Published:Updated:

பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி... உலகப் பொருளாதார மாநாட்டில் கோரிக்கை!

பொருளாதார மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதார மாநாடு

பொருளாதார மாநாடு

பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி... உலகப் பொருளாதார மாநாட்டில் கோரிக்கை!

பொருளாதார மாநாடு

Published:Updated:
பொருளாதார மாநாடு
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதார மாநாடு

பெரும் தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட உலகப் பொருளாதார வருடாந்தர உச்சி மாநாடு சமீபத்தில் தாவோஸ் நகரில் நடந்து முடிந்தது. கடந்த டிசம்பரில் நடக்க வேண்டிய இந்த மாநாடு, கொரோனா காரணமாக ஒரு மாதம் தாமதமாக ஜனவரியில் நடந்துள்ளது.

கொரோனாவை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும்...

ஒமிக்ரான் பரவல் காரணமாக, நடப்பு ஆண்டும் (2022) ஒருவித நிச்சயமற்ற தன்மையுடன் தொடங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு, பொருளாதார மீட்டெடுப்பில் தடுமாற்றம், பருவநிலை மாற்றம், ஏழை பணக்காரர்களிடயே ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு போன்ற மிகப் பெரும் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்கத் தேவையான சிறந்த ஆலோசனைகளை வழங்குமாறு உறுப்பு நாடுகளையும் பொருளாதார வல்லுநர் களையும் வலியுறுத்தியுள்ளது.

தொழிலாளர் சந்தை, பொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் கொரோனா பேரலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளால் விலைவாசி பெருமளவு உயரும் என்று கவலை தெரிவித்துள்ள உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு, குறைந்த வட்டி கொள்கையைக் கடைப்பிடிக்க விரும்பும் அரசுகள் மற்றும் மத்திய வங்கிகளுக்கு, கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் பணவீக்கம் பெரும் சவாலாக அமையும் என்று எச்சரித்துள்ளது. உலகளாவிய ஒத்துழைப்பு, அரசு- தனியார் கூட்டு முயற்சி மற்றும் சமூகப் பொறுப்புணர்ச்சி ஆகியவற்றின் உதவியுடன் நம்மால் நவீன உலகைக் கட்டமைக்க முடியும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தாவோஸ் உச்சி மாநாட்டை தொடக்கி வைத்த சீன அதிபர் ஜி ஜின்பிங், கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை சர்வதேச சமூகம் தொடர வேண்டுமென்றும், இந்த போருக்கான முக்கிய ஆயுதம் தடுப்பூசியாக இருக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார். அதே சமயம், தடுப்பூசிகளைப் பெறுவதில் ஏழை மற்றும் இதர நாடுகளுக்கும் இடையே உள்ள பெரும் இடைவெளி, கொரோனா பெருந் தொற்றை முழுமையாக ஒழிப்பதற்கு சவாலாக விளங்கும் என்று தாவோஸ் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி... உலகப் பொருளாதார மாநாட்டில் கோரிக்கை!

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்த வேண்டும்...

கடந்த இரண்டு வருட காலத்தில், கொரோனா பெருந் தொற்றால் பொருளாதார ரீதியாக சாமான்ய மக்கள், பெரும் அவதிக்குள்ளாகிய அதே வேளையில் உலக பெருந் தொழிலதிபர்களின் வருவாயும் சொத்து மதிப்பும் பல டிரில்லியன் மதிப்புக்கு உயர்ந்துள்ளது. இந்த மாநாட்டை யொட்டி தனியே கூடிய ‘நாட்டுப்பற்றுள்ள பெரும் பணக் காரர்கள்’ என்கிற புதிய அமைப்பு, ‘‘பெருகிவரும் பொருளா தார ஏற்றத்தாழ்வுகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். அதற்கு உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு அமைந்துள்ள ஸ்விட்சர்லாந்தில் நடைமுறை யில் உள்ளவாறு சொத்து வரியே உரிய தீர்வு’’ என்றும் வலியுறுத்தி யுள்ளது.

மேலும், இந்த அமைப்பின் ஆய்வறிக்கையின் அடிப் படையில், உலகெங்கும் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மீதான 2% - 5% வரை யிலான வரியின் வாயிலாகச் சுமார் 2.52 ட்ரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.190 லட்சம் கோடி) வரை திரட்ட முடியும் என்றும், சொத்து வரி வசூலின் உதவியுடன் சுமார் 230 கோடி மக்களைக் கொடிய வறுமையிலிருந்து மீட்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

உலக வங்கி கடந்த ஆண்டில் வெளியிட்ட அறிக்கையிலும், கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அரசு வருவாயை அதிகரிக்கவும், அரசுக் கட்டமைப்பு மீதான பொது மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பெரும் பணக் காரர்களின் மீதான சொத்து வரியை அறிமுகப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரும் பணக்காரர்களுக்கு சொத்து வரி... உலகப் பொருளாதார மாநாட்டில் கோரிக்கை!

சர்வம் டிஜிட்டல் மயம்...

இந்த மாநாட்டில் உரை யாற்றிய பெரும்பாலான தலை வர்கள், உலகப் பொருளாதார வளர்ச்சியில், தகவல் தொழில் நுட்பத்தின் முக்கிய பங்கு குறித்து எடுத்துரைத்தனர். பல வருடங்களுக்கான தொழில்நுட்பப் புரட்சியை கொரோனா பெருந்தொற்று சில வருடங்களிலேயே சாத்தியப்படுத்தியுள்ளது என்பதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பாவின் ‘சிப்’ தேவை அடுத்த பத்தாண்டுகளில் இரு மடங்காக அதிகாரிக்கும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார். பில் கேட்ஸ் போன்ற தொழில் அதிபர்கள், பசுமை தொழில்நுட்பம் வளர்ச்சி அடையத் தேவையான முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த மாநாட்டின் மிக முக்கிய நிலைப்பாடாகக் கருதப்படும் டிஜிட்டல்மயமாக்கலின் உடனடி அவசியம் குறித்து பல்வேறு உலகத் தலைவர் களும், தொழில் அதிபர்களும் தமது கருத்துகளை முன் வைத்தனர்.

பருவநிலை மாற்றம்...

பருவநிலை மாற்றம் என்பது நீண்ட கால மற்றும் குறுகிய கால பாதிப்புக்களை உருவாக்கி வருகிறது. பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளாக அதீத மழை, வெள்ளம், மலைச்சரிவு போன்றவை பெரும் உயிர் சேதம் மற்றும் பொருளாதார இழப்புகளை உருவாக்கு கிறது. கரிம எரிபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சக்தியின் அளவு தற்போது சுமார் 80% அளவுக்கு உள்ளது என்றும், இதை வருகின்ற 2050-ம் ஆண்டுக்குள் 0% ஆகக் குறைக்க மிகுந்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்று சர்வதேச எரிசக்தி மையத்தின் செயல் இயக்குநர் பாட்டி பிரோல் தெரிவித்தார்.

தாவோஸ் மாநாட்டில் இந்தியாவின் பங்களிப்பு...

இந்த மாநாட்டின் முக்கிய நிகழ்வாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை நிகழ்த்தினார். உலகின் மொத்த கார்பன் உற்பத்தியில் 5% பங்கை மட்டுமே இந்தியா வழங்கினாலும், கார்பன் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் 100% முனைப்பை வெளிப்படுத்துவதாகப் பெருமிதம் தெரிவித்த நமது பிரதமர், P-3 எனப்படும் ‘பூமிக்காக மக்கள்’ (Pro-Planet People) என்ற புதிய கோஷத்தை அறிமுகப்படுத்தினார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையான தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகையே சிறப்பாக வழிநடத்தும் என்றும் அறிவித்தார்.

பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைத்ததன் வாயிலாகவும், உள்நாட்டில் புதிய தொழில் தொடங்கும் வசதியை மேம்படுத்தியதன் வாயிலாகவும், இந்தியா தொழில் முனைவோருக்கு உகந்த நாடாக மாறியுள்ளது என்றும், தனது மாநாட்டு உரையில் தெரிவித்த பிரதமர், உலக தொழில் அதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆக மொத்தத்தில், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துதல், தொழிற்நுட்ப மேம்பாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்துதல் மற்றும் பருவநிலை மாற்றம் தற்போதைய காலகட்டத்துக்கு அவசியமான கோட்பாடுகளை, சரியான தருணத்தில் வகுத்துத் தந்துள்ள இந்த மாநாட்டின் முடிவுகளை வரவேற்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism