Published:Updated:

தொடரும் லாக்டவுன்...`ஹெலிகாப்டர் மணி'யை கையிலெடுக்குமா இந்தியா?

Representational Image
Representational Image

ஹெலிகாப்டர் மணி உத்தியைப் பயன்படுத்தும் போது பணத்தை அச்சடிக்க வழக்கமான விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை.

'ஹெலிகாப்டர் மணி' உத்தி என்பது நெருக்கடியில் இருக்கும் பொருளாதாராத்தை மீட்பதற்கான வழி. இதை மக்களுக்கு வழங்கப்படும் இலவசப் பணம் என்றும் சொல்லலாம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவிலும் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு உத்தரவினால், இந்தியப் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. தொழில்களும் மக்களின் நிதிநிலையும் முடங்கிப் போயிருக்கின்றன. அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்காமல், மறுபடியும் ஊரடங்கை நீட்டித்திருப்பது நியாயமா என்கிற கேள்வியைப் பொதுமக்கள் மட்டுமின்றிப் பொருளாதார நிபுணர்களும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். 

ஏற்றம் காணுமா இந்தியப் பொருளாதாரம்? - கொரோனாவுக்குப் பிறகு..!

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பைச் சரிசெய்ய 'ஹெலிகாப்டர் மணி' உத்தியே சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து பரவலாகி வருகிறது. மற்ற உலக நாடுகள் இந்த உத்தியைக் கையிலெடுத்திருக்கும் போது, இந்திய அரசாங்கம் ஏன் தயங்குகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள்.  

கொரோனாவின் பாதிப்புகளைக் களைவதற்கு, மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் ஹெலிகாப்டர் மணி உத்தியைக் கையிலெடுக்க வேண்டும்
சந்திரசேகர் ராவ், முதலமைச்சர், தெலங்கானா

ஹெலிகாப்டர் மணி என்றால் என்ன? ஏன் இப்போது இந்த உத்தியை இந்திய அரசு கையில் எடுக்க வேண்டும்? மற்ற நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

எல்லாக் கேள்விகளுக்கும் விடை தேடலாம்!

ஹெலிகாப்டர் மணி என்றால் என்ன?

ஹெலிகாப்டர் மணி என்னும் வார்த்தையை நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் மில்டன் ஃப்ரைட்மான் (Milton Friedman), 1969-ம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் 2002ல், அப்போதைய ஃபெடரல் ரிசர்வ் கவர்னரான பென் எஸ்.பெர்னான்கே (Ben S. Bernanke) பண நெருக்கடியைச் சமாளிக்க முன்மொழிந்தார்.

மில்டன் ஃப்ரைட்மான்
மில்டன் ஃப்ரைட்மான்

'ஹெலிகாப்டர் மணி' உத்தி என்பது நெருக்கடியில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கான வழியாகும். இதை மக்களுக்கு வழங்கப்படும் இலவசப் பணம் என்றும் சொல்லலாம். இந்த உத்தியை ப்ரைட்மான் ஹெலிகாப்டரிலிருந்து பணத்தைக் கீழே நிற்கும் மக்களுக்கு இறைப்பதாக உருவகப்படுத்தி  விளக்கியதால் இந்த உத்திக்கு ’ஹெலிகாப்டர் மணி’ என்று பெயர் வந்தது. ஆனால் உண்மையில் ஹெலிகாப்டர் மூலமாகவெல்லாம் பணம் வீசப்படாது. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட பணத்தைச் செலுத்திவிடும். சுருக்கமாகச் சொன்னால், ஹெலிகாப்டரிலிருந்து பணத்தை வாரி இறைப்பது போல.

1969
ஹெலிகாப்டர் மணி என்னும் வார்த்தை அறிமுகம் ஆன ஆண்டு!

ஒரு நாட்டின் மத்திய வங்கி பணத்தை அச்சிட அதற்கு ஈடான பத்திரங்களையும், தங்கம் மற்றும் அந்நிய நாட்டுப் பணத்தையும் இருப்பாகப் பயன்படுத்தும். இந்த ஹெலிகாப்டர் மணி உத்தியைப் பயன்படுத்தும் போது பணத்தை அச்சடிக்க எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை. இது திரும்பச் செலுத்த தேவையில்லாத பணமாகும். இப்படிச் செய்யும்போது நெருக்கடியான காலகட்டத்தில் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படும். இதைக்கொண்டு பொருளாதாரத்தைப் பற்றிய நம்பிக்கையை மக்களிடம் உருவாக்க முடியும். 

21 நாள் ஊரடங்கு... இந்தியப் பொருளாதாரம் பற்றி நிறுவனங்களின் மதிப்பீடும் பரிந்துரைகளும்!
பென் எஸ்.பெர்னான்கே
பென் எஸ்.பெர்னான்கே

இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலைச் சமாளிக்க அசாதாரணமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அதனால் உலக நாடுகளின் பொருளாதார அறிஞர்கள் ஹெலிகாப்டர் மணி உத்தியே சிறந்த தீர்வு எனக் கூறி வருகின்றனர். இதனால்தான் இதைப்பற்றித் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

'ஹெலிகாப்டர் மணி' உத்தியைப் பயன்படுத்திய நாடுகள்!

1. அமெரிக்கா

அமெரிக்கா 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஹெலிகாப்டர் உத்தியைப் பயன்படுத்தியது. எல்லா வீடுகளுக்கும் யுனிவர்சல் வரிச் சலுகை வழங்கப்பட்டது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுள் ஒன்றான அமெரிக்கா, இப்போது தனது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிகிதத்தைப் பொருளாதாரத்தைச் சீர் செய்ய ஒதுக்கியுள்ளது. அதாவது 2 ட்ரில்லியன் டாலர்களை இந்தக் கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீள்வதற்காகப் பயன்படுத்த உள்ளது.

இதில் 500 பில்லியன் டாலர்களைப் பெரிய தொழில் நிறுவனங்களுக்குத் தந்துள்ளது. 349 பில்லியன் டாலர்களை சிறு குறு தொழில் செய்வோர் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இந்தத் தொகையை வாடகைக்கோ தொழிலாளர்களின் ஊதியத்துக்கோ வழங்கினால் அரசுக்குத் திரும்பத்தரத் தேவையில்லை. வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினால் திரும்பக் கட்டவேண்டும்.

2 ட்ரில்லியன் டாலர்
கொரோனா பாதிப்புக்கு அமெரிக்கா ஒதுக்கிய நிதி!

2. ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய மத்திய வங்கி, வங்கிகளுக்கு நெகட்டிவ் வட்டி விகிதத்தில் பணம் வழங்கும் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. இதைக்கொண்டு கூடுதலான பணத்தை மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியது .

3. ஹாங்காங்

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை சீர்செய்ய ஹாங்காங் அரசு ’ஹெலிகாப்டர் மணி’ திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் 10,000 டாலர் வழங்கப்போவதாக தனது பட்ஜெட்டில் பிப்ரவரி 27 அன்று அறிவித்தது.

Representational Image
Representational Image

4.ஜெர்மனி

கொரோனாவால் சுயதொழில் செய்வோர், கடைகள் வைத்திருப்போர், சிறுதொழில் செய்வோரின் இழப்பை ஈடுசெய்ய 5000 யூரோக்களை ஒவ்வொருவருக்கும் அறிவித்துள்ளது ஜெர்மனி. இதைத் தற்போது வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பெற்றுள்ளனர். 

5. பிரான்ஸ்

பிரான்ஸ் அரசு இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு தலா 1,200 டாலர் வரை வழங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் சுய தொழில் செய்வோர் மற்றும் சிறு குறு தொழில் செய்வோர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனாவால் நிலைகுலையும் இந்தியப் பொருளாதாரம்...  நிபுணர்களின் கருத்தும் கணிப்பும்!

இப்படியாக, கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உலக நாடுகள் அனைத்தும் `ஹெலிகாப்டர் மணி’ உத்தியில் தங்களது பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீள போதுமானதாக இல்லை எனும் பட்சத்தில் அசாதாரணமான நடவடிக்கைளை மேற்கொள்ளப் போவதாகவும் உலக நாடுகள் அறிவித்துள்ளன.

இந்தியாவின் நிலை!

``ஓசோன் படலத்தில் ஓட்டை பெரியதாகிக்கொண்டே போவதுபோல, கொரோனாவால் இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமையும் மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. ஊரடங்கு காரணமாகப் பெரும்பாலான மக்கள் தங்களது வேலையை இழந்து தவிக்கின்றனர். இத்தருணத்தில், இந்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் திருப்தி அளிக்கக்கூடிய ஒன்றாக இல்லை.

`நுகர்வோரின் நம்பிக்கை.. உற்பத்தித்துறையில் பாதிப்பு!'- சரிவை நோக்கி செல்லும் உலகப் பொருளாதாரம்?

இந்திய அரசு தொழிலாளர்களின் நலனுக்கு மட்டுமே 1.76 லட்சம் கோடி ரூபாயிலான திட்டத்தை அறிவித்துள்ளது. சுய தொழில் முனைவோர்களுக்கும், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கும் எந்த ஒரு பொருளாதார அறிவிப்பும் இதவரை அரசு தரப்பிலிருந்து வரவில்லை. இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கக் கூடியவர்கள் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களே என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் இந்திய அரசாங்கம் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1 சதவிகிதத்தைக் கூட இதுவரை பொருளாதார நடவடிக்கைக்காக ஒதுக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது" என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

சாதகங்களும், பாதங்களும்!

எல்லாவற்றிலும் சாதக பாதகங்கள் இருப்பது போல, ’ஹெலிகாப்டர் மணி’ விஷயத்தைக் கையாள்வதிலும் சாதக பாதகங்கள் இருக்கின்றன. சில பொருளாதார அறிஞர்கள் ஹெலிகாப்டர் மணி உத்தி மூலம் மக்களிடம் பணப் புழக்கம் ஏற்படும் என்கின்றனர். இதனால் மக்கள் பொருள்களை கடைகளில் வாங்கத் தொடங்குவார்கள். இதனால் தேவை அதிகரிக்கும். உற்பத்தி பெருகும். வேலை வாய்ப்புகள் உருவாகும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

சென்னை பாண்டி பஜார்
சென்னை பாண்டி பஜார்

இலவசமாகக் கிடைக்கும் பணத்தை மக்கள் செலவு செய்ய விரும்ப மாட்டார்கள் என்றும், இந்த உத்தியானது பண வீக்கத்திற்கு வழி வகுக்கும் என்கிற கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். ஆனால் தற்போதுள்ள இந்தியச் சூழலில் மக்களிடமும் பணம் இல்லை, கடைகளிலும் போதுமான அளவு இருப்பில்லை. இந்த இக்கட்டான நிலையைச் சமாளிக்க மத்திய அரசு பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டியது கட்டாயமான ஒன்று.

கொரோனா நாள்களை விட, கொரோனாவிற்குப் பிறகான நாள்கள் எப்படி இருக்கும் என்ற அச்சம்தான் இந்திய மக்களை நடுநடுங்கச் செய்கிறது. இப்படியான ஒரு இக்கட்டான நேரத்தில் மக்களுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்து தர வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாய கடமை என்பதை மத்தியில் ஆளும் அரசு அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு