Published:Updated:

ஆன்ட் குழுமத்தின் ஐ.பி.ஓ நிறுத்தம்... ஜாக் மாவுக்கு ஏன் செக் வைக்கிறது சீனா?

Ant Group
Ant Group ( AP Photo/Kin Cheung )

சாதனை ஐ.பி.ஓ என சர்வதேச அளவில் பேசப்பட்டு, எதிர்பார்க்கப்பட்ட ஆன்ட் குழுமத்தின் ஐ.பி.ஓ தற்போது கடும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது.

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஐ.பி.ஓ எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று ஆன்ட் குழுமத்தின் ஐ.பி.ஓ. சுமார் 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐ.பி.ஓ இது. ஆனால், பட்டியலாகும் சில நாள்களுக்கு முன்பாக இது திடீரென நிறுத்தப்பட்டிருக்கிறது. ஜாக் மா மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பட்டிருக்கிறது.

இந்த ஐ.பி.ஓ நிறுத்தப்பட்டதால் அலிபாபா நிறுவனத்தின் பங்குகளும் கடுமையாக சரிந்திருக்கின்றன. இதனால் ஒரே நாளில் மூன்று பில்லியன் டாலர் அளவுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.22,500 கோடி) சொத்து மதிப்பை ஜாக் மா இழந்திருக்கிறார்.

காரணம் என்ன?

Ant Group
Ant Group
Chinatopix Via AP

இந்த நிறுத்தத்திற்கான அதிகாரபூர்வமான காரணத்தை ஆன்ட் மற்றும் சீன ஒழுங்குமுறை ஆணையங்கள் அறிவிக்கவில்லை. ஆனால், ``ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகள் மாறியிருப்பதால், அந்த விதிமுறைகளை ஆன்ட் குழுமம் பூர்த்தி செய்ய வேண்டும்" என்று தகவல் அறிந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கிரே மார்க்கெட்டில் இந்தப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சுமார் 50% அளவுக்கு பிரீமியத்தில் வர்த்தகம் நடந்தது. ஆனால், இப்போது இந்தத் தடையால் சுமார் ஆறு மாததுக்குப் பிறகே, இந்த ஐ.பி.ஓ மீண்டும் வரும் நடவடிக்கை தொடங்கும் எனத் தெரிகிறது.

சீனாவை விமர்சித்தது காரணமா?

அலிபே (Alipay) என்னும் நிறுவனம் ஆன்ட் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிதிசார்ந்த செயல்பாடுகளில் உள்ள பிசினஸ் மாடல் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாகத் தெரிகிறது. தவிர, இரு வாரங்களுக்கு முன்பு சீன அரசின்மீது ஜாக் மா கடும் விமர்சனங்களை வைத்திருந்தார். இதையடுத்து,``சீனாவில் எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும் சீன அரசின் ஆசீர்வாதம் இல்லை என்றால், தொழில் செய்ய முடியாது’’ என்றும் தொழில் துறையைச் சார்ந்தவர்களும் விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள்.

A sign with a QR code for payment via Alipay
A sign with a QR code for payment via Alipay
AP Photo/Mark Schiefelbein

இந்நிலையில், ஐ.பி.ஓ வெளியிடுவதற்கான அனுமதியை ஏற்கெனவே தந்திருந்த சீன அரசாங்கம் கடைசி நேரத்தில் அதைத் தடுத்து நிறுத்தியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ ஒரு நோக்கத்தில்தான் இந்த நடவடிக்கையை சீன அரசாங்கம் எடுத்திருக்கலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. பிரபல பங்குத் தரகு நிறுவனமான ஜெஃப்ரே, ``இந்த நடவடிக்கை வேண்டுமென்றே எடுக்கப்பட்ட நடவடிக்கை போலவே தெரிகிறது'' என்று கருத்து தெரிவித்திருக்கிறது.

இறக்கம் கண்ட பங்கு விலை...

ஆன்ட் நிறுவனத்தின் பங்கு ஐ.பி.ஓ நிறுத்தப்படுவதாக செவ்வாய்க்கிழமை மாலை செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அலிபாபா குரூப் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்கு விலை ஹாங்காங் பங்குச் சந்தையில் 7.1% அளவுக்குக் குறைந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த அளவுக்கு அலிபாபா குரூப் நிறுவனத்தின் பங்கு விலை குறைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

Ant Group's mascot is displayed at the Ant Group office in Hong Kong.
Ant Group's mascot is displayed at the Ant Group office in Hong Kong.
AP Photo/Kin Cheung

வருத்தம் தெரிவித்த அலிபாபா!

இந்த ஐ.பி.ஓ நிறுத்தப்படுவதாகச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து அலிபாபா நிறுவனம் முதலீட்டாளர்களிடம் மன்னிப்பு கேட்டு, வருத்தம் தெரிவித்திருக்கிறது. ``இது தொடர்பாக முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியத்தைக் கண்டு வருந்துகிறோம். அரசிடம் உரிய விளக்கம் தந்து, மீண்டும் இந்த ஐ.பி.ஓ-வை முதலீட்டாளர்களுக்குத் தருவோம்'' என்று கருத்து வெளியிட்டிருக்கிறது சீன அரசாங்கம்.

உலகின் மிகப் பெரிய ஐ.பி.ஓ

ஒருவேளை, இந்த ஐ.பி.ஓ வெற்றி அடைந்திருந்தால் 34.5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக ஆன்ட் மாறி இருக்கும். இதற்கு முன்பு அராம்கோ நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் 29.4 பில்லியன் டாலர் அளவுக்கு நிதியைத் திரட்டியது. அதற்கு முன்பு அலிபாபா நிறுவனம் 25 பில்லியன் டாலரையும், அக்ரிகல்ச்சுரல் பேங்க் ஆஃப் சைனா 22.1 பில்லியன் டாலரையும் ஐ.பி.ஓ மூலம் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

இப்படி சாதனை ஐ.பி.ஓ என சர்வதேச அளவில் பேசப்பட்டு, எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐ.பி.ஓ தற்போது கடும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து ஜாக் மாவின் அடுத்த மூவ் எப்படிப்பட்டதாக இருக்கும் என உலகமே ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு