Published:Updated:

அரசு ஊழியர்கள் பென்சன்; திசை திருப்பும் அண்ணாமலை... மாற்றிப் பேசும் தி.மு.க... உண்மை என்ன?

அரசு ஊழியர்கள் ( govt employees )

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஓய்வுதிய திட்டத்தின் கீழ் பென்சன் வாங்குகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டாம் என்று பத்திரத்தில் எழுதி வாங்கி முதிர்வு தொகையைக் கொடுக்கிறார்கள்.

அரசு ஊழியர்கள் பென்சன்; திசை திருப்பும் அண்ணாமலை... மாற்றிப் பேசும் தி.மு.க... உண்மை என்ன?

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் ஓய்வுதிய திட்டத்தின் கீழ் பென்சன் வாங்குகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டாம் என்று பத்திரத்தில் எழுதி வாங்கி முதிர்வு தொகையைக் கொடுக்கிறார்கள்.

Published:Updated:
அரசு ஊழியர்கள் ( govt employees )

தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், `பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை' என்று அறிவித்தார்.

அப்போதிருந்து விவகாரம் தீயாய் பற்றிக்கொண்டது. தொடர்ந்து தமிழகத்தின் ஓய்வூதிய திட்டம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாயின. ஓய்வூதியத்துக்காகப் பிடித்தம் செய்யும் அரசு ஊழியர்களின் பணத்தை எங்கெங்கோ பயன்படுத்துகிறது என்றும், தமிழக அரசின் செயல்பாடுகளால் ஓய்வூதியத் திட்டத்தின் பணம் விரயமாகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பா.ஜ.க-வின் தமிழக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வேறு விதமான தகவலையும் வெளியிட்டார். மத்திய அரசின் திட்டத்தையும் மாநில அரசின் திட்டத்தையும் ஒப்பிட்டு பேசியுள்ளார். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பு 14 சதவிகிதமாக உள்ளது என்றும், தமிழக அரசின் பங்களிப்பு 10 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்றும் இதனால் மாநில அரசு ஊழியர்கள் 4 சதவிகித கூடுதல் பங்களிப்பை இழக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மட்டுமல்லாமல் தற்போது தமிழக அரசின் வட்டி விகிதம் 7.1 சதவீதம் என்று தமிழக நிதியமைச்சர் கூறுகிறார். ஊழியர் மற்றும் அரசின் ஓய்வூதியப் பங்களிப்பு தொகையை வேறெங்கோ வைப்பதற்குப் பதிலாக பிஎஃப்ஆர்டிஏ-ல் டெபாசிட் செய்திருந்தால் தமிழக அரசு ஊழியர்கள் ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி விகிதத்தைப் பெற்றிருப்பார்கள். ஆனால் ஆண்டுக்கு 2.9 சதவீதம் வட்டி குறைவாக பெறுவதற்கு தமிழக அரசே காரணம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விமர்சனங்களெல்லாம் பொய்யானவை, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் குறித்து பொய் தகவல்களைப் பரப்பாதீர்கள் என்று பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன் சமீபத்தில் பதில் அளித்தார். மட்டுமல்லாமல் அண்ணாமலைக்கு எந்தவித அடிப்படையும் தெரியாமல் தவறாகக் கருத்துகளை வெளியிடுகிறார். பிஎஃப்ஆர்டிஏ அமைப்பு ஒரு ஆணையம் இதில் இதுவரை எந்த தொகையும் டெபாசிட் செய்யப்படவில்லை.

தற்போதைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் 2003-ல் அன்றைய அ.தி.மு.க. அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் அனைவரும் இதன்கீழ் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இத்திட்டத்தில் 6,02,377 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இத்திட்டத்தின்படி ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10 சதவிகிதம் ஊழியர்களின் பங்களிப்பாகப் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. அதற்கு நிகரானத் தொகை அரசின் பங்களிப்பாக ஊழியர் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு உறுப்பினர் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு உரிய வட்டியை அரசு தொடர்ந்து செலுத்தி வருகிறது.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை

இவ்வாறு 2003-ம் ஆண்டிலிருந்து ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் தொகை மாநில அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்திலிருந்து மாறி தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) சேர்வதா, இல்லையா என்பது அரசின் கொள்கை முடிவு. மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஒரு தனிநபருக்கு ரூ.50 ஆயிரம் செலவாகிறது. ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை செலவாகிறது.

இதனால் அரசுக்குத்தான் நஷ்டம். எனவேதான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று குறிப்பிட்டதாகக் கூறினார். அதேசமயம் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் பிடிஆர் கூறினார்.

இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன பிரச்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கையும் எண்ணமும் என்னவாக இருக்கிறது என்பது குறித்து தமிழக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் அன்பரசுவிடம் பேசினோம். அவர் கூறியதாவது,

``இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தின் கீழ் பென்சன் வாங்குகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டாம் என்று பத்திரத்தில் எழுதி வாங்கி முதிர்வு தொகையைக் கொடுக்கிறார்கள்.

தமிழக அரசு ஊழியர்கள் சார்பில் நாங்கள் கேட்பது ஓய்வூதியம்தான். ஆனால், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்று பெயர் வைத்துவிட்டு ஓய்வூதியம் வழங்காமல் முழுமையாக செட்டில்மென்ட் செய்வது என்ன நியாயம் என்பதுதான் எங்களுடைய கேள்வி.

தமிழக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் அன்பரசு
தமிழக அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் அன்பரசு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் தொகையை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்படுவது இந்த விஷயத்தை திசைதிருப்பும் விதமாகவே பார்க்கிறோம். அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருக்கும் கருத்தும் அப்படிப்பட்டதுதான். இதுவரை இல்லாமல் திடீர் பாசம் அரசு ஊழியர்கள் மீது வந்திருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இதுபோன்றவர்கள் வெளியிடும் கருத்துகளால் எங்களுடைய பிரச்னை திசைதிருப்பப்படுகிறது.

ஓய்வூதியத் திட்டத்தின் தொகை எங்கு பயன்படுத்தப்படுகிறது என்பதெல்லாம் முதல் பிரச்சினை இல்லை. ஓய்வூதிய திட்டம் என்றால் ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் செட்டில்மென்ட் வழங்கிவருகிறது. அதற்கு ஏன் ஓய்வூதியத் திட்டம் என்று பெயர் வைக்க வேண்டும்.

இந்தத்திட்டம் தொடங்கிய பிறகு இதன் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. ஆனால் ஓய்வூதியத் தொகை வேறு எங்கோ முதலீடு செய்யப்படுகிறது, வேறு எதற்கோ பயன்படுத்தப்படுகிறது என்று சொல்லப்படுவதெல்லாம் திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இருக்கிறது.

பென்சன் பணம்
பென்சன் பணம்

எங்கு முதலீடு செய்தாலும், எதற்குப் பயன்படுத்தினாலும் ஓய்வூதியத்தை முறையாக வழங்க ஆவண செய்தாலே போதுமானது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவருவதாக தேர்தல் அறிக்கையில் திமுக கூறியது. ஆனால் இப்போது மாற்றி பேசுகிறது. ஜூன் 20-ம் தேதி முதல் அரசு ஊழியர்களைச் சந்திக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம். அடுத்தடுத்து போராட்டங்கள், வேலை நிறுத்தம் போன்றவற்றை முன்னெடுக்க உள்ளோம் என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism