நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

ஆண்டுக்கு ரூ.10 கோடி... கடல் தாண்டும் மலர்கள்... கலக்கும் சென்னை தொழிலதிபர்!

மணி
பிரீமியம் ஸ்டோரி
News
மணி

ஏற்றுமதி

நம்மூர் உற்பத்திப் பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி, தங்களின் வளர்ச்சியுடன் நாட்டின் பொருளாதாரப் பலத்தையும் கூட்டுகின்றனர் பலர். அவர் களில் ஒருவர் மணி. மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, அரளி போன்ற நம்மூர் பூக்களை உதிரியாகவும், மாலையாகத் தொடுத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

பள்ளிப் படிப்பையே முடிக்காத மணி, ஏற்றுமதி சார்ந்த விஷயங்களை சர்வ சாதாரணமாகச் செய்து முடிக்கிறார். சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு அருகில் இருக்கிறது மணியின் ‘ஃப்ளவர் ஃபேக்டரி’ நிறுவனம். வெளிநாடுகளுக்குப் பறக்கத் தயாராகும் டிசைனர் மாலைகளைப் பணியாளர்கள் ஆர்வமாகக் கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களை நமக்கு அறிமுகப் படுத்திய பிறகு, தொழில் அனுபவங்களைப் பேச ஆரம்பித்த மணியின் உரையாடலில், ஏற்றுமதித் தொழிலில் அவருக்கு இருக்கும் முதிர்ச்சியை நன்கு உணர முடிந்தது.

“ஸ்கூல் படிப்பைக்கூட நான் முடிக்கலை. ஒரு டெய்லர் கடையில கூலி வேலையிலதான் முதல்ல சேர்ந்தேன். படிப்படியா தொழிலைக் கத்துக்கிட்டு, தனியா டெய்லர் கடை ஆரம்பிச்சேன். கார்மென்ட்ஸ் கம்பெனி வேலையிலயும் எனக்கு அனுபவம் உண்டு. கடைசியா லெதர் ஏற்றுமதி கம்பெனியில தொழில் அனுபவங்களுடன் நல்ல வளர்ச்சியும் எனக்குக் கிடைச்சது. அதன்பிறகு, சுயதொழில்ல இறங்கினேன். என் நண்பர் ஒருவர் கனடாவுல இருக்கார். அவர் மூலமா நம்மூர் பூக்கள் பலவற்றுக்கும் வெளிநாடுகள்ல நல்ல வரவேற்பு இருக்குனு தெரிஞ்சுகிட்டேன். எடுத்ததுமே வணிக ரீதியா ஏற்றுமதி செய்யாம, கனடாவுல இருக்கிற கோயில்களுக்கு பூஜைக்கான பூக்களை அனுப்பினேன். அதை என் நண்பர் இறக்குமதி செஞ்சு, அந்த நாட்டுல இருந்த கோயில்களுக்குக் கொடுத்தார்.

இதன்மூலமா இங்கிருந்து அனுப்புற பூக்கள், அங்க போய்ச் சேரும்போது என்ன தரத்துல இருக்கும், இன்னும் எத்தகைய வழிமுறைகளைக் கையாளலாம்னு தெரிஞ்சுகிட்டேன். கனடா, குளிர்பிரதேச நாடு. நம்மூர்ல விளையுற மல்லிகை, கனகாம்பரம், செண்டுமல்லி மாதிரியான பூக்கள் பலவும் அங்க அவ்வளவா விளையாது. அனுபவமுள்ள பணியாளர்களும் அவ்வளவு சுலபத்துல கிடைக்க மாட்டாங்க. இதனால அந்த நாட்டுல வசிக்கிற தென்னிந்தியர்களுக்கும் கோயில்களுக்கும் நம்மூர் பூக்களின் தேவை அதிகமா இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டோம். என் நண்பர் கனடாவுல ‘ஃப்ளவர் ஷாப்’ ஆரம்பிச்சார். என் கம்பெனி மூலமா சென்னையில இருந்து அவருக்கு நான் பூக்களை அனுப்ப ஆரம்பிச்சேன்” என ஏற்றுமதி தொழிலில் நுழைந்த விதத்தைச் சொல்லிய மணி, தன் நண்பர்களின் ஆதரவுடன் தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தியிருக்கிறார்.

மணி
மணி

“சில நண்பர்கள் மூலமா கனடா தவிர, மற்ற சில நாடு களுக்கும் பூக்களை அனுப்ப வாய்ப்பு கிடைச்சது. எங்க கம்பெனி வெப்சைட்டைப் பார்த்தும் பலரும் ஆர்டர்கள் கொடுத்தாங்க. வெளிநாடுகள்ல பூ வியாபாரம் செய்ற இந்தியாவைச் சேர்ந்தவங்களுக்கும் பூக்களை அனுப்புறோம். மல்லிகை, சம்பங்கி, அரளி, செண்டுமல்லி, செவ்வந்தி உட்பட நம்மூர்ல எளிதா கிடைக்கிற பூக்களைத்தான் அதிகமா விற்பனை செய்றோம். ரோஜா பரவலா எல்லா நாடுகள்லயும் விளையக்கூடியதுதான். அதனால, நாங்க நேரடியா ரோஜாப்பூக்களை ஏற்றுமதி செய்யாட்டியும், ரோஜா இதழ்களைக் கொண்டு டிசைனர் மாலைகளை வடிவமைச்சு அனுப்புவோம். அதுக்குப் பெரிய வரவேற்பு இருக்கு.

கோயில், விசேஷ நிகழ்ச்சிகள்னு ஒவ்வொருத்தருக்குமான தேவைகள் மாறுபடும் என்பதால, பூக்களை உதிரியாவும் மாலை அல்லது சரமா தொடுத்தும் அனுப்புவோம். மற்ற ஊர்கள்ல விளையுற மல்லிப்பூவைவிட, பறிச்சதும் சில தினங்கள் வரை வாடாமல் இருக்கிற மதுரை மல்லிக்குத் தனிச்சிறப்பு உண்டு. அதனால, மதுரை சுற்று வட்டாரத்துல இருந்து மல்லிப்பூவையும், மற்ற பூக்களை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டு லேயும் வாங்குவோம்.

ஒருநாள் தாமதமானாலும் பூக்கள் வாடவோ அழுகவோ வாய்ப்பிருக்கு. அதனால, பூக்களின் தோற்றம் மற்றும் தரத்துக்குக் கூடுதல் முக்கியத் துவம் கொடுப்போம். எங்க கிட்ட இருந்து வெளிநாட்டுக் குப் போன பிறகு, பூக்கள் மொட்டு அவிழ்ந்து மலரும். அதுக்கேத்த மாதிரி சூரிய உதயத்துக்கு முன்பே பறிக்கப் பட்ட மொட்டுக்களை மட்டும் தான் வாங்குவோம். அதுல நீர் தெளிக்காம, ஏசி ரூம்ல வெச்சுதான் மாலையா தொடுப்போம். அப்புறமா பேக்கேஜிங் முடியுற வரைக்கும் கூலிங் ஸ்டோரேஜ் ரூம்லதான் மாலைகளை வெச்சிருப்போம்” என்று தொழில் சுவாரஸ்யங் களைச் சொன்னவர் தொடர்ந்து தொழில் நுணுக்கங் களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆண்டுக்கு ரூ.10 கோடி... கடல் தாண்டும் மலர்கள்... கலக்கும் சென்னை தொழிலதிபர்!

“மல்லிப்பூவை மீட்டர் கணக்குல சரமா கட்டி அனுப்புவோம். அந்த வேலைகளைப் பெண்கள் நேர்த்தியா செய்வாங்க. பூக்கள் ஏற்றுமதி யில டிசைனர் மாலைகளின் பங்களிப்பு முக்கியமானது. ‘டிரெண்டி லுக்’குடன், எடை குறைவா இருக்கிறதால, சுபநிகழ்வுகளுக்கு அதிக வேலைப்பாடுகளுடன்கூடிய டிசைனர் மாலையைப் பலரும் விரும்புவாங்க. இவற்றை வடிவமைக்க அனுபவமுள்ள ஆண் பணி யாளர்களைத் தான் பயன்படுத்துறோம். சமீபத்துல நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களோட கல்யாணத்துல பயன்படுத்திய டிசைனர் மாலை, இப்போ டிரெண்டுல இருக்கு. அது போன்ற காலத்துக்கு ஏத்தமாதிரி டிசைனர் மாலைகளை நாங்களும் வடிவமைச்சுத் தருகிறோம்.

டிசைனர் மாலைகள்ல, ரோஸ் பெட்டல் மாலை களுக்கு வெளிநாடுகள்ல வரவேற்பு அதிகம். அதுல, ஒவ்வொரு ரோஜா இதழையும் மடிச்சு வெச்சு மாலையா தொடுக்கிறதால, வேலைப் பாடுகள் அதிகமா இருக்கும். எந்த டிசைனா இருந்தாலும், கைவேலைப்பாடுகள்லயே மாலையை நேர்த்தியா வடிவமைக்க முடியும். இந்தத் துறையில, பணியாளர்களின் திறனுக்கு ஏற்ப ஆச்சர்யப் படுற வகையில சம்பாதிக்கவும் வாய்ப்பிருக்கு” என்றவர், அடுத்து பேக்கேஜிங் விஷயங் களைப் பகிர்ந்தார்.

“பூக்களை தெர்மாகோல் பாக்ஸ்ல பாதுகாப்பா வெச்சு பேக்கேஜிங் செய்வோம். அந்தப் பெட்டியில அடிப் பகுதி மற்றும் நடுப்பகுதியில மட்டும் ஐஸ்கட்டிகளை வைப்போம். எந்த வகையிலயும் நீர்க்கசிவுக்கு வாய்ப்பில்லாத பாலித்தீன் கவருக்குள் ஐஸ் கட்டிகளை வைக்கிறதால, உரிய இடத்துக்குப் போய் சேரும்வரை பூக்கள் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

பனி, வெயில், மழைனு ஒவ்வொரு சீஸன்லயும் பூக்களின் தன்மை மாறும். ஆனா, எல்லா காலத்துலயும் ஒரே தரத்திலான பூக்களைத்தான் அனுப்புவோம். குறிப்பா, நாங்க அனுப்புற பொருள்கள்ல புழு, பூச்சிகள் எதுவும் இருக்கக் கூடாது. தொழில்ல நம்ம சம்பாதிச்சு வெச்சிருக்கிற பேரு கெட்டுப் போகக் கூடாது; நம்ம வாடிக்கையாளருக்கு ஏமாற்றத்தையும் கொடுத்திடக் கூடாது. இது ரெண்டுமே பிசினஸ்ல மாறக் கூடாத பண்புகள். அதனால, ஒவ்வொரு ஆர்டருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து வேலை செய்வோம்” என்று சொன்ன மணி, பூக்கள் மட்டுமன்றி, வாழையிலை, வெற்றிலை, மாவிலை, தாமரை, அறுகம்புல், வில்வம், துளசி, தென்னங்குறுத்து, தென்னை ஓலை உள்ளிட்ட பூஜைக்கேற்ற பொருள்கள் பலவற்றையும் ஏற்றுமதி செய்கிறார். கனடா, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பூக்களை ஏற்றுமதி செய்யும் மணி, ஆண்டுக்கு 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் செய்து அசத்துகிறார்.

“மக்களுக்குத் தேவையான எந்தப் பொருளையும் ஏற்றுமதி செய்யலாம். அந்த வகையில, வெளிநாட்டுல இருந்தாலும், பாரம்பர்யத்தை மறக்காத பலரும், நம்மூர் பூக்களைப் பயன்படுத்த ரொம்பவே ஆர்வம் காட்டுவாங்க. இதனால, தொடர்ச்சியான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்குது. எனவே, உள்ளூர் வியா பாரத்தைவிடவும், ஏற்று மதி தொழில்ல மட்டும் தான் அதிக கவனம் செலுத்துறோம்.

நல்ல நண்பர்கள் மூலமாதான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கேன். என் வாடிக்கையாளர்களே நண்பர்களாவும் இருக்கிறதாலதான், தொடர்ந்து பல வருஷமா அவங்களோடு தடை யில்லாம வர்த்தகம் செய்ய முடியுது. இதுபோலவே, வெளிநாட்டுல இருக்கிற நண்பர்கள் அல்லது தெரிஞ்சவங்க மூலமா அங்கிருக்கிற நிறுவனங்களைப் பத்தி முழுமையா விசாரிச்ச பிறகு, இங்கிருந்து ஏற்றுமதி செய்யும்போது ஏமாற்றங்கள் அல்லது தொழில் சிக்கல்கள் வராம பார்த்துக்கலாம்” மற்றவர்களுக்கும் பயன்படும் வகையில் டிப்ஸ் தந்து பேசி முடித்தார் மணி!

படங்கள் : பா.ரமேஷ் கண்ணன்