கொரோனாவால் நாடு கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ள நிலையில், ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தை 4 சதவிகிதத்திலிருந்து 3.75 சதவிகிதமாகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி, ஆர்.பி.ஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்ற தகவல் வந்ததும், `நிதி நெருக்கடிக்கு உதவும் விதமாகப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவார்' என மக்களும் பொருளாதார நிபுணர்களும் எதிர்பார்த்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அனைவரின் எதிர்பார்ப்புகளை, சக்திகாந்த தாஸ் முழுமையாகப் பூர்த்தி செய்யாவிட்டாலும், அன்றைய தினத்தின் ஒரு சில முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அறிவிப்புகளில் வங்கிகளுக்கான ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களைக் குறைத்திருந்தது மிக முக்கியமான ஒன்று. கடந்த 16-ம் தேதி, இரண்டாவது முறையாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை மீண்டும் ஒருமுறை குறைத்து அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
வீட்டுக்கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் பற்றி தெரியும். அது என்ன ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என நீங்கள் கேட்கிறீர்களா? இதோ, இந்தக் கட்டுரை ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் சார்ந்த அனைத்துச் சந்தேகங்களுக்கும் விடை தருவதாக இருக்கும்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSரெப்போ வட்டிவிகிதம் என்றால் என்ன?
வங்கிகளிடம் போதிய பணம் இல்லாதபோது, அவை தங்களிடம் உள்ள கடன் பத்திரங்களை ரிசர்வ் வங்கியிடம் வைத்து, குறுகிய கால (Short Term Loan) மற்றும் நீண்ட காலக் கடன்களை (Long Term Loan) பெறுகின்றன. இந்தக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி, ஒரு குறிப்பிட்ட வட்டியை (Interest) வங்கிகளுக்கு விதிக்கிறது. குறுகிய காலக் கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமே, ரெப்போ வட்டி விகிதம் (Repo Rate) ஆகும். அதேபோல் நீண்ட காலக் கடன்களுக்கு விதிக்கும் வட்டி, பேங்க் ரேட் (Bank Rate) என அழைக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5 சதவிகிதம் என நிர்ணயித்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்களுக்கு 5 சதவிகிதம் வட்டியைச் செலுத்த வேண்டும்.
ரெப்போ விகிதம் உயரும்போது, வங்கிகள் மக்களுக்குக் கொடுக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதமும் உயரும். ரெப்போ விகிதம் குறையும்போது, வங்கிகள் மக்களுக்குக் கொடுக்கும் வாகனக் கடன், தனிநபர் கடன், வீட்டுக்கடன் எனப் பெரும்பாலான கடன்களின் வட்டி விகிதமும் குறையும். இதுதான் ரிசர்வ் வங்கியின் விதிமுறை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன?
மக்களால் தன்னிடம் வரவு வைக்கப்படும் பணத்தில், மக்களுக்கே கடன் கொடுத்ததுபோக மீதி இருக்கும் பணத்தை, ரிசர்வ் வங்கியிடம் ஒவ்வொரு வங்கியும் இருப்பு வைக்கும். அப்படி இருப்பு வைக்கும் தொகைக்கு, ரிசர்வ் வங்கியானது வட்டி தரும். அந்த வட்டி விகிதம்தான் `ரிவர்ஸ் ரெப்போ' (Reverse Repo Rate) வட்டி விகிதம்.
``ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகமாக வைத்திருந்தால், வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் தொடர்ந்து பணத்தை இருப்பு வைத்துக்கொண்டே இருக்கும். அதனால் மக்களுக்குக் கொடுக்கப்படும் கடன் அளவு குறைய வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி நினைக்கிறது. ஆனால், வாராக் கடன் தொகையின் அளவு அதிகரித்துக் கொண்டே வரும் இந்த நிலையில், வங்கிகள் யாரை நம்பியும் கடன் கொடுக்கத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

இன்றைய நிலையில் தொழில் இல்லை, வருமானம் இல்லை என்பதால் மக்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தும் சக்தி முற்றிலுமாகக் குறைந்திருக்கிறது. அதனால் வங்கிகள், வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ள அதிக அளவில் இருப்பு வைக்கவே முனைப்பு காட்டி வருகின்றன.
இருப்பு வைப்பதை விட, மக்களுக்குக் கடன் மூலமாகப் பணம் போய்ச்சேர வேண்டியது முக்கியம் என ரிசர்வ் வங்கி நினைப்பதால், வங்கிகளை அதிகமாகக் கடன் கொடுக்கச் சொல்லி ரிசர்வ் வங்கி மறைமுகமாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
`ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதத்தைத் தொடர்ந்து குறைப்பதன் மூலம், மக்களுக்குக் கடன் கொடுத்து அதன் மூலமாக, அதிக வருமானத்தை ஈட்ட வங்கிகள் முனைப்பு காட்டும். அதனால் மக்கள் கையிலும், நாட்டிலும் பணப்புழக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி நினைக்கிறது" என்றார் வங்கித் துறை சார்ந்த அதிகாரியான ஆர்.கணேஷன்.
ஒரே ஆண்டில் 5 முறை!
2019-ம் ஆண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தபோது, `டாக் ஆஃப் தி டவுன்' என்பார்களே... அப்படி ஊரேல்லாம் பேச்சாக இருந்தது. ரகுராம் ராஜன் கவர்னராக இருக்கும்போதும் ரெப்போ வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன. அப்போதெல்லாம் பேசாதவர்கள், இப்போது ஏன் பேசினார்கள் என்றுகூட நீங்கள் கேட்கலாம்.

அவர் அப்போது ஒரே ஆண்டில், ஐந்து முறை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை. ஆனால், சக்திகாந்த தாஸ் கவர்னரான குறுகியகாலத்தில், ஒரே ஆண்டில் ஐந்து முறை ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளார்.
ஏன் அடிக்கடி குறைக்கப்பட வேண்டும்?
மக்களிடம் பணப்புழக்கம் குறையும்போதும், தொழிற்துறையில் சுணக்கம் ஏற்படும்போதும் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கும். கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவில் மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. ஊரடங்கினால் அனைத்துத் தொழில்துறைகளும் முடங்கிப் போயிருக்கின்றன. நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்திருக்கிறது. இதனால், கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டில் ஐந்து முறை குறைத்ததில், 50 சதவிகிதத்தைக் கடந்த மார்ச் 27-ம் தேதி ஒரே முறையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. அதாவது அன்றைய தினம் 5.15 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை, 4.40 சதவிகிதமாகக் குறைத்தது. இது வரவேற்கத்தக்க விஷயம்தான்.

ரெப்போ வட்டி குறைக்கப்படும்பட்சத்தில் வங்கிகள் தாங்கள் பெற்ற பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதமாக, கடன்களுக்கான வட்டியைக் குறைக்கும். குறைந்த வட்டியில் கடன்கள் கிடைப்பதால் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான முதலீட்டினை வங்கியிலிருந்து கடனாகப் பெறுவார்கள். இதேபோல் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து, அவர்கள் அதிக அளவில் தொழில்துறை சார்ந்த பொருள்களை (Car, Cement, Steel, Electrical & Electronics & etc) வாங்குவார்கள். இதனால் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களின் விற்பனையும் அதிகரிக்கும், மக்களிடம் பணப்புழக்கம் கூடும்.
கடனுக்கான வட்டி குறைவதில்லையே?!
`ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதால் வங்கிகளில் வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையும் என்று சொல்கிறீர்கள். ஆனால், இதற்கு முன்னர் ரெப்போ விகிதம் குறைந்தபோது வீடு, கார் போன்ற கடன்களுக்கு வட்டி விகிதம் குறையவில்லையே?' என்கிற சந்தேகமும் உங்களுக்கு இருக்கும். இந்தச் சந்தேகத்திற்கான பதிலைப் பெற, கனரா வங்கியின் உதவிப் பொது மேலாளர் (ஓய்வு) ஆர்.செல்வமணியிடம் பேசினோம்.

``நம் நாட்டின் பணவீக்க ஏற்ற இறக்கத்தால் வங்கிகள் பாதிப்படையக்கூடாது என்ற காரணத்துக்காக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்து வருகிறது. எனவே, இது நேரடியாக வங்கிகளின் நலன் காக்கும் செயல்தான். ஒவ்வொரு வங்கிக்கும், மாதாந்திர நடைமுறைச்செலவுகள், வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடுகள், வங்கிக்கடன்களுக்கான வட்டிவிகிதங்கள் போன்றவற்றில் மாறுபாடு உள்ளது.
எனவே, ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்தபோதும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து அந்தந்த வங்கிகளுக்கென இருக்கும் ஏ.எல்.எம்., எனப்படும் சொத்துப் பொறுப்பு மேலாண்மைக் குழு (Asset and liability management) தீர்மானிக்கும். எனவே, ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைக்கும்போது வங்கியின் வட்டி விகிதம் குறையும் என உறுதியாகச் சொல்ல முடியாது" என்றார் அவர்.