மீண்டுமொரு டெக் பபுள்?! திடீரென கூகுள், ஃபேஸ்புக் பங்குகள் சரிய காரணம் என்ன?

ஆப்பிள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஜூம், ஆல்ஃபபெட், நெட்ஃபிளிக்ஸ், சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட அனைத்து பங்குகளும் விலைச் சரிவை சந்தித்திருக்கின்றன.
இதுவரை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்த அமெரிக்க நாட்டு பங்குச் சந்தை தற்போது தொடர் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த மூன்று நாள்களாக 10 விகித அளவுக்கு நாஸ்டாக் இண்டெக்ஸ் சரிந்திருக்கிறது.
டெக்னாலஜி பங்குகள்
குறிப்பாக டெக்னாலஜி பங்குகள் இந்தச் சரிவில் முன்னிலை வகிக்கின்றன. ஆப்பிள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஜூம், ஆல்ஃபபெட், நெட்ஃபிளிக்ஸ், சாஃப்ட்பேங்க் உள்ளிட்ட அனைத்து பங்குகளும் விலைச் சரிவை சந்தித்திருக்கின்றன.
குறிப்பாக, டெஸ்லா பங்கு விலை 21 சதவிகிதத்துக்கு மேல் சரிந்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு 1,600 கோடி டாலர் அளவுக்கு சரிந்திருப்பதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்திருக்கிறது.
காரணம் என்ன?
எஸ் அண்ட் பி 500 குறியீட்டில் டெஸ்லா இடம்பெறாதது மற்றும் டெஸ்லாவின் போட்டியாளரான நிகோலாவுடன் ஜெனரல் மோட்டார்ஸ் கைகோத்தது ஆகிய காரணங்களால் டெஸ்லா பங்கு கடுமையாகச் சரிந்தது. ஆனால், மற்ற பங்குகள் சரிந்ததற்கு காரணம் அந்தப் பங்குகளின் மதிப்பீடுதான்.

கோவிட் 19-க்குப் பிறகு, தகவல் தொழில்நுட்ப (இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி - ஐ.டி) நிறுவனப் பங்குகள் அதிகளவு ஏற்றத்தைச் சந்தித்தன. ஆனால், இந்த மதிப்பீடுகள் மிகையாக இருப்பதை சந்தை உணர்ந்ததால் இந்த நிறுவனப் பங்குகள் தற்போது சரிவைச் சந்தித்திருக்கின்றன. அமெரிக்காவில் டெக்னாலஜி பங்குகளுக்கு எப்போதும் ஒரு கவர்ச்சி இருக்கும். 2000-ம் ஆண்டு தொடக்கத்தில் இதேபோன்ற ஒரு சூழலில் டெக்னாலஜி பங்குகள் வேகமாக வளர்ந்தன. வளர்ந்த வேகத்தில் சரிந்தன.
அப்போது வருமானமே இல்லாமல் பல நிறுவனப் பங்குகளின் வளர்ச்சி இருந்தது. ஆனால், தற்போது வேறு பங்குகளில் முதலீட்டுக்கு வாய்ப்பு இல்லாததால் டெக்னாலஜி நிறுவனப் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிகமாக முதலீடு செய்து அதன் மதிப்பீட்டை முதலீட்டாளர்கள் உயர்த்தி இருக்கிறார்கள்.
டெக்னாலஜி பபுள்?
சிலர் டெக்னாலஜி பபுள் வரக்கூடும் என்று கூட கணித்திருக்கிறார்கள். சில சந்தை வல்லுநர்கள் தற்போதைய சூழலில் இருந்து 10% முதல் 20% வரை குறையக்கூடும் எனக் கணித்திருக்கிறார்கள். பங்குகளின் மதிப்பீடு தவிர புறக்காரணிகளும் உள்ளன. அது அமெரிக்காவின் கடன்.
தற்போது அமெரிக்க பொருளாதாரத்தின் அளவுக்கு ஏற்ப கடன் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( ஜி.டி.பி) சுமார் 98 சதவிகித அளவுக்கு கடன் இருக்கும். தவிர, இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, அதிக கடன் சுமையை தற்போது அமெரிக்கா சந்திக்க இருக்கிறது.

இந்தக் கடனும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, அமெரிக்க பொருளாதார வளர்ச்சி மைனஸ் 31 சதவிகிதமாக இருக்கிறது. மேலும், இன்னும் சில மாதங்களில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. எப்போதும் தேர்தல் சமயங்களில் ஒரு நிச்சயமற்ற சூழல் பங்குச் சந்தையில் இருக்கும். தவிர, அமெரிக்க பங்குச் சந்தை என்பது முதிர்ச்சி அடைந்த சந்தை. அதனால் அங்கு ஊக வணிகமும் (ஸ்பெகுலேஷன்) அதிகமாக இருக்கும். இதுபோல பல காரணிகள் இணைந்திருப்பதால் அமெரிக்க பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
பெரிய சரிவு நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று பல வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். ஆனால், அது எப்போது என யாருக்கும் தெரியாது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
- வெ.விஜயகுமார் - நிறுவனர் - Zebu Share and Wealth Managements Pvt Ltd.