Published:Updated:

RBI தலையீடு, நிர்வாக மாற்றம்; பங்கு விலை கடும் வீழ்ச்சி; சிக்கலில் இருக்கிறதா RBL வங்கி?

ஆர்பிஎல் வங்கி
News
ஆர்பிஎல் வங்கி ( RBL Bank )

தனியார் வங்கியில் ரிசர்வ் வங்கி இயக்குநரை நியமிப்பது முதல் முறை அல்ல. ஏற்கெனவே யெஸ் வங்கி, உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் ஜே அண்ட் கே வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கூடுதல் இயக்குநரை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.

வங்கிகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லாதபோது, அவசர நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி தலையிட்டு நிர்வாகத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது ஆர்பிஎல் வங்கியில் ரிசர்வ் வங்கி தலையிட்டுள்ளது. ஆர்பிஎல் வங்கியின் இயக்குநர் குழுவில் கூடுதல் இயக்குநராக யோகேஷ் கே தயாள் என்பவரை நியமித்துள்ளது.

இவ்வாறு தனியார் வங்கியில் ரிசர்வ் வங்கி இயக்குநரை நியமிப்பது முதல் முறை அல்ல. ஏற்கெனவே யெஸ் வங்கி, உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, லஷ்மி விலாஸ் வங்கி மற்றும் ஜே அண்ட் கே வங்கி உள்ளிட்ட வங்கிகளில் கூடுதல் இயக்குநரை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.

இப்போது ஆர்பிஎல் வங்கியில் ரிசர்வ் வங்கி தலையிடக் காரணம் என்ன என்பது இதுவரை சரிவர தெரியவில்லை.

RBI
RBI
Photo: Vikatan / Ashok kumar.D

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆர்பிஎல் வங்கியின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 93 சதவிகிதம் குறைந்து ரூ.9.7 கோடியாக உள்ளது. மேலும் தொடர்ந்து மூன்றாண்டுகளாகவே இதன் லாப வளர்ச்சி இறங்கு முகத்தில்தான் இருந்துவருகிறது.

2018-19ல் ரூ.867 கோடியாக இருந்த லாபம் 2020-21ல் ரூ.508 கோடியாகக் குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இதன் பாதுகாப்பற்ற கடன் அளவும் அதிகரித்துவருகிறது. தற்போது இதன் நிகர வாராக்கடன் 2.14 சதவிகிதமாக உள்ளது. இதன் சொத்துகள் மீதான வருமானம் 1.27 சதவிகிதத்திலிருந்து 0.54 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இத்தகைய நிலையில் ரிசர்வ் வங்கி ஆர்பிஎல் வங்கியின் நிர்வாகத்தில் தலையிட்டுள்ளது. கூடுதல் இயக்குநராக யோகேஷ் கே தயாளை நியமித்துள்ளது. இவர் நியமிக்கப்பட்ட நிலையில் ஆர்பிஎல் வங்கியின் நிர்வாகத்தில் மாற்றங்கள் நடக்க தொடங்கியுள்ளன.

இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான விஸ்வவீர் அஹூஜா திடீரென்று மருத்துவ காரணங்களுக்காக விடுப்பில் செல்வதாகக் கோரிக்கை வைத்துள்ளார். இவரது கோரிக்கையை வங்கி குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இவர் விடுப்பில் செல்ல இதுதான் உண்மையான காரணமா என்பதும் தெரியவில்லை. மேலும் ராஜிவ் அஹூஜாவை இடைக்கால நிர்வாக இயக்குநர், தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க வங்கிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

விஸ்வவீர் அஹூஜா
விஸ்வவீர் அஹூஜா

இப்படி தொடர்ந்து மாற்றங்கள் நிகழும் நிலையில் ஆர்பிஎல் வங்கியின் பங்கு விலையும் கடும் சரிவைச் சந்தித்திருக்கிறது. திங்கள் அன்றைய வர்த்தகத்தில் பங்கின் விலை அதிகபட்சமாக 23 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு வர்த்தக முடிவில் 18 சதவிகிதத்துகும் மேல் வீழ்ச்சி கண்டது.

இந்நிலையில், ஆர்பிஎல் வங்கி தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், ``ஆர்பிஎல் வங்கியில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் முதலீட்டாளர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் இவ்வங்கியின் 17.49 சதவிகிதப் பங்குகள் சிறு முதலீட்டாளர்கள் வசம் உள்ளது.

வங்கியின் நிதி நிலையும் சிறப்பாக இல்லாததால் திவால் ஆகுமோ என்ற கேள்வியும் உண்டாகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூடுதல் இயக்குநர் நியமனத்துக்கும், வங்கியின் நிதிநிலைக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளது.

தற்போது வங்கியின் செயல்பாடு, நிர்வாகத்தில் நிகழும் மாற்றங்கள் குறித்து உண்மை நிலவரம் என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்" என்றனர்.