Published:Updated:

பெரும்பணக்காரர்களுக்கு கொரோனா சிறப்பு வரி... தொழிலதிபர்கள் என்ன சொல்கிறார்கள்? #Corona

Tax ( Representational Image )

மத்திய அரசுக்கு நிதி திரட்டுவதற்காக 50 வருவாய்த்துறை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமானவையான, பெரும்பணக்காரர்களுக்கு 4% கொரோனா வரி, 40% வருமான வரி போன்றவை குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பெரும்பணக்காரர்களுக்கு கொரோனா சிறப்பு வரி... தொழிலதிபர்கள் என்ன சொல்கிறார்கள்? #Corona

மத்திய அரசுக்கு நிதி திரட்டுவதற்காக 50 வருவாய்த்துறை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமானவையான, பெரும்பணக்காரர்களுக்கு 4% கொரோனா வரி, 40% வருமான வரி போன்றவை குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

Published:Updated:
Tax ( Representational Image )

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்க, மத்திய அரசுக்கு கூடுதல் நிதி திரட்டுவதற்காக, அண்மையில் இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள் 50 பேர் இணைந்து முடிவெடுத்து, 44 பக்க அறிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு பரிந்துரைத்திருந்தனர். இந்தப் பரிந்துரைகளில் ஒன்றாக, `சூப்பர் ரிச்' பணக்காரர்களுக்கு 4% கொரோனா சிறப்பு வரி வசூலிப்பது குறித்து குறிப்பிட்டிருந்தனர். 2 மாத ஊரடங்கு சூழலில், வருமான வரி செலுத்துவது குறித்த கவலையில் இருப்பவர்களுக்கு இந்த அறிக்கை பீதியைக் கிளப்பக்கூடும் என்பதால் உடனடியாக வருமான வரித்துறை சார்பில் இப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட போவதில்லை என மறுப்பு வந்தது. இவை, தனிப்பட்ட சில அதிகாரிகளின் கோரிக்கைகள் மட்டுமே என்றும், சங்கத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும், இந்திய வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tax
Tax
Representational Image

இதையடுத்து, இப்படியோர் அறிக்கையைத் தயாரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லையென்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்தது. மேலும், இதுகுறித்து எவ்வித அனுமதியும் பெறப்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடத்தப்படுமென்றும் அறிவித்தது. அதன்படி அந்த அதிகாரிகள்மீது துறைரீதியான நடவடிக்கை பாய்ந்தது. இவ்வளவு துரிதமாக நடவடிக்கை எடுக்குமளவு அந்த 50 அதிகாரிகள் வைத்த கோரிக்கைகளில் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

- தனி நபர்களின் ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாயாக இருந்தால் அவர்களை `சூப்பர் ரிச்' பணக்காரர்களாகக் கருதி, அவர்களுக்கான வருமான வரியை, 30 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்.

- ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்குமேல் இருப்பவர்களுக்கு, ஒரேயொரு தடவை மட்டும் 4% கொரோனா சிறப்பு வரி விதிக்க வேண்டும்.

- 5 கோடி ரூபாய்க்குமேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு சொத்து வரிவிதிப்பை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

- இந்தியாவில் செயல்படக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிவிதிப்பான 2% வரியை, அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாயைவிட அதிகரிக்கும்போது 5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும்.

- 1985-ம் ஆண்டுவரை பயன்பாட்டில் இருந்த பரம்பரை வரிவிதிப்பு முறையை மீண்டும் கொண்டு வரலாம்.

