Election bannerElection banner
Published:Updated:

ஒரு கிராம் தங்கம் 4,376 ரூபாய், இறக்கத்தில் தங்கம் விலை...மேற்கொண்டு இறங்குமா ஏறுமா? #Gold

தங்கம்
தங்கம்

கடந்த ஆண்டில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட பின்பு ஒரு கிராம் தங்கம் விலை சுமார் 2,750-லிருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி அன்று 5,654 என்கிற உச்ச விலையை அடைந்தது.

தங்கம் விலை கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்து இன்று மீண்டும் கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. இந்த விலையேற்றம் அடுத்துவரும் நாள்களிலும் தொடருமா அல்லது விலை இன்னும் இறங்குமா என்கிற பரபரப்பு தங்க நகை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களிடையே அதிகமாக இருக்கிறது.

தங்கம் விலை இன்னும் இறங்குமா?
தங்கம் விலை இன்னும் இறங்குமா?

உச்சத்தில் தங்கம் விலை...

கடந்த ஆண்டில் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்ட பின்பு ஒரு கிராம் தங்கம் விலை சுமார் 2,750-லிருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி அன்று 5,654 என்கிற உச்ச விலையை அடைந்தது. அதிலிருந்து படிப்படியாக இறங்கத் தொடங்கிய தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராம் ஒன்றுக்கு 4,735 என்கிற அளவில் வர்த்தகமானது.

ஆனால், கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது, இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சி காணத் தொடங்கியது ஆகிய காரணங்களால் தங்கத்தின் விலை சர்வதேச சந்தைகளில் இறங்கத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை இறங்கத் தொடங்கி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கிராம் தங்கம் 4,348 ரூபாயாக இருந்தது. ஆனால், இன்று அது கிராம் ஒன்றுக்கு 28 ரூபாய் உயர்ந்து 4,376 ரூபாயாக வர்த்தகம் ஆகி வருகிறது.

தங்கத்தின் இந்த சிறிய விலையேற்றத்துக்குக் காரணம், சர்வதேச சந்தையில் விலை உயர்ந்ததுதான். சர்வதேச சந்தையில் கடந்த வெள்ளி அன்று ஒரு அவுன்ஸ் (31.1 கிராம்) தங்கம் 1,780 டாலராக வர்த்தகம் ஆனது. ஆனால், சனிக்கிழமை அன்று இது 4 டாலர் அதிகரித்து 1,784 டாலராக வர்த்தகம் ஆனது.

தங்கம்
தங்கம்

விலை இன்னும் இறங்குமா?

உலக அளவில் கெட்ட செய்திகள் ஏதும் வராதபட்சத்தில் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 1,700 டாலர் வரை இறங்க வாய்ப்புண்டு என்றாலும், இந்த அளவுக்கு விலை கட்டாயம் இறங்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருவது, அமெரிக்காவில் நிலவும் கடும் குளிர் போன்ற காரணங்களால் பொருளாதார வளர்ச்சி தடைப்படும் என்பதால், பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படலாம். அந்த நிலையில் தங்கம் விலை இன்னும் கொஞ்சம் உயர்ந்தாலும் ஆச்சர்யமில்லை. எனவே, அவசியம் தேவைப்படுபவர்கள் இப்போதைய நிலையில் தங்கம் வாங்கலாமா, கூடாதா என்பதை நன்கு யோசித்து முடிவு செய்யலாம்!

ஏற்ற இறக்கத்தில் வெள்ளி விலை...

வெள்ளி விலை கடந்த சில நாள்களாகவே ஏற்ற இறக்கமாக இருக்கிறது. கடந்த 11-ம் தேதி அன்று ஒரு கிலோ வெள்ளி 74,000 ரூபாய்க்கு வர்த்தகம் ஆனது. இது 73,300 வரை குறைந்து, தற்போது 73,800-ஆக வர்த்தகம் ஆகிறது!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு