Published:Updated:

முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள்... பினாமி சட்டத்திருத்தம் சொல்வது என்ன?

சசிகலா
News
சசிகலா

பினாமி சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சில சொத்துகள் மீது இந்தச் சட்டம் பாய்ந்திருக்கிறது.

``சுரேஷ் சாதாரண பியூன் வேலைதானே பார்த்து வந்தார். இந்தத் தி.நகர் இடத்தை எப்படி வாங்கி வீடு கட்டினார் எனத் தெரியலையே’’ என யாரும் மூக்கின் மேலே விரல் வைக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. காரணம், திருத்தப்பட்ட புதிய பினாமி தடைச் சட்டம் எப்போது வேண்டுமானாலும் அவர் மீது பாயலாம்.

திருத்தப்பட்ட புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தபின், சுரேஷ் இன்னாரின் பினாமி என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். பின்பு, பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் மூலமாக சொத்து வாங்கிய நிஜ மனிதர் தண்டனைக்குப் பயந்து, அந்தச் சொத்து சுரேஷூக்கே கிடைக்க வழிவகை செய்துவிடும்.

இதையேதான் பிரதமர் நரேந்திர மோடியும், `கறுப்புப் பண ஒழிப்பைத் தொடர்ந்து பினாமி சொத்துகள் மீது நடவடிக்கை’ என சில ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் மிகப் பெரிய நடவடிக்கையாக இது அமையும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

கே.அழகுராமன் - வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை
கே.அழகுராமன் - வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை

இந்த பினாமி நடைமுறை எப்படி உருவானது என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் பின்னோக்கி போவோம். இந்தியாவைக் கைப்பற்றிய பிரிட்டிஷார் பல விதமான வரிகள், அபராதங்கள் என அரசு வருமானத்துக்கென திட்டங்கள் போட்டபோது, அதைக் கண்டு மிரளாமல், அப்போதே நம் மக்களால் அதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டு, வரி செலுத்தாமல் அதைத் தவிர்க்கும் எண்ணத்தில் வழக்கத்துக்குக் கொண்டு வரப்பட்டதுதான் இந்த பினாமி பரிவர்த்தனை எனப்படும் `நபர் இரவல்’. இந்த நடைமுறையைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சியர்களே மிரண்டது தனிக் கதை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

1988-ம் ஆண்டு இயற்றப்பட்ட பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம், வெறும் 9 பிரிவுகளை மட்டுமே கொண்டு பெயரளவுக்கு செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்த பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (1988) முகம் மட்டுமல்ல, ஆதி முதல் அந்தம் வரை என 9 பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து, புதிதாகப் பல திருத்தங்கள் செய்து, ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 72 புதிய பிரிவுகளைப் புகுத்திடும் புதியதொரு பினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பதற்கு சரியாக ஏழு நாள்கள் முன்பாக (1.11.2016) மத்திய அரசு இதை நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

`மாப்பிள்ளை அவர்தான். ஆனா, அவர் போட்டுருக்கிற சட்டை என்னோடது...’ - இந்தக் கதையை ஒரு நபர் சொத்து வாங்கும்போது பயன்படுத்துவதுதான் பினாமி பரிவர்த்தனை.

இதைக் கண்டுபிடிக்க அரசு என்ன செய்யப்போகிறது? அந்தச் சொத்து என்னவாகும்? இதனால் கறுப்புப் பணம் ஒழியுமா? இவையெல்லாம்தாம் ஒவ்வொருவரின் முன் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

சொத்து
சொத்து

சொத்து ஒருவர் பெயரில் இருக்கும். அதன் பரிவர்த்தனைக்கென கிரயத் தொகை, பதிவுச் செலவு, முத்திரைத் தீர்வை என அனைத்தும் மற்றொரு நிழல் நபரால் செலுத்தப்பட்டிருக்கும். கணக்கில் கொண்டு வராத, வர இயலாத அளவுக்கு மிஞ்சிய கறுப்புப் பணம் இருக்கும்போதுதான் `இரவல் நபர்’ என்ற பினாமி ஒருவர் தேவைப்படுவார்.

சில நேரங்களில் அந்தச் சொத்து எங்கு உள்ளது என்பதுகூட அந்த பினாமிக்கு தெரியாது. அல்லது ஒரு `பவர்’ பத்திரம் ஒன்றை அந்த பினாமியிடமிருந்து பெற்றுக்கொண்டு, அவருக்கே தெரியாமல் விற்றுவிடும் சூழலும் உள்ளது. சில லட்சங்கள் மட்டுமே முதலீடு செய்த கறுப்புப் பணம், பல கோடிகளாகவும் மாற வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு வந்து சேரும் கோடிகளும் கறுப்புப் பணமே. அதைத்தான் அரசு குறிவைக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`பவர்’ ஏஜென்ட் என்பவர் அதைப் பெறுவதால், இதில் எந்தத் தொகையும் அந்த பினாமியின் கணக்குக்குப் போகாது. ஆனால், பின்பு வருமானவரித் துறையால் பிரச்னைகளை எதிர்கொள்வது இந்த வகை பினாமிகள்தாம்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட அல்லது அடையாளம் காண்பிக்கப்பட்ட சொத்துகளின் உண்மை மற்றும் பினாமி உரிமையாளர் இருவருக்கும் முதலில் அது குறித்த விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். பின்பு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அந்த சொத்தை பறிமுதல் செய்யவும் இந்தத் திருத்தப்பட்ட சட்டத்தில் மிகத் தெளிவாக வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.

சசிகலா வீட்டின் முன்பு வருமான வரித்துறை ஒட்டியுள்ள நோட்டீஸ்
சசிகலா வீட்டின் முன்பு வருமான வரித்துறை ஒட்டியுள்ள நோட்டீஸ்

இதற்கென அட்ஜூடிகேட்டிங் அத்தாரிட்டி (Adjudicating Authority) என்ற ஒரு அமைப்பு, நீதிமன்றம் போல செயல்படும். அட்ஜூடிகேட்டிங் அதிகாரியானவர் தலைவர் (Chair Person) என்று அழைக்கப்படுவார். அவர் தவிர, இரண்டு உறுப்பினர்கள் (Members) அவருடன் இணைந்து அனைத்து வழக்குகளையும் விசாரிப்பார்கள்.

முதலில் இது தலைநகர் டெல்லியில் செயல்படும். பின்பு வசதிக்கேற்ப, எங்கெங்கு எத்தனை தேவைப்படுகிறதோ, அங்கு கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். தலைவர் எனப்படுபவர் அரசு வருவாய்த்துறை (IRS) பணியில் இருக்கும் வருமானவரித் துறை ஆணையர் நிலையில் உள்ள ஒரு நபராக இருப்பார். அல்லது இந்திய சட்டத் துறையில் இணைச் செயலராக உள்ள மூத்த நபராக இருப்பார்.

ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட இவர்களின் அதிகாரம் சிவில் நீதிபதிகளைப் போல இருக்கும். ஆனால், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில், சிவில் நீதி மன்றங்களில் செய்வது போன்று உரிமையியல் நடைமுறைச் சட்டத்தை (Civil Procedure Code) பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்திய தண்டனை சட்டத்தின்படியான (Indian Penal Code) ஒரு நடைமுறையாகவே, அனைத்து நடவடிக்கைகளும் கருதப்படும். அரசு வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டு, வழக்கினை நிரூபிக்க உதவுவார். அது தவிர, அனைத்துத் துறை மத்திய, மாநில அரசு அதிகாரிகள், காவல் துறையில் கமிஷனர் முதல் தேவைப்படும் எந்த அதிகாரிகளும் எல்லா விதங்களிலும் உதவும் வகையில் இந்த திருத்தப்பட்ட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் தவிர, பங்கு வர்த்தகத்துறை, சுங்கம், வருமான வரித் துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புத் துறை, ஃபெமா (FEMA) அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் போன்ற அனைவரும் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து வழிகளிலும் உதவ முடியும்.

இந்த நடைமுறை மூலமாக பினாமியாகப் பெறப்பட்டதும், அதன் மூலமாக அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்பதும் நிரூபணமானால், அந்தச் சொத்தை அரசு எடுத்துக்கொள்வதுடன், அந்தச் சொத்தின் நியாய சந்தை மதிப்பில் (Fair Market Value) 25% அபராதமாகச் செலுத்த நேரிடும். மேலும், ஒரு வருடம் முதல் ஏழு வருடங்கள் வரையான சிறைத்தண்டனையும் அபராதத் தொகையுடன் விதிக்கப்படும். இந்த உத்தரவுக்கு எதிராக முதல் அப்பீல் ஒன்றும் அதன் மீது உயர் நீதிமன்ற அப்பீல் ஒன்றும் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பினாமி
பினாமி

இது குறித்த அறிவிப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்தச் சொத்து வேறு யாருக்காவது விற்கப்படுமாயின், அவ்வாறான விற்பனை செல்லாத ஒன்று. அந்த விற்பனை மூலமாகக் கிடைக்கப் பெற்ற பணத்தையும் ஜப்தி செய்ய அதிகாரம் உள்ளது.

ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பின் ஓர் அரசு, ஒரு குறிப்பிட்ட சட்டத்தை, மிகத் தெளிவாக ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்து, தக்க நேரம், காலம் பார்த்து அமல்படுத்தியது சரிதான். ஆனால், நிழலை நிஜமாக்கும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.

பினாமி சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சில சொத்துகள் மீது இந்தச் சட்டம் பாய்ந்திருக்கிறது.

- கே.அழகுராமன் - வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், சென்னை.