Representational Image
Representational Image

கொரோனாவால் தொடர் ஊரடங்கு காரணமாக, நம் நாடே ஸ்தம்பித்து நிற்கிறது. தொழில்துறை மொத்தமும் முடக்கப்பட்டதால், சிறுகுறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் என அனைத்து வர்க்கமும் பெருத்த நிதிச் சிக்கலில் சிக்கித் தவிக்கின்றன. இவர்களுக்கு கைகொடுக்கும் நோக்குடன், வங்கிக் கடன்களுக்கு மூன்று மாதத் தவணை தள்ளிவைப்பு, வங்கிகள், வங்கிசாரா நிதிநிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. மாநில அரசும் நிதி உதவி, உணவுப் பொருள்கள் உதவி போன்ற சலுகைகளை அறிவித்தது. எனினும், தொழில்துறையில் ஏற்பட்டுள்ள பேரிழப்பிலிருந்து மீண்டுவருவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது எனப் பல்வேறு விஷயங்களில் அரசாங்கம் தீவிர கவனமெடுத்து, நிதியுதவிகள் அளிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு அரசுக்கு நிதி வசதி தேவைப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், நம் நாட்டின் நிதி நிலையை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளைப் பகிருமாறு நம் பிரதமர் அறிவித்ததால்தான் அவருக்கு உதவும்பொருட்டு இத்தகைய பரிந்துரைகளை முன்வைத்தோம் என்று 50 அதிகாரிகளின் தரப்பில் கூறப்பட்டது. நாங்கள் நிறைய நல்ல கோரிக்கைகளைக் கூறியுள்ள நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் நடவடிக்கை எதிர்பாராததாகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாகவும் தொடர்புடைய அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தைரோகேர் நிறுவனர் வேலுமணி
தைரோகேர் நிறுவனர் வேலுமணி
vikatan

மத்திய அரசுக்கு நிதி திரட்டுவதற்காக 50 வருவாய்த்துறை அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முக்கியமானவையான, பெரும்பணக்காரர்களுக்கு 4% கொரோனா வரி, 40% வருமான வரி போன்றவற்றை வரவேற்கிறீர்களா என்று தைரோகேர் நிறுவனர் வேலுமணியிடம் கேட்டோம்.

``என்னைப் பொறுத்தவரை, தட்டிப் பிடுங்குவது பாவம், தானாகக் கொடுத்தால் லாபம். ஒரு சட்டத்தை இயற்றி, நீ இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதையெல்லாம் எங்களுக்குக் கொடுத்துவிடு என்று சொல்வது ஒரு பாவம். ஏனெனில், ஒரு தொழில் செய்து, தொழிலின்மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தான் அந்தப் பணத்தைச் சம்பாதித்திருக்கிறார். அதற்குண்டான வரியை வருமான வரித்துறைக்குக் கட்டிய பிறகுதான் அவருக்கான வருமானம் கிடைக்கிறது. அந்த வருமானத்துக்கு மீண்டும் டிவிடெண்ட் வரியும் செலுத்துகிறார். ஆக, இப்படி முறையாக அனைத்து வரிகளையும் செலுத்திய பின்னர், அந்தப் பணத்தையும் பிடுங்குவதென்பது, ஒருவரைக் கொலை செய்து, அவரது சாப்பாட்டைத் திருடிச் சாப்பிடுவது போலாகிவிடும்.

நான் ஒரு பட்டிக்காட்டில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். தற்போது, கிராமத்து விளைச்சல் நிலங்களில் தக்காளி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளும் கனிகளும் அறுவடைக்கு யாருமில்லாமல் அப்படியே கிடக்கின்றன. இன்னொரு பக்கத்தில் உணவே கிடைக்காமல் திண்டாடும் மக்கள் இருக்கிறார்கள். விவசாயி, குறைந்த விலை கிடைத்தாலும் விற்கத்தயாராக இருப்பார். பசியோடிருப்பவர், குறைந்த விலைக்குக் கிடைத்தால் வாங்கத்தயாராக இருப்பார். இவர்கள் இருவருக்கும் தொடர்பு ஏற்படுத்துவது மட்டுமே தேவை. ஆனால், இதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. கொரோனாவால் ஏற்பட்ட பயத்தாலும் பீதியாலும் நம்முடைய அறிவை இழந்துவிட்டோம். பெரும் தலைவர்களும் பெரும் பீதியடைந்துள்ளார்கள். அதனால் நலிவடைந்தவர்களுக்கு தன்மானத்துடன் வாழ்வதற்கான ஒரு வழியை வகுத்துக்கொடுக்கவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இப்போதுள்ள சூழ்நிலையில் எந்தமாதிரியான சட்டத்தையும் இயற்றலாம். அப்படி இயற்றும்பட்சத்தில் நாங்கள் சரியென்றுதான் சொல்ல முடியும்.

பணம் இருப்பவர்கள், அந்தப் பணத்தை உபயோகித்து தானதர்மம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பணம் இருந்தால், ஒரு வேலையை உருவாக்கி, அதன்மூலம் பணம் அவருக்குச் சென்று சேர்வதே சரியான உதவியாக இருக்கும்.
தைரோகேர் நிறுவனர் வேலுமணி

வசதியுள்ளவர்கள் பலரும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். அரசுக்கு அது தெரியாமல்கூட இருக்கலாம். நிறைய பேர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு உணவு அளிக்கிறார்கள். நாங்களும் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்களை வழங்கியுள்ளோம். இதற்கென 50 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறோம். எங்களைப்போல பல்லாயிரக்கணக்கானவர்கள் நம் நாட்டில் உதவிகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையே, அரசாங்கம் பணத்தை வாங்கி அதை எப்படிச் செலவழிக்கிறது என்பது பெரிதும் சந்தேகத்துக்குரிய கேள்வி.

தற்போது கருத்துகளை மனம்திறந்து பேசமுடியாத நிலையில், மிகப்பெரிய அறிவாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள். பணம் இருப்பவர்கள், அந்தப் பணத்தை உபயோகித்து தானதர்மம் செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பணம் இருந்தால், ஒரு வேலையை உருவாக்கி, அதன்மூலம் பணம் அவருக்குச் சென்று சேர்வதே சரியான உதவியாக இருக்கும். சுமார் 135 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், திடீரென 80 கோடி பேர் வேலையேதும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பதுபோல தொடர்ந்து இருந்தால் எப்படிச் சமாளிக்க முடியும்? அரசாங்கம் முறையாகத் திட்டமிட்டால், சாலைகள் அமைக்கலாம், பாலங்கள் கட்டலாம், விவசாயம் செய்யலாம்... இப்படி பல்வேறு வேலைகள் செய்யலாம். கொரோனாவை எதிர்கொள்ள பணம் தேவையில்லை, மனம்தான் தேவை" என்றார்.

கொடிசியா முன்னாள் தலைவர் இளங்கோவன்
கொடிசியா முன்னாள் தலைவர் இளங்கோவன்
vikatan

``இன்றைய இந்தியாவின் உடனடித் தேவையே பொருளாதார ஊக்குவிப்புதான். சீனாவுக்குச் செல்வதாக இருந்த சர்வதேசத் தொழில்கள் பலவும் இந்தியாவுக்குத் திருப்பிவிடப்படுவதாகக் கூறுகிறார்கள். அப்படி வரும்போது முதலீடு செய்வதற்கு நிதி தேவை. இத்தகைய சூழலில், ஏற்கெனவே வரி செலுத்தியபின் இருக்கும் பணத்தையும் கூடுதல் வரிபோட்டு வாங்கிவிட்டால் தொழில் நடத்துபவர்கள் நிதிக்கு எங்கு செல்வார்கள்?" என்று கேட்கிறார் கொடிசியா முன்னாள் தலைவரும் ஆர்.எஸ்.எம் ஆட்டோ நிறுவனத்தின் நிறுவனருமான இளங்கோவன். அவர் மேலும் கூறுகையில், ``தொழிலதிபர்கள் பலரும், ஆயிரக்கணக்கான கோடிகளை பிரதமரின் நிவாரண நிதித்திட்டத்துக்கு அளித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதற்கும் மேலாக வரியை உயர்த்தி பணத்தை வசூலிக்க நினைப்பது தவறான எண்ணம். இதைப் புரிந்துகொண்டதால்தான் இந்தப் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்கவில்லை. நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதலீடுகள்தான் அவசியம். அதன்மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரித்து, வருமானத்தைப் பெருக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் வரியைக் குறைத்து 25% என்ற அளவுக்குக் கொண்டுவந்துள்ளார்கள். இதன்மூலம் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையை எடுத்துவருகிறார்கள்.

அரசாங்கம் நினைத்தால் தேவைக்கேற்ப கடன்வாங்க முடியும். அதைவிடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக வருமானமேயில்லாமல் இருப்பவர்களிடம் வரியை உயர்த்தி கூடுதல் பணத்தை வாங்க பரிந்துரைப்பது மிகவும் தவறான செயல். வரி போடுவது என்பது ஒரு வரம்புக்குமேல் அதிகரித்தால் அதுவே விஷம்போல மாறிவிடும். நான் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்புத்தொழிலில் இருக்கிறேன். எனது தொழில் நன்கு செயல்பட வேண்டுமென்றால் அனைத்து வாகனங்களும் ஓட வேண்டும். அப்போதுதான் உதிரி பாகங்களுக்கான தேவை ஏற்படும். எங்களுக்கு வணிகம் நடக்கும். இப்போதுள்ள சூழலில் அடுத்த 6 மாத காலத்துக்கு தொழிலை எப்படி நடத்துவது என்ற சிந்தனையில் இருக்கிறோம். இந்த நிலையில் வரிச்சலுகையைத்தான் தர வேண்டும். பிசினஸ் நன்கு நடைபெறும் காலகட்டத்தில், வரியை அதிகப்படுத்தலாம். அந்தச் சுமையைப் பகிர்ந்துகொள்ளலாம். தற்போது அனைவரும் நொந்துபோயிருக்கும் சூழலில் வரியை உயர்த்துவதில் அர்த்தமேயில்லை" என்றார்.

``உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கௌசிக் பாசு மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் ஆகியோர் சொத்து வரி கொண்டுவரப் பட வேண்டும் என்பதையும், பரம்பரை வரி வசூலிக்க வேண்டும் என்பதையும் ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளனர்" என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம். அவர் மேலும் கூறுகையில், ``இன்றைய சூழலில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், அடுத்த வேளை உணவுக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் பல நூறு கிலோமீட்டர் நடந்தே செல்வதற்கும் தயாராகிவிட்டார்கள். நெடுஞ்சாலை மார்க்கமாவும், ரயில் பாதைகள் மூலமாகவும் நடந்து சென்றுகொண்டிருப்பதையும், ரயில் பாதையில் களைத்து உறங்கியதால் விபத்தில் கொல்லப்பட்ட துயரத்தையும் பார்த்து வருகிறோம். தற்போது, வசதியுள்ளவர்களுக்கும் வசதியில்லாதவர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுவருகிறது. எனவே, வசதி படைத்தவர்கள், ஏழை மக்களுக்காக இந்த நேரத்தில் உதவி செய்யாவிட்டால் ஏற்றத்தாழ்வு அதிகரித்துவிடும். இந்த உதவிகளை அரசாங்கம்தான் செய்து தர வேண்டும். ஆனால், அரசு இதுகுறித்து கண்டுகொள்ளாதபோது பெரும்பணக்காரர்களிடம் கூடுதல் வரிமூலம் கேட்பதில் தவறில்லை.

அரசுக்கு நிதி திரட்டுவதற்காகச் சில வரிவிதிப்பு யோசனைகளை முன் வைத்ததற்காகவே அந்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றால், இது அரசின் கோபத்தையே காட்டுகிறது. வசதிபடைத்தவர்களுக்குக் கூடுதல் வரிவிதிப்பை ஏற்க முடியாத இதே அரசு, அடுத்தவேளை உணவுக்கே வழியற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிப்பதில் குறியாக இருக்கிறது. குறிப்பாக, இன்று தொடங்கியுள்ள ரயில் போக்குவரத்துக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. அப்படியானால் இது யாருக்கான அரசு என்ற கேள்வி எழுகிறது. முன்பு பண்ணையார்கள் அரசியலில் இயங்கினார்கள். தற்போது கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள் அரசியலில் ஈடுபட்டுவருகிறார்கள். எனவே, அவர்களின் அறிவிப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இருக்கின்றன" என்றார்.

பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்
பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்
vikatan

நாடு முழுவதும் வணிக நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் இரண்டு மாதங்களாக மூடப்பட்டதாலும், உள்கட்டமைப்புப்பணிகள் அனைத்தும் முடங்கியதாலும், கோடிக்கணக்கான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் உணவுக்கும், நிதி ஆதாரத்துக்கும் வழியின்றி தவித்துவருகிறார்கள். ஊரடங்கு முடிந்தாலும் அனைவருக்கும் மீண்டும் வேலை கிடைக்குமா என்பது உறுதியில்லை. இந்த நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகளின் பரிந்துரைகளில் சிலவற்றையாவது அரசு பரிசீலிக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism