இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நம் நாட்டின் ஜி.டி.பி-யானது 20.1% என்கிற அளவுக்கு வளர்ச்சி கண்டிருப்பதாக வந்திருக்கும் செய்தியானது மக்களிடமும் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமும் பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், உலக அளவில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக மிக அதிகமான அளவில் ஜி.டி.பி வளர்ச்சி கண்ட நாடு இந்தியாதான். இங்கிலாந்தின் ஜி.டி.பி வளர்ச்சி 22.2 சதவிகிதமாக இருக்கிறது.

கோவிட் 19 காரணமாக அடுத்தடுத்து வந்த இரண்டு ஊரடங்குகளால் கடந்த காலாண்டுகளில் நம் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்படைந்திருந்தது. ஏறக்குறைய -24.4% என்கிற அளவுக்குக் குறைந்திருந்தது. அந்த நிலையில் இருந்து பொருளாதாரம் ஏற்றம் கண்டிருப்பதால், தற்போது நம் நாடு மிகப் பெரிய வளர்ச்சி கண்டுவிட்டது போலத் தெரிகிறது. இது `லோபேஸ் எஃபெக்ட்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் உற்பத்தித் துறையானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 49.6% அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் விவசாயத் துறை பெரிய அளவில் பாதிப்பு அடையவில்லை என்றாலும், கடந்த காலாண்டிலும் நல்ல வளர்ச்சியைக் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.டி.பி வளர்ச்சியானது நன்கு அதிகரித்திருந்தாலும், கோவிட்-19-க்கு முன்பிருந்த பொருளாதார வளர்ச்சியை அடுத்த ஆண்டுதான் அடைய முடியும் என்று சொல்லி இருக்கிறார் பிரதமரின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன். நம் நாட்டின் ஜி.டி.பி தொடர்ந்து வளர்ச்சி காண வேண்டும் எனில், தனியார் நிறுவனங்கள் இன்னும் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்கிற நிலையே இருக்கிறது. தவிர, கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால் இரண்டாம் காலாண்டில் நல்ல மாற்றம் தெரியும் என்கிறார்கள்.
ஆனால், மூன்றாம் அலை மீண்டும் பெரிய அளவில் வரும்பட்சத்தில் தற்போது வந்துள்ள ஜி.டி.பி வளர்ச்சி மீண்டும் குறையவே செய்யும்!