சங்கீதம் ஒன்றுதான்; அது தரும் சந்தோஷமும் ஒன்றுதான். ஆனால், சிலருக்கு கர்னாடக சங்கீதம் பிடிக்கும்; வேறு சிலருக்கு லைட் மியூசிக் பிடிக்கும். அதே போல சந்தையிலும் வேல்யூ இன்வெஸ்டிங் (Value Investing), க்ரோத் இன்வெஸ்டிங் (Growth Investing) என்று இரண்டு விதமான முதலீட்டு முறைகள் உள்ளன. வேல்யூ இன்வெஸ்டிங்கின் தந்தை என்று போற்றப்படும் பெஞ்சமின் கிரஹாம் 1920-களில் அதை அறிமுகம் செய்தார்.
சந்தை என்றாலே ரிஸ்க் என்பதால்தான் பலரும் பங்குச் சந்தையில் இறங்க யோசிக்கிறார்கள். அந்த ரிஸ்க்கை மிதமாக்கும் வழிதான் அண்டர்வேல்யூட் ஸ்டாக்ஸைக் கண்டுபிடித்து முதலீடு செய்யும் வேல்யூ இன்வெஸ்டிங் முறை. பிரபல இன்வெஸ்டார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ``நல்ல கம்பெனிகளை அடையாளம் காண்பது பெரிதல்ல; நல்ல கம்பெனிகளை நல்ல விலையில் கண்டுபிடிப்பதுதான் பெரிய விஷயம்” என்கிறார். இதற்கு வேல்யூ இன்வெஸ்டிங் முறைதான் உதவும்.

வாரன் பஃபெட், பீட்டர் லின்ச் போன்ற முக்கிய முதலீட்டாளர்களின் மனதைக் கவர்ந்த அந்த முதலீட்டு முறை பற்றிப் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வேல்யூ இன்வெஸ்டிங்
சில கம்பெனிகளின் உள்ளார்ந்த மதிப்பு (Intrinsic Value) அதன் சந்தை விலையைவிட அதிகமாக இருக்கும். இதை அண்டர் வேல்யூட் ஸ்டாக் என்பார்கள். இன்னும் சிலவற்றில் சந்தை விலை, உள்ளார்ந்த மதிப்பைவிட அதிகமாக இருக்கும். இதை ஓவர்வேல்யூட் ஸ்டாக் என்பார்கள். அண்டர் வேல்யூட் கம்பெனிகளைத் தேடிப் பிடித்து வாங்குவதை வேல்யூ இன்வெஸ்டிங் என்கிறோம். இவற்றைக் கண்டுபிடிக்க சந்தை நிலவரம் பற்றியும், அந்தக் கம்பெனி சார்ந்திருக்கும் செக்டார் பற்றியும், கம்பெனியின் பிசினஸ் பற்றியும் முற்றிலும் அறிந்திருக்க வேண்டும்.
வேல்யூ இன்வெஸ்டார்கள் செய்வதென்ன?
ஒரு கம்பெனியின் பங்குகள் நிறைய நல்ல அம்சங்களைக் கொண்டிருந்தாலும் சந்தை அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்புண்டு. உதாரணமாக இன்று சந்தையில் மிகவும் பிரபலமாக இருக்கும் கம்பெனி A-யின் பங்குகளைவிட அதே துறையில் இருக்கும் கம்பெனி B-யின் பங்குகள் பலவித ரேஷியோக்களின் அடிப்படையில் சிறந்ததாக இருக்கலாம். ஆனாலும் அதன் சந்தை விலை அந்த மதிப்பை பிரதிபலிப்பதாக இல்லை என்றால், வேல்யூ இன்வெஸ்டிங் பக்தர்கள் சந்தையின் போக்கைப் பொருட்படுத்தாது ``என்றைக்கிருந்தாலும் B-தான் நல்ல பங்கு” என்று வாங்குவார்கள். இதை ``கான்ட்ரா இன்வெஸ்டிங்” என்றும் கூறலாம்.

வேல்யூ இன்வெஸ்டார்கள் உள்ளார்ந்த மதிப்பைவிட சந்தை விலை அதிகமாக இருக்கும் பங்குகளை வைத்திருக்கும் பட்சத்தில் அவற்றின் விலை இன்னும் ஏறத் தொடங்கினால் ``ஏறும் வரை ஏறட்டும்; பிறகு விற்கலாம்” என்று காத்திருக்க மாட்டார்கள். உதாரணமாக, ஒரு பங்கின் உள்ளார்ந்த மதிப்பு ரூ.100/-தான் என்றாலும் சந்தையின் கடைக்கண் பார்வை பட்டு அது ரூ.130/- ரூ.150/- என்று ஏற வாய்ப்பு உண்டு. அது எவ்வளவு ஏற்றம் பெற்றாலும் ``அதன் உள்ளார்ந்த மதிப்பு இவ்வளவு பெறாது; என்றாவது ஒரு நாள் விழும்போது பலமாக விழும்” என்று கணித்து வேல்யூ இன்வெஸ்டார்கள் அதை விற்று விலகுவார்கள்.
உள்ளார்ந்த மதிப்பைக் கண்டுபிடிப்பது எப்படி?
ஒரு கம்பெனியின் உள்ளார்ந்த மதிப்பைக் கண்டுபிடிக்க, சென்ற வீழ்ச்சியின்போது கம்பெனி ஈட்டிய லாபம், கம்பெனியின் கடன் குறித்து க்ரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகள் சொல்லும் ரிப்போர்ட், ஏதாவது மோசடிக் கேஸ்களில் பெயர் அடிபடுவது போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்வது உதவும். இவை தவிர, எபிட் (EBIT) எபிட்டா (EBITDA), டிஸ்கவுன்டட் கேஷ் ஃப்ளோ (DCF), பி.இ.ரேஷியோ, பி.பி.ரேஷியோ போன்ற பல ரேஷியோக்கள் உதவியுடனும் ஒரு கம்பெனியின் உள்ளார்ந்த மதிப்பைக் கண்டுபிடிக்க இயலும்.

ஆனால், நம் போன்ற சிறு முதலீட்டாளர்கள் இத்தனை ஆராய்ச்சி செய்வது கடினம். ஒரு கம்பெனியின் பெயரை உள்ளீடு செய்தாலே அதன் உள்ளார்ந்த மதிப்பைச் சொல்லும் ஸ்க்ரீனர், ட்ரேட்ப்ரெயின்ஸ் போன்ற தளங்களுக்கு ஒரு விஸிட் அடித்து ஒரு கம்பெனியின் உள்ளார்ந்த மதிப்பை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
பரபரப்பான உலகில் வேல்யூ இன்வெஸ்டிங்?
லாபம் பெற வேல்யூ இன்வெஸ்டிங் சொல்லும் வழி மிக நீண்டது.
``மிகுந்த ஆராய்ச்சி செய்து, குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு நல்ல பங்கைக் கண்டறிந்து வாங்க வேண்டும்; சந்தை அதன் உண்மை மதிப்பை உணரும்வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்; அதன்பின் நல்ல லாபம் பெறலாம்” என்னும் இந்த நீண்ட வழிக்கு இன்றைய பரபரப்பான உலகில் அதிகம் இடமில்லை என்பதும் உண்மை.
- அடுத்து திங்கள் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.