Published:Updated:

₹4,200 கோடியாக உயர்ந்த சிஎஸ்கே-வின் மதிப்பு; விரைவில் யூனிகார்னாக மாறுமா?

அடுத்த ஐ.பி.எல் தொடரில் இரு புதிய அணிகள் சேர்க்கப்படும். அப்போது சி.எஸ்.கே-வின் ஒரு பங்கு சுமார் 200 ரூபாயைத் தொடக்கூடும். அதன்மூலம் சி.எஸ்.கே.வின் சந்தை மதிப்பு ரூ.8,000 கோடிக்குமேல் உயரும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

கடந்த வாரம் நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றிருக்கிறது. இதன் மூலம் விளையாட்டுப் பிரிவில் முதல் யுனிகார்ன் நிறுவனமாக சி.எஸ்.கே மாறும் என நிதி வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்
டேடிஸ் ஆர்மிதான், தோனி ஃபார்மில் இல்லைதான்... ஆனாலும் சென்னை சாம்பியன் ஆகிறதே எப்படி?

ரூ.25-லிருந்து ரூ.135-க்கு...

கடந்த 2015-ல் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திலிருந்து சி.எஸ்.கே தனியாகப் பிரிக்கப்பட்டது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத சி.எஸ்.கே நிறுவனத்தின் ஒரு பங்கு விலை மூன்று ஆண்டுகளுக்குமுன்பு க்ரே மார்க்கெட்டில் 25 ரூபாயாக வர்த்தகமானது. கடந்த ஆண்டு முடிவில் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை வர்த்தகமானது. ஆனால், சமீபத்திய வெற்றிக்குப்பிறகு ஒரு பங்கின் விலை 135 ரூபாயாக இருக்கிறது. இதன் மூலம் சி.எஸ்.கே.வின் சந்தை மதிப்பு சுமார் ரூ.4,200 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப் பட்டிருக்கிறது.

கடந்த ஏப்ரலில் இந்தியாவில் ஐ.பி.எல் பாதியில் நிறுத்தப்பட்டபோது, சி.எஸ்.கே-வின் சந்தை மதிப்பு ரூ.2,465 கோடியாக இருந்திருக்கும் என்கிறார்கள். அதன்பிறகு ஐ.பி.எல் வெற்றி காரணமாக சி.எஸ்.கே-வின் சந்தை மதிப்பு வேகமாக உயர்ந்திருக்கிறது. அது இந்தியா சிமெண்ட்ஸ் பங்கிலும் எதிரொலித்திருக்கிறது.

Chennai Super Kings
Chennai Super Kings

ஒன்பது ஆண்டில் நான்கு முறை...

சி.எஸ்.கே சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்வதற்கும் இந்த அணியின் தொடர்ச்சியான வெற்றியும் ஒரு காரணமாகும். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரைத் தவிர, மற்ற அனைத்து ஆண்டுகளிலும் சென்னையின் சிறப்பான பங்களிப்பு தொடர்ந்திருக்கிறது. இதுவரை ஒன்பது முறை இறுதி ஆட்டத்தில் விளையாடிய சி.எஸ்.கே, நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. 196 போட்டிகளில், 117 போட்டிகளில் ஜெயித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோனிக்குப் பிறகு...

சி.எஸ்.கே அணி தொடங்கப்பட்டதிலிருந்து தோனி முக்கியப் பங்கு வகித்துவருகிறார். இந்த அணியின் சந்தை மதிப்பு ஏற்றத்துக்கு கேப்டன் தோனியும் முக்கிய காரணம். ஆனால், 40 வயதாகும் தோனி இன்னும் எத்தனை ஆண்டு காலம் விளையாடுவார் என்பது கேள்விக்குறியே. தோனி இல்லாமல் சி.எஸ்.கே இல்லை என அணியின் உரிமையாளர் என்.ஸ்ரீனிவாசன் தெரிவித்திருக்கிறார். ஒருவேளை, தோனி சி.எஸ்.கே அணியில் இருந்து விளையாடவில்லை என்றாலும், அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் என ஏதாவது ஒருவகையில் சி.எஸ்.கே அணியுடன் இருப்பார் என்பதே அனைத்து ரசிகர்களின் எதிர்பார்பு. அதனால் தோனி சி.எஸ்.கே அணியில் இல்லை என்றாலும் அவரது மேஜிக் தொடரும், அந்த அணியின் மதிப்பு குறையாது என்றே கருதப்படுகிறது.

தோனி, ஸ்ரீனிவாசன்
தோனி, ஸ்ரீனிவாசன்
வாத்தியாராக தோனி, கோலி படையில் மீண்டும் அஷ்வின்... டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு எப்படி?

ரூ.8,000 கோடிக்குமேல் உயரும்...

அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இரு புதிய அணிகள் சேர்க்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அப்போது சி.எஸ்.கே-வின் ஒரு பங்கு சுமார் 200 ரூபாயைத் தொடக்கூடும். அதன்மூலம் சி.எஸ்.கே-வின் சந்தை மதிப்பு ரூ.8,000 கோடிக்குமேல் உயரும் என இந்தத் துறை வல்லுநர்கள் கணிக்கின்றனர். ஆனால், சி.எஸ்.கே.யின் தாய் நிறுவனமாக இந்தியா சிமெண்ட்ஸ் சந்தை மதிப்பே சுமார் ரூ.6,500 கோடியாக மட்டுமே.

விளையாட்டுத் துறையில் உள்ள உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விளையாட்டுப் பிரிவில் உள்ள டெக்னாலஜி நிறுவனங்கள் (ட்ரீம் 11 உள்ளிட்டவை) யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கின்றன. ஆனால் ஒரு விளையாட்டு அணியாக சி.எஸ்.கே யுனிகார்ன் பட்டியலில் இணைய இன்னும் அதிக காலம் ஆகாது என்கிறார்கள் வல்லுநர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு