Election bannerElection banner
Published:Updated:

`கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை இருக்காது!' - பிட்காயின்கள் குறித்து நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

பிட்காயின்
பிட்காயின்

அனைத்து வகையான கிரிப்டோகரன்சிகளைத் தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரில் கொண்டுவரப் போவதாகத் தகவல் வெளியானது.

உலக அளவில் பிட்காயின்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பது சீனாவில்தான். அடுத்த இடத்தில் இருப்பது இந்தியாவில். ஆனால், பிட்காயின்கள் குறித்து இன்னும் இந்தியாவில் தெளிவான வரைமுறைகள் வகுக்கப்படவில்லை.

கடந்த மார்ச் 5-ம் தேதி, கிரிப்டோகரன்சி என்று சொல்லப்படுகிற பிட்காயின் வர்த்தகம் சட்ட விரோதமானதல்ல என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்குப் பிறகு, உலக நாடுகளைப் போல, இந்தியாவிலும் பிட்காயின் வர்த்தகம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

பிட்காயின்
பிட்காயின்

ஆனால், புழக்கத்தில் இருக்கும் அனைத்து வகையான கிரிப்டோகரன்சிகளையும் தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கூட்டத்தில் கொண்டுவரப் போவதாகத் தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பிலும் விமர்சனம் கிளம்பிய நிலையில், மத்திய அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தற்போது மாற்றிக்கொண்டுள்ளது. நம் நாட்டுக்கு ஏற்ற மாதிரியான கிரிப்டோகரன்சிகளை உருவாக்க மத்திய அரசாங்கம் முனைப்புடன் இருப்பதாகத் தகவல் வெளியானது.

அந்தத் தகவல்கள் உண்மைதான் என்று சொல்கிற வகையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் சமீபத்திய பேச்சு இப்போது அமைந்திருக்கிறது. கடந்த வாரம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ``ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும், இந்திய ரிசர்வ வங்கியும் குறிப்பிட்டிருப்பதுபோல, வெளிநாட்டு கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்பட்டு, இந்தியாவுக்கு ஏற்ற மாதிரியான கிரிப்டோ கரன்சிகள் உருவாக்கம் ஆரம்பநிலையில் இருக்கிறது. ஆகையால், கிரிப்டோகரன்சி முதலீட்டை நாங்கள் முற்றிலுமாகத் தடை செய்கிறோம் என்கிற நிலை இருக்காது. கூடிய விரைவில், இந்திய கிரிப்டோகரன்சி குறித்த விஷயங்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளியாகும். அதற்கான விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள் செயல்பாட்டில் உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் நாணயமான பிட்காயினின் விலையானது 13.03.2021-ம் தேதி 6.64% அதிகரித்து 61,000 டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று பிட்காயினின் குறைந்தபட்ச விலையானது 27,734 டாலர்களாகும். அந்த விலையுடன் ஒப்பிட்டால் தற்போது 120.2% அதிகரித்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் பிட்காயின் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.

ரிஸ்க் மிகுந்தது பிட்காயின் வர்த்தகம். இதில் பணத்தைப் போடலாமா என்பது குறித்து ஒன்றுக்கு பத்து முறை யோசித்து செயல்படுவது அவசியம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு