுத்தபடியாக பெரும் வேலைவாய்ப்புகளைத் தர இந்த நிறுவனங்களால் மட்டுமே இயலும். உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக சீனா உயர்ந்து நிற்பதற்குக் காரணமும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களே!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உதாரணத்துக்கு, நான் சார்ந்த ஆயத்த ஆடை தொழிலையே எடுத்துக்கொள்வோம். உலகளாவிய தேவைகளுக்கு இந்தியா 3.8 சதவிகிதம் ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது. இதுவே சீனா 45 சதவிகிதம் பூர்த்திசெய்கிறது. அந்த நாடு தனது நாட்டில் மட்டுமல்லாது வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் சில ஆப்பிரிக்கா நாடுகளில் முதலீடு செய்து இந்த நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையை நாம் அடைய முடியுமா என்றால் இயலும். எப்படி?

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்

இழப்புகள் இழப்புகள்தான். ஆனால், அப்படியே முடங்கிவிட வேண்டியதில்லை. கெட்டதிலும் நல்லவை நடக்குமல்லவா... கொரோனா தொற்று, புவிசார் பொருளாதார அரசியலில் பெரும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. பல நாடுகள் சீனாவை மட்டுமே நம்ப வேண்டாம் என்பதை இப்போது உணர்ந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே 300 நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறியுள்ளன. இந்தியா, அந்த வாய்ப்புகளை தனதாக்கிக்கொள்ள வேண்டிய அருமையான தருணம் இது.

இந்தச் சூழலில் அரசு போர்க்கால அடிப்படையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு எளிய நடைமுறைகளை வகுத்து வரிவிதிப்பில் சலுகைகள், தாராளமான கடனுதவி அளிக்க வேண்டும். பொருளாதாரம், நிதி, தொழில்துறை உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்ற குழுவை அரசியல் வேறுபாடுகள் கடந்து நியமிக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நமது பலம் மற்றும் பலவீனத்தை ஆய்வுசெய்து நிதர்சனங்களை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப பொருளாதார மீட்புத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

ஒரு சிறு கணக்கு... ஆயத்த ஆடைத் துறையில் ஐந்து கோடி ரூபாய் இயந்திரம், அடிப்படைக் கட்டமைப்பு, மூலப்பொருள்கள் மற்றும் உரிய முதலீட்டுடன் தொடங்கப்படும் ஒரு நிறுவனம், குறைந்தது 425 நேரடி வேலைவாய்ப்புகளையும் 1,000 மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இப்படித் தொடங்கப்படும் ஒரு நிறுவனம், ஆண்டுக்கு 10 - 12 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி வர்த்தகம் செய்யும். அதே அளவுக்கான அந்நியச் செலாவணியை ஈட்டும்.

சமீபத்தில் 68,000 கோடி ரூபாயை ரைட் ஆஃப் செய்தது மத்திய அரசு. இந்த அளவு தொகை ஆயத்த ஆடை நிறுவனங்களுக்குக் கிடைத்திருந்தால், 13,000 தொழில் நிறுவனங்கள் உருவாகியிருக்கும். நேரடியாக 80 லட்சம் பேருக்கும் மறைமுகமாக இரண்டு கோடி பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். இரண்டு லட்சம் கோடி வர்த்தகம் உறுதிப்படுத்தப்படும். நீட்சியாக 13,000 நிறுவனங்களுக்கான சார்பு பொருளாதாரமாக தேநீர் கடைகள், உணவகங்கள், மளிகைக்கடை தொடங்கி மொபைல் கடை வரை பெரும் தொழிற்சங்கிலி உருவாகும். பணச்சுழற்சி பெருகும். அது, அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க செய்யும். ஒருவேளை மேற்குறிப்பிட்டவற்றில் ஐந்து சதவிகித நிறுவனங்கள் தோல்வியுற்றாலும் இரண்டு லட்சம் வேலை இழப்புகள் மற்றும் 3,500 கோடி ரூபாய் என்ற அளவில் மட்டுமே இழப்பு ஏற்படும்.

அடர்த்தியான மக்கள்தொகையைக்கொண்ட நமது தேசத்துக்கு, குறைந்த ஆட்களுடன் அதிக வருவாய் ஈட்டுவது பொருளாதார வளர்ச்சி அல்ல; அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார தன்னிறைவை அடைவதே உண்மையான பொருளாதார வளர்ச்சி. சமூகத்தில் அனைத்துத் தரப்பினரும் கண்ணியமான வாழ்க்கையை முன்னெடுக்க, இதுபோன்ற முயற்சிகளே வித்திடும்!