Published:Updated:

`ட்ரம்ப் - மோடி சந்திப்பு!'- இரு நாட்டின் பொருளாதார எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகுமா?

டிரம்ப் - மோடி
டிரம்ப் - மோடி

வர்த்தக முடிவுகள் எடுக்க நேரம் ஆனாலும் ட்ரம்ப் - மோடி சந்திப்பால் வருகின்ற விளைவுகள் பயனுள்ளதாகவே அமையும்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இன்று இந்தியா வந்திருக்கிறார். ட்ரம்புடன் அவரின் மனைவி மெலினா மற்றும் மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷர் ஆகியோரும் வந்திருக்கிறார்கள். இந்தியா அவர்களின் வரவை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த வருகையால் டெல்லி மற்றும் வாஷிங்டன் இடையேயான வர்த்தக உறவு பலப்படும் என்று கூறியுள்ளார் ஸ்டேட் பாங்கின் நிர்வாக இயக்குநர் தினேஷ் குமார் காரா.

`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை!' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate

``இம்மாதிரியான பயணங்கள் இருநாடுகளுக்கும் இடையே நல்ல எண்ணத்தை உருவாக்கும். அவ்வாறான நல்லெண்ணங்கள்தான் இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் பலப்பட மிக அவசியம். வர்த்தகம் சம்பந்தமான உடன்படிக்கை போடப்பட்டாலும் போடப்படாவிட்டாலும் இம்மாதிரியான பயணங்களால் ஏற்படுத்தும் தன்னம்பிக்கையே இரு நாட்டின் வர்த்தகத்தை வளர்க்கும். இரு நாடுகளைப் பற்றிய நல்ல புரிதல் ஏற்படுவதால், ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துகொண்டு அவர்களுக்கான வர்த்தகத் தேவையைப் புரிந்து செயல்பட உதவும்.

SBI MD Dinesh Kumar Khara
SBI MD Dinesh Kumar Khara

இந்தியாவுடன் ஒப்பந்தமாகவிருந்த உடன்படிக்கைகளை ட்ரம்ப் பின்னர் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். நவம்பரில் வர உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் இது நடக்குமா என்று தெரியவில்லை. ஆனால், இம்மாதிரியான வர்த்தக முடிவுகள் எடுக்க நேரமானாலும் அந்த வர்த்தகத்தால் வருகின்ற விளைவுகள் பயனுள்ளதாகவே அமையும். அது நம்முடைய பொருளாதாரத்திற்கு நன்மையே பயக்கும்" என்று தெரிவித்துள்ளார் தினேஷ் காரா.

சென்ற வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``இந்தியாவுடன் மேற்கொள்ள ஒரு வர்த்தக ஒப்பந்தம் எங்களிடம் உள்ளது. ஆனால், அந்தப் பெரிய ஒப்பந்தத்தைப் பின்னர் உபயோகிப்பதற்காக நிறுத்தி வைத்துள்ளோம். அதை அதிபர் தேர்தலுக்கு முன் செயல்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. நாங்கள் இந்தியாவால் சரிவர கவனிக்கப்படவில்லை" என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில இரும்பு மற்றும் அலுமினியப் பொருள்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி விதிப்பிலிருந்து இந்தியா விலக்கு எதிர்பார்க்கின்றது. GSP-ன் (Generalised System of Preferences) கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கான ஏற்றுமதி சம்பந்தப்பட்ட சலுகைகள், விவசாயம், ஆட்டோமொபைல், பொறியியல் சம்பந்தமான பொருள்களுக்கான விற்பனைத் தளத்தை இந்தியா, அமெரிக்காவிடம் எதிர்பார்க்கின்றது.

மோடி - டிரம்ப்
மோடி - டிரம்ப்

அதேபோல் அமெரிக்கா தங்களின் பண்ணைப் பொருள்கள், பால் பண்ணைப் பொருள்கள் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை இந்தியாவிற்கு அதிகமாகக் கொண்டுவர வேண்டும். அதற்கு விதிக்கப்படும் இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்தியாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை பற்றியும் அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளின் எதிர்பார்ப்புகளும், இந்தச் சந்திப்பில் பூர்த்தியாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு