சந்தையிலுள்ள கம்பெனிகளை லார்ஜ் கேப், மிட்கேப், ஸ்மால் கேப் என்று கேபிட்டலைசேஷன் அடிப்படையில் வகைப்படுத்துவது பற்றி பார்த்தோம். அதில் இன்னொரு வகை அந்தக் கம்பெனி சார்ந்திருக்கும் துறைவாரியாக வகைப்படுத்துதல். இவற்றை செக்டார் ஸ்டாக்ஸ் என்பார்கள்.
செக்டார் ஸ்டாக்ஸ்
துறைவாரியாக வகைப்படுத்த முக்கியமான காரணம் அவற்றை ஆராய்ச்சிக்காக ஒப்பீடு செய்யும்போது எளிதாக இருக்கும் என்பதுதான். ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். வெவ்வெறு செக்டார்களைச் சார்ந்த இரு கம்பெனிகளை ஒப்பிட்டு எது சிறந்தது, எங்கு முதலீடு செய்யலாம் என்ற முடிவுக்கு வர இயலாது. ஏனெனில் அவை ஒவ்வொன்றுக்கும் உள்ள தனித் தன்மைகள் வெவ்வேறு. மேலும் ஒரு கால கட்டத்தில் ஒரு சில செக்டார்கள் முக்கியத்துவம் பெற்று அவை சார்ந்த கம்பெனிகள் லாபம் தரும். அவற்றை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளவும் செக்டார் சார்ந்த வகைப்படுத்துதல் உதவுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக சந்தை பதினோரு செக்டார்களாகப் பிரிக்கப்படுகின்றது. (வெவ்வேறு சந்தைகள் தங்கள் வசதி கருதி செக்டார்களைக் கூட்டுகிறார்கள்; குறைக்கிறார்கள்). பொதுவான அந்த பதினொரு செக்டார்கள்:
தகவல் தொழில்நுட்பம் (Information Technology)
சுகாதார பராமரிப்பு (Healthcare)
நிதி (Financials)
நுகர்வோர் விருப்பம் (Consumer Discretionary)
தொலைத்தொடர்பு (Communication Services)
தொழில் துறை (Industrials)
நுகர் பொருட்கள் (Consumer Staples)
ஆற்றல் (Energy)
பயன்பாடுகள் (Utilities)
ரியல் எஸ்டேட் (Real Estate)
பொருட்கள் (Materials)
இவை ஒவ்வொன்றிலும் பல உப துறைகள் உள்ளன. உதாரணமாக ஹெல்த்கேர் செக்டாரில் மருந்து உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள், ஆஸ்பத்திரிகள், ஸ்கேன் சென்டர்கள் என்று பல உப துறைகள் உள்ளன.
ஸ்திரத்தன்மை வாய்ந்த டிஃபென்சிவ் செக்டார்ஸ்
மேற்கண்ட பதினொரு செக்டார்களில் பயன்பாடுகள் மற்றும் நுகர் பொருட்கள் ஆகிய இரண்டு மட்டும் `டிஃபென்சிவ்' என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை ஸ்திரத்தன்மை வாய்ந்தவை. சந்தை சரிய நேர்ந்தால் மற்ற துறைகள் போல விழுவதில்லை. காரணம் எப்பேர்ப்பட்ட கஷ்டமான நிலையிலும் மக்கள் மின்சாரம் உபயோகிப்பதையோ (பயன்பாடுகள்), உணவு உண்பதையோ (நுகர் பொருட்கள்) நிறுத்துவதில்லை. ஆகவே முதலீட்டாளர்கள் சந்தை சரிவுகளின் போது இந்த செக்டார்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்கிறார்கள்.

ஏறும், இறங்கும் சைக்ளிகல் செக்டார்ஸ்
மற்ற ஒன்பது செக்டார்களும் சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் அதிக பாதிப்படைவதால் சைக்ளிகல் என்றழைக்கப்படுகின்றன. இவை சில சமயம் தனியாகவும், சிலசமயம் ஒன்றை ஒன்று துணை கொண்டும் செயல்படுகின்றன. உதாரணமாக ரியல் எஸ்டேட் செக்டார் தலை தூக்கினால், சிமென்ட், ஸ்டீல் போன்ற பொருட்களின் விலையும் ஏறத் துவங்குகிறது. எனர்ஜி செக்டாரின் செயல்பாடுகள் மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட இயற்கை சீற்றம், பன்னாடுகளுக்கிடையேயான உறவு, அரசியல், எண்ணெய் கசிவு போன்ற காரணங்களைச் சார்ந்திருக்கும்.
நிதித் துறை (Financials) என்னும் செக்டார், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், க்ரெடிட் கார்ட் கம்பெனிகள், மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகள் என்று பலவற்றையும் உள்ளடக்கியது. உள்கட்டமைப்பு (Infrastructure) செக்டார் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்குகிறது. பொருளாதாரத்தைத் தட்டி எழுப்பவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த செக்டார் உதவுகிறது. ஹைவே பராமரிப்பு, போக்குவரத்து போன்றவற்றை உள்ளடக்கிய இந்த செக்டாரில் பலவித முதலீடுகள் செய்யப்போவதாக பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார்.
சில செக்டார்களின் எழுச்சி/ வீழ்ச்சி உலக நடப்புகளைச் சார்ந்தது. கடந்த இருபது வருடங்களாக டிஜிடலைசேஷன் காரணமாக ஐ.டி.துறை உலகெங்கும் பெரும் எழுச்சி பெற்றுள்ளது. கொரோனா காலத்தில் ஃபார்மா செக்டார் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தன. அடுத்து எனர்ஜி துறையும், வங்கித் துறையும் மீண்டெழும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உலகச் சந்தையில் இந்தியாவின் கெமிக்கல் செக்டார் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது. இந்த செக்டாரில் இருக்கும் பெரிய கம்பெனிகள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ள முதலீட்டாளர்களின் பார்வை இந்த செக்டாரின் மீது பதிந்துள்ளது.

செக்டார் முதலீட்டின் நன்மை, தீமைகள்
செக்டார் ரீதியாக பங்குகளை ஆய்வு செய்வது எளிது. நம்மிடம் இருக்கும் ஒரு பங்கு அல்லது நாம் வாங்க விரும்பும் ஒரு பங்கு அந்த செக்டார் சார்ந்த மற்ற பங்குகளை விட நன்கு செயல்படுகிறதா என்று ஆராய இயலும். அல்லது ஒரு செக்டார் இறக்கம் காணப் போகிறது என்று தோன்றினால் அது சார்ந்த பங்குகளை விற்று வெளியேறவும் செக்டார் ரீதியான ஆய்வு கைகொடுக்கும். ஆனால் ஏற்றத்தில் இருக்கிறது என்ற காரணத்திற்காக ஒரே செக்டாரில் அத்தனை பணத்தையும் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
- அடுத்து வெள்ளி அன்று காலை 9 மணிக்கு சந்திப்போம்.