விலங்குகளிலிருந்து பெறப்படும் பால் மற்றும் அந்தப் பால் சார்ந்த தயாரிப்புகளைத் தவிர, வேறு தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் பால்களை `பால்' எனக் குறிப்பிட தடைவிதிக்கலாமா என்பது குறித்து இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) பரிசீலித்து வருகிறது. அண்மையில் FSSAI வெளியிட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் விதிமுறைகள் 2020 வரைவில் இதனைத் தெரிவித்திருக்கிறது.
பால், பலரின் உணவில் ஒரு முக்கிய உணவு. மேலும், இது அனைத்து வயதினருக்கும் தகுந்த ஓர் உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளிடமிருந்து பெறப்படும் பாலில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி12, மற்றும் டி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இருப்பினும் இதில் உள்ள `லாக்டோஸ்' என்னும் பொருளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
விலங்குகளின் பால் சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படுகிறவர்களுக்கும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் பொருள்களை உணவில் சேர்த்துக்கொள்ளாத `வீகன்' போன்ற உணவு முறைகளைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் விலங்கு பாலுக்குச் சிறந்த மாற்று உணவாக இருப்பவை தாவர பால்கள். இவை தேங்காய், பாதாம், பட்டாணி, சோயா, நிலக்கடலை, அரிசி, ஓட்ஸ் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படுகின்றன.

தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் இவற்றிற்கும் `பால்' என்ற குறிச்சொல்லைச் சேர்த்து `தேங்காய்ப் பால்', பாதாம் பால்' என்றே இதுவரை இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், இனி அவ்வாறு விளம்பரப்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தன் புதிய வரைவில் கூறியுள்ளது.
இது தொடர்பாக FSSAI வெளியிட்டுள்ள அந்த வரைவறிக்கையில், ``ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளிடமிருந்து பெறப்படும் பால் மற்றும் அந்தப் பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்களைக் குறிப்பிடவும் மற்றும் அவற்றுக்கான விளம்பரங்கள், லேபிள்களில் மட்டுமே `பால்' என்ற சொல் இடம்பெற வேண்டும். விலங்கு பாலைத் தவிர்த்து, தேங்காய், பாதம், பட்டாணி, சோயா போன்ற தாவரங்களில் எடுக்கப்படும் பால்போன்ற பொருள்களுக்கான விளம்பரங்கள் மற்றும் லேபிள்களில் `பால்' என்ற சொல்லைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது." என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க எம்.பியும், விலங்கு நலன் அமைப்பான PFA-வின் தலைவருமான மேனகா காந்தி, ``உணவு முறை மற்றும் பால் ஒவ்வாமை போன்ற காரணங்களுக்காக விலங்கு பாலுக்கான மாற்று வழிகளைக் கோரும் நுகர்வோர்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் FSSAI அறிவித்துள்ள இந்தக் கட்டுப்படுத்தப்பட்ட லேபிளிங் தரநிலைகளால், தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் அவற்றின் வர்த்தகம் பாதிக்கப்படும்" எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக FSSAI பொதுமக்களின் கருத்தையும் கேட்டிருக்கிறது.