பட்ஜெட்டில் சொல்லப்படும் நிதிப் பற்றாக்குறை என்றால் என்ன? #Budget2020

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் உச்சரிக்கப்படும் முக்கியமான விஷயம், நிதிப் பற்றாக்குறை. இந்த நிதிப் பற்றாக்குறை என்றால் என்ன, அது எவ்வாறு ஏற்படுகிறது? அதைப்பற்றி கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.
நிதிப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய்க்கும் செலவினத்திற்கும் இடையே உள்ள இடைவெளியாகும்.
நாட்டின் வருவாய் மற்றும் செலவினங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை, வருவாய்ச் செலவுகள் மற்றும் மூலதனச் செலவுகள் ஆகும்.
ஒரு நாட்டின் வருமானத்தை, வருவாய் வருமானம் (Revenue Receipts) மற்றும் மூலதன வருமானம் (Capital Receipts) என்று பிரிக்கலாம். வருவாய் வருமானத்தை வரி (Tax Revenue) மற்றும் வரி அல்லாத இதர வருவாய் (Non Tax Revenue) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். வரிகள் மூலமாகப் பெறப்படும் வருமானம் என்பது நேரடி (Direct Taxes) மற்றும் மறைமுக வரிகள் (Indirect Taxes) மூலமாகப் பெறப்படுவதாகும்.
நேரடி வரிகள் என்பது வருமான வரி மற்றும் நிறுவனங்கள் வரி மூலமாகப் பெறப்படுவது. மறைமுக வரிகள் என்பது ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரி மூலம் பெறப்படுவது. வரி அல்லாத இதர வருமானம் என்பது பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாகக் கிடைக்கும் ஈவுத்தொகை மற்றும் வட்டி வருமானம் ஆகும்.

வருவாய் வருமானத்தைப் பார்த்துவிட்டோம். இப்போது வருவாய் செலவினங்களைப் (Revenue Expenditure) பார்ப்போம். வருவாய் செலவினங்கள் என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், வட்டிச் செலவினம், மானியத் தொகை மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கான செலவினம் ஆகும். இவை அனைத்தும் வருவாய் செலவினம் என்ற கணக்கில் வரும். வருவாய் வருமானம் மற்றும் வருவாய் செலவினம் என்ன என்பதைப் பார்த்துவிட்டோம். இப்போது மூலதன வருமானம் (Capital Receipts) என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஏற்கெனவே கொடுத்த கடன்களை வசூலிப்பது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது மற்றும் புதிய கடன்கள் மூலமாக வரும் வருமானம், மூலதன வருமானம் என்று அறியப்படும். மூலதனச் செலவினங்கள் (Capital Expenditure) என்பது நாட்டின் கட்டுமானத்திற்காக சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவற்றிற்காகச் செலவிடப்படும் தொகையாகும்.
வருவாய் வருமானத்தைவிட, வருவாய் செலவினம் அதிகமாக இருந்தால், அது வருவாய்ப் பற்றாக்குறை (Revenue Deficit) எனப்படும். இதை, ஒரு தனிநபரின் நிதித் திட்டமிடலுடன் ஒப்பிட்டால், ஒருவரின் வருமானத்திற்குச் சமமாக அல்லது வருமானத்தைவிடக் கூடுதலாகக் கடன் அட்டை (Credit Card) செலவினங்கள் இருக்குமானால், அது எவ்வளவு அபாயகரமானதோ, அதுபோலத்தான் ஒரு நாட்டிற்கும் வருவாய்ப் பற்றாக்குறை என்பது அபாயகரமானதாகும்.

இந்த வருவாய் பற்றாக்குறையைவிட மிக அபாயகரமான ஒன்றும் இருக்கிறது. அது, அடிப்படைப் பற்றாக்குறை (Primary Deficit) என்பதாகும். அடிப்படைப் பற்றாக்குறை என்பது வருவாய் செலவினத்தில் வட்டிச் செலவைக் கழித்ததுபோக மீதமுள்ள வருவாய். செலவுகளைவிட வருவாய் வருமானம் குறைவாக இருப்பதாகும். அதாவது, வருவாய் வருமானம் ரூ.70 என்று வைத்துக்கொள்வோம். வருவாய் செலவினம் ரூ.100 என்று வைத்துக்கொள்வோம்.
இப்போது வருவாய் பற்றாக்குறை ரூ.30 ஆகும். இந்த வருவாய் செலவினத்தில் ரூ.80 இதர செலவினங்கள் ஆகவும், ரூ 20 வட்டிச் செலவினமாகவும் எடுத்துக்கொண்டால், இப்போது வருவாய் செலவினம் வட்டிச் செலவினத்தைக் கழித்தது போக ரூ.80 என்று இருக்கும். ஆனால், வருவாய் வருமானம் ரூ.70 ஆகும். இப்போது அடிப்படைப் பற்றாக்குறை ரூ.10 ஆகும் (வருவாய் வருமானம் ரூ.70 மைனஸ் வருவாய் செலவினம் வட்டி செலவினம் போக ரூ.80).
அரசாங்கத்தின் மொத்த செலவினத்திற்கும் வருவாய் வருமானம் ஏற்கெனவே கொடுத்த கடன்களை வசூலித்தல் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள இடைவெளியே, நிதிப் பற்றாக்குறை எனப்படுகிறது.
இந்த நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் புதிய கடன்கள் வாங்குவது மூலமாக சரிசெய்துகொள்ளும். இவ்வாறு வாங்கும் புதிய கடன்கள், நாட்டின் கட்டுமானத்தை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்பட்டால், அதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. அவ்வாறு அல்லாமல், அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டால், அது நமது நாட்டின் நிதி மேலாண்மையில் உள்ள சிக்கலைக் குறிக்கும்.
நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க, வருவாயைப் பெருக்க வேண்டும் அல்லது செலவினங்களைக் குறைக்க வேண்டும். செலவினங்களைக் குறைத்தால் நாட்டின் முன்னேற்றத்தில் தடை ஏற்படலாம்.
ஒரு நாட்டின் நிதிப் பற்றாக்குறை, அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% வரை இருக்கலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த 2019-20-ம் நிதியாண்டில், நமது நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதத்துக்குள் இருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டது.

ஆனால், இந்த நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக வரிகள் மூலமாகப் பெறப்படும் வருமானம் மதிப்பிடப்பட்டதற்கும் குறைவாக உள்ளதாலும் மேலும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டதாலும், அரசாங்கத்தின் மொத்த வருமானம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, நிதிப் பற்றாக்குறை 3.7% வரை உயரும் என்று தெரிகிறது. இந்த 3.3% அல்லது 3.7% சரியான கணக்கீடா என்று கேட்டால், அது மிகப் பெரிய விவாதத்திற்கு வழிவகுக்கும்.
உதாரணமாக, கடந்த நிதியாண்டில் உணவு மானியத் தொகையை அரசாங்கம் நேரடியாகக் கொடுக்காமல், ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Food Corporation of India) நிறுவனத்திற்கான மானியத் தொகையை நாட்டின் சிறுசேமிப்பு நிதித் தொகுப்பி (National Small Savings Fund) லிருந்து கடனாகப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மானியமாகப் பெறப்பட்ட கடன் தொகையை, இந்த நிதிப் பற்றாக்குறை கணக்கில் சேர்க்கவில்லை. இது, சரி... தவறு என்ற இரண்டு விவாதங்களுக்கும் பொருளாதார வல்லுநர்களால் முன்னெடுத்து வைக்கப்படுகின்றன.
- தியாகராஜன், சார்ட்டட் அக்கவுன்டன்ட்.