தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மற்றும் வரிச் சலுகையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி, வருமான வரி அடிப்படை உச்ச வரம்பு மாற்றமின்றி 2.5 லட்சம் ரூபாயாக தொடர்கிறது. மேலும், 80சி உள்ளிட்ட எந்த வரிச் சலுகை முதலீட்டிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த கணக்கை ஒரு முறை தாக்கல் செய்தபின்னர் அதில் தவறு இருந்தால் அதைத் திருத்துவதற்கான புதிய வழிமுறை குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் ஓர் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்
அதன்படி திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, கூடுதல் வருமானத்தை கணக்கில் காட்டி கூடுதல் வரி செலுத்த விரும்புவோருக்கு திருத்தப்பட்ட கணக்கு தாக்கல் வசதி 2 ஆண்டுகள் அவசாகம் வழங்கப்படும். இது கோவிட் பாதிப்பு மற்றும் புதிய வருமான வரி இணையத்தின் இயக்க பிரச்னை போன்றவற்றால் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி நிர்மலா சீதாராமன் கூறும் போது, ``நமது நாடு விரைவாக வளர்ந்து வருகிறது. பொதுமக்கள் பல்வேறு நிதி பரிமாற்றங்களை செய்கிறார்கள். வரி செலுத்துவோர் பரிமாற்றங்களை தெரிவிக்க வசதியாக வலுவான கட்டமைப்பை வருமான வரித் துறை உருவாக்கி இருக்கிறது.
அந்த வகையில், வருமான வரிக் கணக்குத் தாக்கலில் தவறுகள் செய்திருப்பதை வரி செலுத்துவோர் பின்னர் உணரலாம். அந்தத் தவறுகளை சரிசெய்து, கூடுதல் வரி செலுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அந்த புதுப்பிக்கப்பட்ட வருமானத்தை தொடர்புடைய மதிப்பீட்டு ஆண்டின் முடிவிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்யலாம். தற்போது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், வருமானத்தை தவற விட்டதாக வருமான வரி முறை கண்டறிந்தால் அது ஒரு நீண்ட செயல்முறையாக நீளும். ஆனால் புதிய திட்டத்தின்கீழ் வருமான வரிசெலுத்துவோர் மீது நம்பிக்கை வைக்கப்படும். இது கணக்குத் தாக்கல் செய்வோர், தாங்கள் முதலில் தவற விட்ட வருமானத்தை அறிவிக்க உதவும்” என்றார்.
நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு விதிக்கப்படும் கூடுதல் வரி (சர்சார்ஜ்) அதிகபட்சம் 37 சதவிகிதம் என்பது 15% ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கிரிப்டோ கரன்சி லாபத்துக்கான வரி குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் கூறும் போது, ``கிரிப்டோகரன்சி போன்ற மெய்நிகர் மற்றும் டிஜிட்டல் சொத்துகள் விற்பனை அல்லது பரிமாற்றத்தின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கு 30% வரி விதிக்கப்படும்.
இது மூலதன ஆதாயத்தின் கீழ்தான் கொண்டு வரப்பட்டிருக்கிறது. விற்பனை செய்யும் போது, அதன் மதிப்பில் 1 சதவிகிதம் டி.டி.எஸ் பிடிக்கப்படும். லாபத்தில் வாங்குவதற்கான செலவை மட்டும் கழித்துக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..
மேலும், கிரிப்டோகரன்சி மூலம் ஏற்படும் இழப்பை கிரிப்டோகரன்சி மூலம் கிடைக்கும் லாபத்தில்தான் ஈடுகட்ட முடியும். இதர வருமானத்தில் ஈடுகட்ட முடியாது. இதனை ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுக்கும் போது, அதனை பெறுவர் வரிக் கட்ட வேண்டும்” என்றார்.