Published:Updated:

`எஸ் வங்கி' ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் போனது ஏன்?! - விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

எஸ் பேங்க் விவகாரத்தில் மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தனியார் வங்கியான `எஸ் பேங்கை’ ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது. வங்கியைக் கடன் சுமையிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் பேங்க்கின் நிர்வாகக் குழு முழுமையாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுகிறது. எஸ் பேங்க்கை நிர்வகிக்க எஸ்.பி.ஐ வங்கியின் முன்னாள் அலுவலரான பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ் பேங்க்
எஸ் பேங்க்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதிச்சிக்கலில் சிக்கித்தவித்த பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. இப்போது `எஸ் பேங்க்’ நிதிச்சுமையில் சிக்கித்தவிக்கிறது.

`எஸ் பேங்கை கையிலெடுத்தது ரிசர்வ் வங்கி’ -  வாடிக்கையாளர்கள் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்

இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ``கடந்த 6 வருடங்களாக பா.ஜ.க ஆட்சியில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை நிர்வகிக்கும் அவர்களது திறன் நன்றாகத் தெரிகிறது. முதலில் பிஎம்சி பேங்க் இப்போது எஸ் பேங்க். மத்திய அரசுக்கு இதுகுறித்து ஏதாவது வருத்தம் இருக்கிறதா. தன்னுடைய கடமையில் இருந்து அரசு விலகிவிட முடியுமா... மூன்றாவதாக வேறு ஏதாவது வங்கி இருக்கிறதா" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இதுகுறித்து பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``எஸ் வங்கியின் விவகாரம் என்பது நேற்றோ இன்றோ நடந்தது இல்லை. வங்கியின் செயல்பாடுகளை 2017-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியானது கண்காணித்து வருகிறது. ரிஸ்கான கடன் வழங்குதல் மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக அந்த வங்கியானது சிக்கலுக்குள்ளானது. இதைக் கண்டறிந்து வங்கியின் நிர்வாகத்தை மாற்றியமைக்கும் படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.

எஸ் வங்கியில் முதலீடு செய்தவர்களின் பணம் பத்திரமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள், வங்கி மற்றும் பொருளாதார நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வங்கியில் வைப்புத்தொகை வைத்திருப்பவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் உறுதியளித்துள்ளார். இந்த விவகாரத்தை ரிசர்வ் வங்கியும் அரசும் கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு