பர்சனல் ஃபைனான்ஸின் முக்கியத் தூண்களான வருமானம், பட்ஜெட், செலவு, அவசரகால நிதி ஆகியவற்றைப் பார்த்தோம். அடுத்து வருவது சேமிப்பும் முதலீடும். நம்மில் நிறைய பேர் இவை இரண்டும் ஒன்றே என்று எண்ணுகிறோம். அதனால்தான் சேமிக்கத் தெரிந்த நமக்கு செல்வத்தைப் பெருக்கத் தெரியவில்லை.
சேமிப்பும் முதலீடும் ஒன்று என எண்ணுவது, நிறத்தை மட்டும் பார்த்து பாலும் கள்ளும் ஒன்று என்று முடிவு கட்டுவது போலத்தான். வரவில் செலவு போக மீதியாவதை சேமிப்பு என்கிறோம். இந்த சேமிப்பை இரண்டாக, நாலாகப் பெருக்கும் வழிகளை முதலீடு என்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உதாரணமாக, சில மாம்பழங்களைப் பாதுகாத்து அடுத்த வாரம் முழுவதும் தினம் ஒன்றாகச் சாப்பிடுவது சேமிப்பு. ஒரு மாங்கொட்டையை ஊன்றி, பொறுமையாக வளர்த்து, நூற்றுக்கணக்கான பழங்கள் பெறுவது முதலீடு.
சேமிப்பில் இந்தியர்களான நாம் கில்லாடிகள்தாம். ஒரு சராசரி இந்தியர் தன் குடும்ப வருமானத்தில் கிட்டத்தட்ட 20 முதல் 25% வரை சேமிப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. (கோவிட்டுக்குப் பின் இது 18 சதவிகிதமாகக் குறைந்துள்ளது வருந்தத்தக்கது). ஆனால், இந்த சேமிப்பை வெற்றிகரமான முதலீடாக மாற்ற சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள கீழ்க்கண்ட வித்தியாசங்களை நாம் உணர்தல் அவசியம்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்குள் வரக்கூடிய சிறு செலவுகளுக்கு உதவக்கூடியது சேமிப்பு. உதாரணமாக, ஸ்மார்ட் போன் வாங்குவது, பொங்கல், தீபாவளிக்கு செலவு செய்வது, வட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வது, வருடாந்தர பள்ளிக் கல்விக் கட்டணம், இன்ஷூரன்ஸ் மற்றும் வருமான வரி கட்டுதல் போன்ற சிறு குறிக்கோள்களை அடையத் தேவை சேமிப்பு.
நீண்ட கால குறிக்கோள்களான குழந்தைகள் மேற்படிப்பு, திருமணம், நமக்கு வீடு வாங்குதல், நமது ஓய்வுக்கால நல்வாழ்வு போன்றவற்றை அடையத் தேவைப்படுவது முதலீடு.
சேமிப்பை எளிதாகப் பணமாக்கும் விதத்தில் வைத்திருத்தல் அவசியம். ஆனால், முதலீடு என்பது சற்று கைக்கெட்டாமல் இருக்கும்வரைதான் அதன் வளர்ச்சி கெடாமல் இருக்கும்.

அதனால்தான் நம் முன்னோர், ``பணம் கண்ணுக்குத் தெரியாமல் வளர மண்ணில் போடு அல்லது பொன்னில் போடு” என்றனர்.
ரிஸ்க்கைப் பொறுத்தவரை, சேமிப்பில் அதிக ரிஸ்க் கிடையாது. ஏனெனில், அது குறுகிய காலத்தில் உபயோகமாகிவிடும். மேலும் அது பணமாக நம் வீட்டில் அல்லது வங்கி முதலீடுகள், லிக்விட் ஃபண்டுகள் போன்ற பாதுகாப்பு நிறைந்த இடங்களில் இருக்கும். முதலீட்டைப் பொறுத்தவரை, நாம் எங்கு முதலீடு செய்கிறோம் என்பதைப் பொறுத்து ரிஸ்க் அமையும். பங்குச் சந்தையில் ரிஸ்க் ஓரளவு அதிகம்தான். ஆனால், நல்ல அடிப்படை உள்ள பங்குகள் தரும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது. மியூச்சுவல் ஃபண்டில் உள்ள ரிஸ்க், ஃபண்ட் மேனேஜரின் திறமையால் கட்டுப்படுத்தப் படுகிறது. எனவே, முதலீட்டாளர்கள் அது பற்றி பெரிய கவலை எதுவும் இல்லாமல் இருக்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரிஸ்க் எவ்வளவோ, ரிட்டர்ன் (லாபம்) அவ்வளவு என்பார்கள். பத்தாயிரம் ரூபாய் பணத்தைப் பெட்டியில் பூட்டிவைத்தால் ரிஸ்க்கே இல்லாமல், பத்திரமாக இருக்கும்; ஆனால், வளர்ச்சி காணுமா என்றால் காணாது. 1980-ல் அதே ரூ.10,000-த்தைக் கொண்டு விப்ரோ பங்குகளை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு சுமார் ரூ. 550 கோடி. இப்படி ஆறை நூறு ஆக்குவதுதான் முதலீட்டின் மகிமை.
ஆனால், நம் எல்லாப் பணத்தையும் சேமிப்பாக வைத்திருப்பது ஒரு விதமான தவறு என்றால், அத்தனையையும் முதலீடு செய்வதும் தவறுதான். நம் குறுகிய காலத்தேவைகளுக்கு சேமிப்புதான் கை கொடுக்கும். முதலீடு வளர்வதற்கு எப்போதுமே அதிக கால அவகாசம் தேவை. நீண்ட காலத் தேவைகளுக்கு ஏஜென்ட் உதவியுடன் பத்திரங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். தன்னம்பிக்கையும் திறமையும் உள்ளவர்கள் பங்குச் சந்தையிலும் ஒரு கை பார்க்கலாம்.

பர்சனல் ஃபைனான்ஸ், முதலீடுகளை கடன் சார்ந்தவை, பங்கு சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கிறது.
வங்கிகள், போஸ்ட் ஆபீஸ், கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள் போன்றவை கடன் சார்ந்தவை.
மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, டெரிவேடிவ்ஸ் போன்றவை பங்கு சார்ந்தவை.
எப்போதுமே, நமக்கு அவசரமாகத் தேவைப்படாத பணத்தை மட்டுமே நாம் பங்கு சார்ந்த இடங்களில் முதலீடு செய்ய வேண்டும். குறுகிய காலத் தேவைகளுக்கு பேங்க் எஃப்டி, லிக்விட் ஃபண்ட், போஸ்ட் ஆபீஸ் சேமிப்புகள் போன்ற கடன் சார்ந்த முதலீடுகள் உதவும். இப்படிப் பிரித்து முதலீடு செய்யக் கற்றுக் கொண்டால், குறைவான வருமானத்திலும் நிறைவாக வாழலாம்.
- அடுத்து திங்கள் கிழமை சந்திப்போம்.
பர்சனல் ஃபைனான்ஸ் கலையை உங்களுக்கு சொல்லித்தரும் புதிய தொடர். திங்கள், புதன், வெள்ளிதோறும் காலை 9 மணிக்கு. உங்கள் விகடன்.காமில்..!