Published:Updated:

̀`சீனப்பொருள்களைப் புறக்கணித்தால் யாருக்கு பலன்?' - பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்

``சீனப் பொருள்களைத் தவிர்ப்பதால் பாதிப்பு நமக்குத்தானே தவிர சீனாவிற்கு இல்லை. சீனாவிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்கள், சீனாவின் ஏற்றுமதியில் வெறும் ஒரு சதவிகிதம்தான்."

கொரோனாவைத் தாண்டி பரபரப்பாகியிருக்கிறது இந்திய - சீன எல்லை விவகாரம். எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக `சீனப் பொருள்களைத் தடை செய்ய வேண்டும்' என்ற கோஷங்களை சிலர் எழுப்பி வருகிறார்கள். சீனப்பொருள் விற்பனையைப் படிப்படியாகக் குறைப்போம் எனத் தமிழக வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிக்கை வெளியிட்டார். எல்லைப் பிரச்னை என்பதையும் கடந்து இருநாட்டின் பொருளாதாரப் பிரச்னையாகவும் உருவெடுத்திருக்கும் இந்த விவகாரம் குறித்து பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானத்திடம் உரையாடினோம்.

``கொரோனா, ஊரடங்கு, எல்லையில் பதற்றம் என அடுத்தடுத்த பிரச்னைகள்... இதெல்லாம் தேசத்தின் பொருளாதாரத்தில் என்ன மாதிரி விளைவுகளை உருவாக்கும்? "

``நாம் ஏற்கெனவே கடுமையான பொருளாதாரப் பிரச்னைகளைச் சந்தித்து வருகிறோம். நம்முடைய பொருளாதார வளர்ச்சி வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஆறு வருடமாகவே இந்தியப் பொருளாதாரம் சரிந்துகொண்டேதான் வருகிறது. இதன் விளைவாக வேலையில்லா திண்டாட்டம், வருமான இழப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. கொரோனாவின் தீவிரம் இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. இதனை கட்டுப்படுத்த நாம் மேற்கொண்ட ஊரடங்காலும் பொருளாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. முன்னர் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குதான் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சென்றதைப் பார்த்தோம். இப்போது சென்னையைவிட்டு பிற மாவட்டங்களுக்குச் செல்லும் உள்மாநிலத்தொழிலாளர்களைப் பார்க்கிறோம். தற்போது சீன இந்திய மோதல் மூன்றாவது பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதனால் இந்த மூன்று பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் சமாளிப்பது என்பது சவாலான ஒன்றுதான்".

ஷி ஜின்பிங் - நரேந்திர மோடி
ஷி ஜின்பிங் - நரேந்திர மோடி

``இந்தியாவின் நட்பு நாடாகத்தானே சீனா இருந்தது? நம்முடைய தேவை இனி அவர்களுக்கு தேவையில்லை என முடிவு செய்துவிட்டார்களா? "

``சீனா நம்முடைய நட்பு நாடாகத்தான் இருந்தது. கடந்த 5,6 வருடங்களாக நம்முடைய வெளிநாட்டுக் கொள்கைகளிலும், நிலைப்பாடுகளிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னர் நாம் அணிசேரா நாடுகள் என்றவாறு ஒரு நடுநிலையான முடிவை எடுத்திருந்தோம். இன்று அதிலிருந்து நம்முடைய வெளிநாட்டுக் கொள்கை சற்றே மாறுபட்டு வருகிறது. இப்போது நாம் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாக்கலுக்குப் பின் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அமெரிக்கா , ஐரோப்பா (ஐரோப்பிய யூனியன்) போன்ற நாடுகள் Trade blocks - வர்த்தகத் தொகுதிகளை உருவாக்கி உள்ளன. அதே மாதிரி சீனா, ஆசியாவில் `Regional Comprehensive Economic Partnership - RCEP' -ஐக் கொண்டு வந்தது. அதில் இந்தியா மட்டும் கையெழுத்து இடவில்லை.

இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் என்று சொன்ன பிறகும், சீனா ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் முதலீடு செய்ய அனுமதி பெற வேண்டும் என்று இந்தியா சொன்னது. இவ்வாறு தனிப்பட்ட நாட்டிற்கு மட்டும் அனுமதி தேவை என்பதை சீனா சரியாக எடுத்துக் கொள்ளவில்லை. கொரோனோவிற்குப் பிறகு சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதை தவிர்த்துள்ளோம். இப்படி சில காரணங்களால் சீனாவுடனான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன."

சீனப் பொருள்களைப் புறக்கணிக்கலாம்... ஆனால்? - வணிகர்கள் முன்வைக்கும் பிரச்னைகள்!

``இந்தியா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. இனி என்னவாகும்?"

``உண்மைதான். ஆனால் நாம் சீனாவிற்கு அதிகமான ஏற்றுமதியைச் செய்யவில்லை. சீனாவின் இறக்குமதியில் 1 சதவிகிதம் அளவிற்குதான் நாம் ஏற்றுமதி செய்கிறோம். அதாவது 1 லட்சத்து 37 ஆயிரம் கோடிக்குச் சென்ற ஆண்டு நாம் ஏற்றுமதி செய்துள்ளோம். அதே சமயத்தில் சீனா 5.64 லட்சம் கோடிக்கு இந்தியாவில் தங்களது பொருள்களை இறக்குமதி செய்கிறார்கள். இதனால் இது சீனாவுக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. "

பேராசிரியர் ஜோதி சிவஞானம்
பேராசிரியர் ஜோதி சிவஞானம்

``சீனத் தயாரிப்புகளை முழுமையாகத் தவிர்ப்போம் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது... இது சாத்தியமா? நம்மால் சீனாவின் பொருள்களை முழுமையாகத் தவிர்க்க முடியுமா? "

``சீனாவின் பொருள்களைத் தவிர்ப்பதால் பாதிப்பு நமக்குத்தானே தவிர சீனாவிற்கு இல்லை. சீனாவிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்கள், சீனாவின் ஏற்றுமதியில் ஒருதுளிதான். உலக நாடுகள் அனைத்திற்கும் சீனா ஏற்றுமதி செய்துவருகிறது. சீனாவிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருள்கள் நம்முடைய ஒட்டு மொத்த இறக்குமதியில் 14 சதவிகிதமாக இருக்கிறது. நாம்தான் சீனாவை அதிகமாகச் சார்ந்திருக்கிறோமே தவிர அவர்கள் அல்ல. அதிலும் நாம் இறக்குமதி செய்யும் பொருள்கள் அனைத்துமே பெரும்பாலும் உள்ளீட்டுப் பொருள்களே (intermediary goods - inputs). இறக்குமதி செய்யப்படும் பொருள்களில் முறையே லிக்யூட் ஃபெர்டிலைசர்ஸ் 60 சதவிகிதமாகவும், எலக்ட்ரானிக் ஸ்பேர்பார்ட்ஸ் 90 சதவிகிதமாகவும் இருக்கின்றன. ஆட்டோமொபைலுக்குத் தேவையான உதிரிப் பாகங்களெல்லாம் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அதை நாம் முழுமையான ஆட்டோமொபைல் சாதனமாக தயாரித்து இங்கிருந்து ஏற்றுமதி செய்கிறோம். சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு முக்கியக் காரணம் அதன் குறைவான விலையே. உலகின் பிற நாடுகளின் பொருள்களை விட 30 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் சீனப் பொருள்களின் விலை குறைவாக இருக்கும். இதனால்தான் நம்மால் விலை குறைவாக ஏற்றுமதியும் செய்யமுடிகிறது. இந்தியாவில் 90 சதவிகித மக்கள் சீனப் பொருள்களையே வாங்குகிறார்கள். இங்கு சீன மொபைலின் ஸ்பேர் பார்ட்ஸ்களை இறக்குமதி செய்து அதன் மூலம் மொபைல்களைத் தயாரித்து விற்கிறோம். இதைத் தடுத்தால் தயாரிப்பு நிறுவனங்களில் வேலை செய்யும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் சீனாவின் பொருள்களைப் புறக்கணிப்பதால் அதன் பாதிப்பு என்பது நமக்குத்தானே தவிர சீனாவிற்கு அல்ல. நீண்ட காலத்திற்குப் பின் வேண்டுமானால் இந்த நிலை மாறாலாம். ஆனால் தற்போது சீனப் பொருள்களைப் புறக்கணித்தால் அதனால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்களே. அதனால் உடனடியாக நம்மால் சீனப் பொருள்களைப் புறக்கணித்துவிட முடியாது ."

``கொரோனா வைரஸால் சீனா மேல் அனைத்து உலக நாடுகளும் கடும் கோபத்தில் உள்ளன. அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவை ஒதுக்கிவிட முடியுமா ?"

``சீனாவை ஒதுக்கிவிட முடியாது. உலகமயமாக்கலுக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளில் முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் எல்லாம் அப்படியே மேற்கிலிருந்து சீனாவிற்கு மாறியுள்ளன. இதற்குக் காரணம் அங்கு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் பல மடங்கு அதிகமானதுதான். இதனால் உற்பத்தி விலையும் குறைகிறது. அங்கு அத்தனை நபர்களுக்கும் குறைந்தபட்ச கல்வியும், வேலைவாய்ப்புத் திறனும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் இன்னமும் உள்ளனர். நம் நாட்டில் உயர் கல்வி படிக்கச் செல்கிறவர்கள் (Gross Enrollment Ratio) என்பது 25 சதவிகிதம்தான். அதுவும் தமிழ்நாடு மற்றும் இதர தெற்கு மாநிலங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் இது 25 சதவிகிதத்திற்கும் கீழே வரும். பீகாரில் 100 பேரில் 14 பேர் மட்டுமே உயர் கல்விக்குச் செல்கிறார்கள். ஆனால் சீனாவில் அடிப்படை வசதிகள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தொழில்துறைக்கான பல பொருள்களில் க்ளோபல் சப்ளை செயினாக சீனாதான் செயல்படுகிறது. சீனாவைத் தவிர்த்து விட்டு யாரும் எதுவும் செய்து விட முடியாது."

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

``அமெரிக்கா - சீன வர்த்தகப் போர் போல் இந்திய- சீன வர்த்தகப் போர் உருவாக வாய்ப்பு இருக்கிறதா? "

``அமெரிக்கா சீனா வர்த்தகப் போர் என்பது போர்த்தந்திரம் போன்ற ஒன்றுதான். அவர்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் வர்த்தக ஒப்பந்தம் போடப்படலாம். கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற பெரு நிறுவனங்கள் எல்லாம் சீனாவில்தான் அதிக முதலீட்டைச் செய்துள்ளனர். அவர்கள் யாரும் வெளியில் வர மாட்டார்கள். அதனால் நாம் எப்போதும் அணி சேரா நாடுகள் போன்றுதான் இருக்கவேண்டும். சீனா எப்படி உலகம் முழுவதும் தொழில்துறைக்குத் தேவையான பொருள்களை தயாரிக்கிறதோ அதேபோல பணித்துறையில் இந்தியாதான் முன்னிலையில் உள்ளது. நமது ஏற்றுமதியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை நாம் இன்னும் விரிவுப்படுத்த வேண்டும். அதே போல் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை இங்கே உற்பத்தி செய்ய வேண்டும். அவர்கள் 30 வருடம் தொடர்ந்து அதீத வளர்ச்சியை அடைந்துள்ளனர். அவர்களின் உள்நாட்டு உற்பத்தி நமது உள்நாட்டு உற்பத்தியைவிட 5 மடங்கு அதிகமானது. அவர்களின் தனிநபர் வருமானமும் அதிகம். சீனாவை நாம் நமது சுயசார்பு பொருளாதாரம் மூலமாகவே தோற்கடிக்க முடியுமே தவிர சீனப் பொருள்களைப் புறக்கணிப்பதாலோ, போர் செய்வதன் மூலமாகவோ வென்றிட முடியாது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு