Published:Updated:

எல்.ஐ.சி-யின் 64-வது பிறந்தநாள், பங்குகளை விற்கப்போகும் அரசு... என்னாகும் எல்.ஐ.சியின் எதிர்காலம்?

LIC Building in Chennai
LIC Building in Chennai ( Photo: Vikatan / Kalimuthu.P )

ஒருபுறம் அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் எல்.ஐ.சி-க்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிரான கருத்துகளும் ஓங்கி ஒலிக்கின்றன.

நம் நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள பாமர மக்களையும் சென்றடைந்திருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் 64-வது பிறந்த நாள் இன்று. இந்த நிறுவனம் உலகிலேயே அதிக பாலிசிகளைக் கொண்ட நிறுவனம் என்கிற பெருமையோடு வீரநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒருபுறம் அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் என அனைவரும் எல்.ஐ.சி-க்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்க, மற்றொருபுறம் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிரான கருத்துகளும் ஓங்கி ஒலிக்கின்றன.

"எல்.ஐ.சி... பொன்முட்டையிடும் வாத்து, பேராசைப்பட்டால்?" - சிறப்புப் பார்வை

மத்திய அரசு கைவிட வேண்டும்!

``எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்" என்பதை வலியுறுத்தி, மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ``கடந்த 64 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியில் எல்.ஐ.சி தனது பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. 5 கோடி ரூபாயில் அரசு முதலீட்டோடு தொடங்கிய எல்.ஐ.சி-யின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 32,00,000 கோடி ரூபாய். வளரும் நாடுகளின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு உள்நாட்டு சேமிப்பு திரட்டலே மிகச்சிறந்த வழிமுறை என்பதை எல்.ஐ.சி நிரூபித்துள்ளது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இந்திய ரயில்வே நிதித் தேவைகளுக்காக இந்நிறுவனத்தை அணுகியபோது, ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு 1,50,000 கோடி ரூபாயைத் தருவதாக உறுதி தந்தது. அதேபோல், நாட்டின் நெடுஞ்சாலை, குடிநீர் திட்டங்கள், போக்குவரத்து, பாலங்கள், துறைமுக மேம்பாடு, நீர்ப்பாசனம், மின்சாரம் என ஆதாரத் தொழில்களுக்கு பெரும் நிதியாதாரங்களை அளித்துள்ளது. எனவே, எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல், எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலிசிதாரர்களுக்கு பாதிப்பு இல்லை!

அண்மையில் `நாணயம் விகடன்' இதழுக்காக காப்பீட்டுத் துறையில் 33 ஆண்டுக்கால அனுபவமுள்ள, எல்.ஐ.சி தென்மண்டல மேலாளர் க.கதிரேசனிடம் சிறப்புப் பேட்டி எடுத்திருந்தோம். அதில்,

``எல்.ஐ.சி நிறுவனப் பங்கு விற்பனையால் பாலிசிதாரர்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா?" என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டபோது,

``மத்திய பட்ஜெட் 2020-21-ல், `மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்கு மூலதனத்தில் சிறிய பகுதியை விலக்கிக்கொள்ளும்’ என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 29 கோடி பாலிசிதாரர்களுக்கு பாதிப்பு இல்லை. 2020-21-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர், ``பிரிவு 37 அளிக்கும் மத்திய அரசின் `Sovereign Guarantee’ என்ற உத்தரவாதம் எல்.ஐ.சி பாலிசிகளுக்கு தொடரும்" என்று அறிவித்திருக்கிறார். மேலும், எல்.ஐ.சி-க்கு கடன் எதுவும் இல்லை என்பது மிகப்பெரிய பாசிட்டிவ் அம்சம்.

எல்.ஐ.சி-யின் தற்போதைய சொத்து மதிப்பு 32,00,000 கோடி ரூபாய்க்கு மேலாக இருக்கிறது. மேலும், எல்.ஐ.சி-க்கு மிகப்பெரிய பிராண்ட் மதிப்பு இருக்கிறது. இதற்குச் சொந்தமான கட்டடங்கள், இதர சொத்துகள் ஏராளம். அந்த வகையில் எல்.ஐ.சி-யின் மதிப்பு குறைந்தது 55,00,000 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.

‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்
‘எல்.ஐ.சி’ தென் மண்டல மேலாளர் க.கதிரேசன்

மத்திய அரசு எல்.ஐ.சி பங்கு விற்பனை மூலம் சுமார் 90,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பங்கு விற்பனை மூலம் இன்னொரு சாதக அம்சமும் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி-யை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கண்காணிக்கிறது. பங்கு வெளியீட்டுக்குப் பிறகு, செபியும் எல்.ஐ.சியைக் கண்காணிக்கும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். எல்.ஐ.சி தனியார் மயமாக்கப்படவில்லை. மத்திய அரசு அதன் பங்கில் சிறிய அளவை விலக்கிக்கொள்கிறது, அவ்வளவுதான்" என விளக்கமளித்திருந்தார்.

வன்மையான கண்டனங்கள்!

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அண்மையில் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ``கடந்த 64 ஆண்டுகளில், 13-வது திட்டக் காலத்தில் எல்.ஐ.சி நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ள நிதி 7,00,000 கோடிக்கு மேல் என்பது மறுக்க முடியாத உண்மை.

காப்பீட்டுத் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நிறுவனமான எல்.ஐ.சி பங்குகளை விற்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.
- வைகோ

தற்போது எல்.ஐ.சி நிறுவனம் மட்டும்தான் தனியார் நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறது. எல்.ஐ.சி தொடங்கப்பட்ட காலத்தில் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூன்று முக்கியமான நோக்கங்களைப் பிரகடனம் செய்தார். ஒன்று, காப்பீட்டுப் பாதுகாப்பு என்பது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இரண்டாவதாக, நுகர்வோருக்கு தரும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மூன்றாவதாக, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவது.

வைகோ
வைகோ

இந்தக் குறிக்கோள்களை 64 ஆண்டுகளாக எல்.ஐ.சி நிறுவனம் உறுதியோடு நிறைவேற்றி வருவதால்தான் இன்று 42 கோடி மக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கி, காப்பீட்டுத் துறையில் முன்னணி முதன்மை நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது. காப்பீட்டுத் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நிறுவனமான எல்.ஐ.சி பங்குகளை விற்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மத்திய அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். நூற்றாண்டு கடந்தும் எல்.ஐ.சி நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சிக்கலான முடிவு!

இது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் ஃப்ராங்கோவிடம் பேசியபோது, ``நல்ல நிலையில் இயங்கிவரும் எல்.ஐ.சி போன்ற நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவதற்காக ஐ.பி.ஓ வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். அதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியிருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.

தாமஸ் ப்ராங்கோ
தாமஸ் ப்ராங்கோ

எல்.ஐ.சி-யின் க்ளெய்ம் விகிதம் தனியார் நிறுவனங்களின் க்ளெய்ம் விகிதத்தைவிட அதிகம். தனியாருக்கு மாற்றப்பட்டால் வாடிக்கையாளர்கள்தாம் பாதிக்கப்படுவார்கள். மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்.ஐ.சி நிறுவனம் தானாக முன்வந்து க்ளெய்ம் செட்டில்மென்ட் தந்தது. இதுபோன்ற சூழல்களில்தான் அரசு நிறுவனங்களின் தேவை புரியும்" என்றார்.

மேலும், ``பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது உலகம் முழுக்க நடைமுறையிலிருக்கும்போது ஒரு சாரார் மட்டும் ஏன் இதை எதிர்க்கிறார்கள்? பொதுத்துறை நிறுவனங்களுக்கு அப்படியென்ன அவசியம்?" என்று கேட்டபோது, ``பொதுத்துறை நிறுவனங்கள் லாபநோக்கத்தை மட்டுமே மையமாகக்கொண்டு இயங்குவதில்லை. மக்களுக்கு சேவை செய்வதும் முக்கியக் குறிக்கோளாக இருக்கும். மக்களுக்கான சேவையைத் தனியார் நிறுவனங்கள் கருத்தில் கொள்வதில்லை.

ரயிலில் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயணிப்பது பொதுத்துறையால்தான் முடிகிறது. ரயிலில் கொண்டுசெல்லப்படும் சரக்குக் கட்டணங்களில் லாபத்தை உயர்த்தி, பயணியர் கட்டணத்தைக் குறைத்துச் சேவையாற்றுகிறார்கள். எல்.ஐ.சி நிறுவனத்தின் க்ளெய்ம் ரேஷியோ அதிகமாக இருப்பது வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ளதாக உள்ளது. இதன் லாபத்தில் பெரும்பகுதி, இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தப் பயன்படுத்துகிறார்கள்'' என்றார்.

இவர்களின் கருத்து இப்படியிருக்க, பங்குச்சந்தை நிபுணர்களில் ஒருவரான ரெஜிதாமஸின் கருத்து வேறு மாதிரியாக இருக்கிறது.

சிறுமுதலீட்டாளர்களும் பலனடையலாம்!

``எல்.ஐ.சி-யில் இருக்கும் அரசின் பங்குகளில் குறிப்பிட்ட அளவை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது முற்றிலும் வரவேற்கத்தக்கதே. ஆயுள் காப்பீட்டுத்துறையில் இயங்கும் ஒரே அரசு நிறுவனம் எல்.ஐ.சி மட்டுமே. தனியார்துறையில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும், இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயுள் காப்பீட்டு வருவாயில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட சந்தை எல்.ஐ.சி-யிடம்தான் இருக்கிறது. தவிர, காப்பீட்டு நிறுவனங்களிலேயே கடன் இல்லாத, அதிக சொத்து மதிப்புகொண்ட ஒரே நிறுவனம் இதுதான். சந்தையில் பட்டியலிட்ட பிறகு இந்தியாவின் மதிப்புமிக்க முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக எல்.ஐ.சி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ரெஜி தாமஸ்
ரெஜி தாமஸ்
vikatan

நம்பிக்கைக்குரிய நிறுவனத்தின் பங்கு!

இன்றும் இந்திய கிராமங்களில் மற்ற நிறுவனங்கள் அளிக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைவிட, எல்.ஐ.சி அளிக்கும் பாலிசிகள்தான் மக்களால் அதிக அளவில் விரும்பப்படுகின்றன. அந்த அளவுக்கு மக்களுக்கு எல்.ஐ.சி மீது நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. இப்படியொரு நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, இதுவரை முதலீடு செய்யாதவர்கள்கூட பங்குச் சந்தைக்குள் வர வாய்ப்பிருக்கிறது.

எல்.ஐ.சி பங்குகளில் முதலீடு செய்பவர்கள் குறுகியகாலத்தில் அல்லாமல், நீண்டகால நோக்கில் முதலீடு செய்வது நல்லது. ஏனெனில், இது போன்ற பங்குகள் கிடைப்பது மிகவும் அரிது. அதுமட்டுமல்லாமல், எல்.ஐ.சி போன்ற மிகப்பெரிய மற்றும் வலுவானதொரு நிறுவனத்தில் நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு ஆயுள் காப்பீட்டுத்துறையின் வருங்கால வளர்ச்சியில் பங்கு பெறும் வாய்ப்பும் கிடைக்கும்" என்கிறார்.

`எல்.ஐ.சி பங்கு விற்பனையால் ரூ.90,000 கோடி திரட்ட முடியும்!' - தலைமைப் பொருளாதார ஆலோசகர்

எல்.ஐ.சி ஒவ்வொரு சோதனையிலிருந்தும் வெற்றிகரமாக வெளிவருவதற்குக் காரணம், இந்திய மக்களுடனான அதன் பிணைப்பே. `மக்கள் சேமிப்பு, மக்கள் நலனுக்கே’ என்ற நோக்கத்தைச் செயலாக்கி வந்திருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க, மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவானது அந்நிறுவனத்துக்கும், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் ஆபத்தாய் முடிந்துவிடக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு