Published:Updated:

வருமான வரி சோதனையின்போது என்ன நடக்கும்?

பொதுவாக, நாம் சோதனையை ‘ரெய்டு’ என்று சொல்கிறோம். சட்டப்பிரிவு இதை `ஸர்ச்’ (search) என்கிறது. சாதாரணமாக நடைபெறுகிற சோதனையில் இருந்து தேர்தல் காலச் சோதனை சற்றே மாறுபட்டது. ஆனால், இரண்டுக்கும் பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது - அது ‘தகவல்’.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வருமான வரி சட்டப் பிரிவு 132...

சில சட்டப் பிரிவுகள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமாகி இருக்கும். இபிகோ பிரிவு 324... இபிகோ பிரிவு 420. திரைப்பட நீதிபதிகள் மூலமாக நாம் அறிந்திருக்கிறோம். இத்துடன் இன்னொன்றையும் இனி சேர்த்துக்கொள்ளலாம். வருமான வரி சட்டம் பிரிவு 132 - தேடுதல் மற்றும் பறிமுதல் பிரிவு.

பொதுவாக, நாம் சோதனையை ‘ரெய்டு’ என்று சொல்கிறோம். சட்டப்பிரிவு இதை ‘ஸர்ச்’ (search) என்கிறது. சாதாரணமாக நடைபெறுகிற சோதனையில் இருந்து தேர்தல் காலச் சோதனை சற்றே மாறுபட்டது. ஆனால், இரண்டுக்கும் பொதுவான ஓர் அம்சம் இருக்கிறது - அது ‘தகவல்’.

வருமான வரி
வருமான வரி

ஒரு நபர் (அ) நிறுவனத்தின் வசம் பணம், தங்கம் (அ) விலை உயர்ந்த பொருள்கள் இருப்பதாகக் கிடைக்கும் தகவல்; இது கணக்கில் காட்டப்படாமல் போகலாம் என்கிற ஐயம் - இந்த இரண்டும் இணைகிறபோது, அதிரடியாக சோதனையில் இறங்குகிறது வருமான வரித் துறை.

சாதாரண காலங்களில், சில விவரங்கள் கேட்டு, வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை தாக்கீது (`நோட்டீஸ்’) அனுப்பும். குறித்த காலத்துக்குள் அதற்கு சரியான பதில் வரவில்லை எனில், (அ) தரப்பட்ட பதில் திருப்தி தருவதாக இல்லை எனில், அடுத்த `நகர்வு’ அவசியம் ஆகலாம். தாக்கீது அனுப்பாமலும் சோதனையில் இறங்க வேண்டி வரலாம்.

கணக்கில் காட்டப்படாத ரொக்கம் இருப்பு (அ) பரிமாற்றம் பற்றிய தகவல் தெரிந்தால், அப்போது உடனடியாக வரித்துறை சோதனையில் இறங்கலாம்.

சோதனை தொடங்கும் முன்...

சோதனையைத் தொடங்குவதற்கு முன்பாக வருமான வரித்துறை சில விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றும். முதலில், தகவலின் நம்பகத்தன்மை. 100% உறுதி செய்துகொள்ள இயலாமல் போகலாம். ஆனால், சந்தேகத்துக்கு இடமிருக்கிறது என்று உறுதியாக நம்பினால் போதும். சட்டமும் இப்படித்தான் சொல்கிறது. சோதனை நடவடிக்கையில் இறங்கலாம்.

வருமான வரித் துறையில், புலனாய்வுப் பிரிவு (Investigation Wing) தனியே இருக்கிறது. இதன் இணை இயக்குநர் / கூடுதல் இயக்குநர், சோதனைக்கான (தகவல்களுடன்) ஒரு கோரிக்கையை இயக்குநர் (அ) இயக்குநர் ஜெனரல் முன்பு, முறையாக சமர்ப்பிப்பார். இதன் அடிப்படையில், இயக்குநர் (அ) இயக்குநர் ஜெனரல், சோதனைக்கு ஒப்புதல் அளிப்பார். இதன்பிறகே சோதனை நடவடிக்கைகள் தொடங்கும்.

எத்தனை இடங்களில் எத்தனை நபர்களைக் கொண்டு என்னென்ன முன்னேற்பாடுகளுடன் சோதனை நடைபெற வேண்டும் என்பதை சம்பந்தபட்ட இணை இயக்குநர்/ கூடுதல் இயக்குநர் தீர்மானிப்பார். காலத்தேவைக்கு ஏற்ப அவ்வப்போது சில மாற்றங்களை செய்துகொள்வார்.

எந்த நாளில், எத்தனை மணிக்கு எவ்வெந்த இடங்களில் சோதனை தொடங்கும் என்று துல்லியமாகத் திட்டமிட்டு பணிகள் நடைபெறும்.

ரெய்டு
ரெய்டு

ஸர்ச்வாரன்ட்...

எந்த இடத்திலும் வருமானவரி அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து விடுவதில்லை. சோதனை நடத்துவதற்கான, தேடுதல் ஆணை (`ஸர்ச் வாரன்ட்’) பிறப்பிக்கப்படும். இதை வரி செலுத்துவோர்/ அவரை சேர்ந்தோரிடம் காண்பித்து அவரின் கையொப்பம் பெற்று அதன் பிறகு முறையாக சோதனையைத் தொடங்குவர்.

பல்வேறு இடங்களில் பல்வேறு குழுக்கள் சோதனை செய்யும். சோதனையில் ஈடுபடும் வருமான வரி அலுவலர்கள் / பணியாளர்களுக்கு, மேலோட்டமாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படும். அதாவது, எந்தத் தகவலின் அடிப்படையில், குறிப்பாக எதைத் தேடுகிறோம் என்பது அநேகமாக நேரடியாகச் சொல்லப்படுவதில்லை. சோதனைக்குப் பொறுப்பான கூடுதல் / இணை இயக்குநருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அவசியம் எனில், சோதனைக் குழுத் தலைவருக்கு சொல்லப்படலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன பொருள்..?

சோதனையில் ஈடுபடும் குழுக்கள் எல்லாவற்றையும் பரிசோதிக்கும். தகவல்களில் வராத உண்மைகளும் வெளிவரலாம். வெளியில் பரபரப்பாகப் பேசப்படுகிற சோதனை நடவடிக்கை, நிஜத்தில் சலிப்பூட்டுவதாகவே இருக்கும். நமது வீட்டில் ஏதோ ஒன்றைக் காணாமல் போய் அதை வீடே தேடினால் எப்படி இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான் இது.

சோதனை ஒருபுறம் நடந்துகொண்டு இருக்கும்போதே, வரி செலுத்துவோரிடம் முதல்கட்ட அறிக்கை (preliminary statement) பெற்றுவிடுவார்கள். சோதனையின்போது கிடைத்த ரொக்கம், தங்கம் விலை உயர்பொருள்கள், ஆவணங்கள் அடிப்படையில், நிறைவு அறிக்கை (final statement) தயாரிக்கப்படும். கணக்கில் காட்டப்படாத, முறையாக விளக்கம் அளிக்கப்படாத ரொக்கம், தங்கம், விலையுயர் பொருள்கள் தற்காலிகமாகப் பறிமுதல் செய்யப்படும். இவற்றை முறையாகப் பட்டியலிட்டு முத்திரைக் கையெழுத்துடன் ஒரு பிரதி அப்போதே வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும்.

இதன்பிறகு முறையாக முழு விசாரணை நடைபெறும். சோதனைக்கு உள்ளானவர், தனது தரப்பு வாதங்கள்/ விளக்கங்களைத் தாராளமாக முன்வைக்கலாம். இவற்றைப் பரிசீலித்து அதன் பிறகு வரி ஏய்ப்பு தொடர்பான ஆணை பிறப்பிக்கப்படும். தமக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று பாதிப்படைந்தவர் கருதினால், அந்த ஆணை மீது, மேல் முறையீடு செய்யலாம்.

வருமான வரி
வருமான வரி

சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை...

`எடுத்தேன்... கவிழ்த்தேன்’ என்று வருமான வரித் துறை செயல்படுவது இல்லை. மேற்சொன்ன இதே வழிமுறைதான் தேர்தல் கால சோதனையிலும் பின்பற்றப்படும். ஒரு மிக முக்கிய வித்தியாசம் - தமக்கு கிடைத்த தகவலை முறையாக முழுமையாக உறுதிசெய்து கொள்ள கால அவகாசம் மிகவும் குறைவு. அதனால் பல சமயங்களில் சந்தேகத்தின் அடிப்படையில்தான் சோதனை மேற்கொள்ள வேண்டிவருகிறது.

தேர்தல் கால சோதனை, ஒரு குறிப்பிட்ட தகவலின் பேரில், குறிப்பிட்ட `இலக்கு’ தேடி நடைபெறுகிறது. உதாரணத்துக்கு, `இந்த இடத்தில் ரூபாய் 100 கோடி இருக்கிறது’ என்று தகவல் வருமானால் மொத்தமாக ரொக்கம் கிடைக்கிறதா என்று மட்டும்தான் தேடுவார்கள். ஆவணங்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை. பெரும்பாலான சமயங்களில், என்னதான் விளக்கம் அளித்தாலும், ரொக்கப் பறிமுதல் நடந்தே தீரும். காரணம், அடிப்படையில் இது ஒரு தடுப்பு நடவடிக்கை. அதாவது, ரொக்கமாக பெரும் தொகை கைமாறுவதைத் தடுக்கிற நடவடிக்கை. தேர்தலுக்குப் பிறகு பறிமுதல் தொகைகள் அநேகமாக திருப்பி வழங்கப்பட்டுவிடும். வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணைகள் தொடரும்.

சோதனையின் உள்நோக்கம்...

தேர்தல் கால சோதனைகளில் அரசியல் அழுத்தம்/ உள்நோக்கம் இருக்குமா? வரித் துறையின் பக்கமிருந்து இருக்காது. ஆனால் ‘தகவல்’ தருகிறவர் இந்தக் கோணத்தில் செயல்படலாம். மறுப்பதற்கில்லை.

வரித் துறையைப் பொறுத்தமட்டில், ‘தகவல் - சோதனை - பறிமுதல்’ என்றுதான் செயல்படும்.

இதனால் யாருக்கு ஆதாயம், யாருக்கு பாதிப்பு என்று அறவே பார்ப்பதில்லை. வரிச் சோதனை நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படுவது இல்லை. பறிமுதல் செய்யப்படும் எல்லாமே தகுந்த விளக்கங்கள் அளித்து திரும்பப் பெறக்கூடியன. பாதிக்கப்பட்டவர் தனது தரப்பு வாதங்கள் விளக்கம் அளிக்க, முழு உரிமை / முழு சுதந்திரம் தரப்படுகிறது. தனக்காக வாதிட, பிரதிநிதி / வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவும் அனுமதி உண்டு. பல விசாரணைகள், பல விளக்கங்கள், பல முறையீடுகளுக்குப் பின்னரே வழக்கு நிறைவுக் கட்டத்தை எட்டும்.

வருமான வரித் துறை...
வருமான வரித் துறை...

வருமானம் இருந்து, அது முறையாகக் கணக்கில் காட்டப்படாமல் போய், வரி ஏய்ப்பு நடந்ததாக நிரூபணபமானால் மட்டுமே, அதற்கான வரித்தொகையைக் கட்ட வேண்டும். வரி ஏய்ப்புக்கான நிரூபணம் இல்லையெனில், ஒரு `தொந்தரவு’ம் இல்லை. எனவே, வரிச் சோதனை நியாயமானதா, (அ) பழிவாங்கும் நடவடிக்கையா என்கிற கேள்வி அர்த்தமற்றது.

வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால், நாட்டுக்கு / அரசுக்கு வரி கிடைக்கும். இல்லாவிட்ட, மொத்தப் பணமும் உரியவருக்குத் திரும்ப வந்துவிடப் போகிறது.

இப்போது சொல்லுங்கள்... வரிச் சோதனை நடைபெறலாமா, கூடாதா..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு