பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வாஜிர்எக்ஸ் மீது நடவடிக்கை... கிரிப்டோ முதலீட்டாளர்கள் உஷார்!

 கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி

கடந்த ஓராண்டுக் காலமாக மிகப் பெரிய அளவில் விலை இறக்கம் கண்டு, முதலீட்டாளர்களை வெறுப்படையச் செய்துள்ளது கிரிப்டோகரன்சி முதலீடு. இந்தப் பிரச்னை போதாது என்று இப்போது இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் வந்துசேர்ந்திருக் கிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை நிகழ்த்தும் முன்னணி நிறுவனமான வாஜிர் எக்ஸின் (Wazirx) முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான சமீர் மாத்ரேயின் வங்கிக் கணக்குகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டதுதான் அந்த அதிர்ச்சி செய்தி.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

அமலாக்கத் துறையின் நெருப்புப் பார்வை ஒரு கிரிப்டோ எக்ஸ்சேஞ்சின் மீது பதிவது இதுவே முதன்முறை. என்ன நடந்தது வாஜிர் எக்ஸ் நிறுவனத்தில்..? இந்த விவகாரத்தின் மூன்று பரிமாணங்களைப் பார்ப்போம்.

விவகாரம் 1

சில இந்திய என்.பி.எஃப்.சி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்கியோர் குறித்த தனிப்பட்ட தகவல்களைத் தெரிந்துகொண்டு, டெலிகாலர்கள் மூலம் அவர்களை மிரட்டி அதிக வட்டி வசூலித்தன. கடன் கொடுப்பதிலும் வசூலிப்பதிலும் இந்த ஃபின்டெக் நிறுவனங்கள் அத்துமீறல்களைக் கைக்கொள்வதை அறிந்த அமலாக்கத்துறை அவற்றை விசாரிக்கப் புகுந்துள்ளது.

இந்த நிறுவனங்களின் பின்னணியில் சீன நிறுவனங்களின் பணம் இருந்தது தெரிய வந்துள்ளது. கடன் தரும் தொழிலுக்கு லைசென்ஸ் கேட்டு வந்த சீன நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி அதைத் தர மறுத்ததால் ஏற்கெனவே லைசென்ஸ் வைத்திருக்கும் சில செயலற்ற என்.பி.எஃப்.சி நிறுவனங்களுடன் கைகோத்து இன்ஸ்டன்ட் கடன் ஆப்களை அறிமுகம் செய்துள்ளன.

வாஜிர்எக்ஸ் மீது நடவடிக்கை...
கிரிப்டோ முதலீட்டாளர்கள்  உஷார்!

இந்தப் பின்னணி தெரியாமல் வலையில் விழுந்த அப்பாவிகள் ஏராளம். கடன் வாங்கி திரும்ப கட்ட முடியாமல் தவிக்கும் கடனாளி களை மிரட்டி அதிக வட்டி வசூலித்துள்ள 16 ஃபின்டெக் நிறுவனங்கள், தாங்கள் சம்பாதித்த கொழுத்த லாபத்தை கிரிப்டோகரன்சியாக மாற்றி வெளிநாடுகளில் உள்ள வெவ்வேறு அக்கவுன்டுகளுக்கு அனுப்பி பணச் சலவையில் ஈடுபட்டு வந்தன. அமலாக்கத் துறையின் வருகையை உணர்ந்தவுடன் இவை கடையை மூடி நடையைக் கட்டிவிட்டன.

இந்த கம்பெனிகளையும், அவற்றின் சலவை செய்யப்பட்ட சொத்துகளையும், அவை சென்ற டைந்த அக்கவுன்டுகளையும் இன்று கண்டு பிடிக்கவே முடியாத அளவுக்கு காற்றில் கரைந்து மாயமாகிவிட்டன. இதற்கு உடந்தையாக இருந்த கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சுகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத் துறை. அதில் ரூ.2,790 கோடிகள் பரிவர்த்தனை செய்து முக்கிய மான இடம்பிடித்திருக்கிறது வாஜிர்எக்ஸ். இதனால், அது ஃபெமா (FEMA - Foreign Exchange Management Act), பி.எம்.எல்.ஏ (PMLA -Prevention of Money Laundering Act) போன்ற இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, அரசு நிறுவனங் களின் கிடுக்கிப்பிடியில் அகப்பட்டு விழித்துக் கொண்டிருக்கிறது.

வாஜிர்எக்ஸின் டைரக்டர் சமீர் மாத்ரேக்கு இந்த 16 ஃபின்டெக் கம்பெனிகளின் விவரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தாலும், அமலாக்கத் துறையுடன் ஒத்துழைக்க மறுக் கிறார். கே.ஒய்.சி நியமனங்களை சரிவரக் கடைப்பிடிக்காததால் வாஜிர்எக்ஸிடம் வெளிநாட்டு அக்கவுன்டுகளின் விவரங்கள் இல்லை. மேலும், பிளாக் செயின் டெக்னாலஜியில் பரிவர்த்தனை களை சரிவரப் பதிவு செய்யவும் இல்லை.

விவகாரம் 2

கறுப்புப் பணத்தை சலவை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் சன்மை லேப் பிரைவேட் லிமிடெட்தான் வாஜிர்எக்ஸ் நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் என இப்போது தகவல் வெளி வந்துள்ளது. வாஜிர்எக்ஸின் பரிவர்த்தனைகளை நடத்துவது பினான்ஸ் (Binance) நிறுவனமா அல்லது சன்மை லேப் நிறுவனமா என்பதில் இன்னும்கூட தெளிவு இல்லை. இவை எதையும் விளக் கவோ, சரிசெய்யவோ வாஜிர் எக்ஸ் தயாராகவும் இல்லை.

இதுவரை இந்தத் தகவலைப் பூசி மெழுக, அமெரிக்காவின் க்ரவுட்ஃபயர், சிங்கப்பூரின் செட்டாய், கேமேன் தீவுகளைச் சேர்ந்த பினான்ஸ் போன்ற நிறுவனங்களுடன் சன்மை லேப் பலவித ஒப்பந்தங்கள் போட்டுள்ளது.

இந்த சன்மை லேப் நிறுவனம், தப்பி ஓடிய 16 ஃபின்டெக் நிறுவனங்களுக்கும் கிரிப்டோ வழியாக பணச் சலவை செய்ய உதவியிருப்பதும் இப்போது தெரிய வந்துள்ளது. சலவை செய்யப்பட்ட பணம் தீவிர வாதம் போன்ற பெரிய குற்றங் களின் வாயிலாகப் பெறப்பட் டிருப்பது தெரிந்தும் சன்மை லேப் நிறுவனம் அது பற்றிய தகவல்களை அரசுக்கு அளிக்கத் தவறியுள்ளது.

வாஜிர்எக்ஸ் மீது நடவடிக்கை...
கிரிப்டோ முதலீட்டாளர்கள்  உஷார்!

விவகாரம் 3

வாஜிர்எக்ஸ் நிறுவனம் ப்ளாக் செயின் டெக்னாலஜியை உபயோ கிக்காமலே பல பரிவர்த்தனை களைச் செய்துள்ளது. மேலும், ஜூலை 2020-க்கு முன்பு வரை தங்களுக்கு கிரிப்டோ வாங்கு வதற்காக பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்கள், கிரிப்டோ வாங்கியவர்களின் முகவரி குறித்த விவரங்கள், அவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது போன்ற குறிப்புகள் – இவை எதுவுமே தனக்குத் தெரியாது என்று வாஜிர்எக்ஸ் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

வாஜிர்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இரண்டே பேர் கொண்டது; ஒரு பெரிய கட்டடத்தில் இரண்டே பேருக்குத் தேவையான இடத்தை மட்டுமே வாடகைக்கு எடுத்து, அதைத் தன் தலைமை அலுவலகமாக அறிவித்து, அதன் மற்ற ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்வதாகக் கூறுகிறது.

‘வாஜிர்எக்ஸ் ஓர் இந்திய நிறுவனமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதன் கிரிப்டோ பரிவர்த்தனைகளை நடத்துவது கேமென் தீவைச் சார்ந்த பினான்ஸ் என்ற நிறுவனமே’ என்று ட்விட்டரில் கூறியுள்ளார் வாஜிர் எக்ஸின் உரிமையாளர் நிஸ்சல் ஷெட்டி. ‘வீடு என்னோடதுதான். ஆனா, சாவி அவர்கிட்டதான் இருக்கு’ என்று சொல்கிற கதையாக இருக்கிறது அவரின் பேச்சு.

இவரும் பினான்ஸின் நிறுவனர் செங் பெங் சாவோவும் ட்விட்டர் போரில் இறங்கியுள்ள நிலையில், வாஜிர்எக்ஸ் வாலெட்டுகளைத் தங்களால் முடக்க முடியும் என்றும், பயனாளர்கள் பாதிக்கப்படுவதை விரும்பாததால் அதைச் செய்ய வில்லை என்றும் செங் பெங் மிரட்டல் விடுத்துள்ளார்.

வாஜிர்எக்ஸ் முதலீட்டாளர்களின் கதி என்ன?

இவை அத்தனைக்கும் நடுவே கிரிப்டோவை ஒரு எதிர்கால கரன்சி என்றும், தங்கத்துக்கு மாற்று என்றும் கருதி, வாஜிர்எக்ஸ் மூலம் அதை வாங்கிய முதலீட்டாளர் களின் கதி என்ன?

“வாஜிர் எக்ஸிடம் இருக்கும் கிரிப்டோக்களும், ரூபாயும் பத்திரமாகவே உள்ளன; பரிவர்த்தனைகள்கூட நடந்த வண்ணம் உள்ளன; ரூ.64 கோடி முடக்கப்பட்டாலும் வாஜிர்எக்ஸில் வாடிக்கையாளர்களின் பணம் ரூ.250 கோடி இருப்பதால், பரிவர்த்தனை தடைப்படாது” என்று நிஸ்சல் ஷெட்டி கூறியுள்ளார்.

ஆனால், மேலும் பணம் முடக்கப்பட்டாலோ, அதிக அளவில் தொகை வெளியேறினாலோ வாஜிர்எக்ஸ் வாடிக்கையாளர்களின் கதி என்னவாகும் என்கிற கேள்விக்கு பதில் இல்லை. கிரிப்டோகரன்சி ரிஸ்க்கானது. வாஜிர்எக்ஸ் மூலம் கிரிப்டோகரன்சி வாங்குவது இன்னும் ரிஸ்க்கானது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!

அர்ஜுன் விஜய்
அர்ஜுன் விஜய்

‘‘தெரிந்தே ரிஸ்க் எடுக்க வேண்டாமே..!’’

அர்ஜுன் விஜய், துணை நிறுவனர், ஜியோட்டஸ் கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச்.

‘‘வாஜிர்எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதே குழப்பமாக இருக்கிறது. ‘நான் இல்லை, நீதான்’ என பினான்ஸ் நிறுவனமும் வாஜிர் நிறுவனமும் இப்போது சொல்லிக்கொண்டிருக்கின்றன. இப்படியொரு சந்தேகம் கிளம்பிய பிறகு, இந்த எக்ஸ்சேஞ்சை முதலீட்டாளர்கள் நம்பியிருப்பது சரியா என்று முடிவு செய்ய வேண்டும். இப்போதைக்கு இந்த எக்ஸ்சேஞ்ச் மூலம் போட்ட முதலீட்டைத் திரும்ப எடுக்க முடிகிறது. ஆனால், எத்தனை நாளைக்கு இது நடக்கும் என்று தெரியாது. எனவே, முதலீட்டாளர்கள் தெரிந்தே ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்பது குறித்து யோசித்து முடிவெடுங்கள்.’’