
முதலீட்டு மர்மம்
சென்னையில் இருக்கும் ஒரு தொழில் நிறுவனத்தைத் தேடி இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிய முதலீடு வந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. பலருக்குத் தெரியவராத அந்த நிறுவனத்தில் அமெரிக்க ஃபண்ட் நிறுவனம் ஒன்று சுமார் ரூ.30,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் பெயர், ராம்சரண் கோ பிரைவேட் லிமிடெட். இதன் 46% பங்குகளை அமெரிக்க ஃபண்ட் நிறுவனமான டி.எஃப்.சி.சி இன்டர்நேஷனல் 4.14 பில்லியன் டாலர் முதலீடு செய்து வாங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. ஐந்து முதல் ஏழு ஆண்டுக்கால அடிப்படையில் இந்த முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாகவும், முதல்கட்ட முதலீடு ஜனவரி 2022-ல் செய்யப் படும் என்றும் டி.எஃப்.சி.சி கூறியுள்ளது.
பொதுவாக, நம் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குப் பெரிய அளவில் முதலீடு வரும்போது, அதனால் நம் நாட்டுக்குக் கிடைக்கும் நன்மை என்ன என்றுதான் பலரும் பேசுவார்கள். ஆனால், இந்த நிறுவனத்துக்கு இத்தனை பெரிய முதலீடு வந்திருந்தபோதும், பலரும் பலவிதமான கேள்விகளையே எழுப்பி வருகிறார்கள். இந்த முதலீட்டில் சம்பந்தப் பட்டிருக்கும் இரண்டு நிறுவனங்களைப் பற்றியுமே தெளிவான விவரங்கள் இல்லை யென்பதே இதற்குக் காரணம். முதலில், ராம்சரண் நிறுவனம் பற்றிப் பார்த்துவிடுவோம்.
இந்த நிறுவனம் முதன்முதலில் 1960-ல் கேரளாவில் உள்ள ஆலப்புழாவில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது மிளகு வர்த்தம் செய்து வந்த இந்த நிறுவனம், பிற்பாடு சென்னைக்கு இடம்பெயர்ந்தது. சென்னையில் ரசாயனம் மற்றும் வேதிப்பொருள்களை விநியோகம் செய்யும் தொழிலைச் செய்ய ஆரம்பித்தது. 1996-97-ல் இந்த நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்த ஆரம்பித்தார்கள் கெளசிக் மற்றும் திவ்யேஷ் பலிச்சா சகோதரர்கள். ரசாயனம் மற்றும் வேதிப்பொருள்களை விற்பதை விட்டுவிட்டு ரப்பர் மற்றும் பிளாஸ்ட்டிக் பொருள்கள் டிஸ்ட்ரிபியூஷன் பிசினஸில் இறங்கினார்கள். இப்போது இந்த நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை சார்ந்த தொழிலைச் செய்து வருகிறது.

இந்த நிறுவனம், கழிவுகளை முழுமையாக ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு (Waste to Energy) செயல்படுவதாகவும், உலகிலேயே இப்படி யொரு நிறுவனம் இல்லை என்பதற்காகத்தான் இந்த நிறுவனத்தின்46% பங்குகளை வாங்கியிருப்பதாகவும் சொல்கிறது டி.எஃப்.சி.சி.
மின் உற்பத்தித் துறையில் உலகின் மிகச் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்று இது; இந்த நிறுவனத்திடம் 700 புராடக்ட்டுகள் இருப்பதாகச் சொல்கிறது டி.எஃப்.சி.சி. ஆனால், ராம்சரண் நிறுவனத்தின் இணைய தளத்துக்குள் சென்று பார்த்தால், அந்த 700 புராடக்டுகளின் பட்டியல் இல்லை. தவிர, இந்த நிறுவனத்திடம் இருக்கும் தொழில் நுட்பம் மிகச் சிறப்பானது எனில், அதற்கான காப்புரிமை இந்த நிறுவனத்திடம் இருக்கிறதா என்கிற கேள்விக்கும் பதில் இல்லை.
இந்த நிறுவனத்தின் வருவாய் 2009-10-ல் ரூ.60 கோடி என்ற அளவில் இருந்ததாகவும், கடந்த 2020-21-ல் ரூ.300 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிறுவனம் 2020-ல் 100 மில்லியன் டேர்ன்ஓவர் செய்திருப்பதாகச் சொல்கிறது. சுமார் ரூ.700 கோடி டேர்ன்ஓவர் கொண்ட ஒரு நிறுவனத்தை 9 பில்லியன் டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.67,500 கோடி) அமெரிக்க நிறுவனம் மதிப்பிட்டது எப்படி என்று கேட்கிறார்கள் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள். ‘‘கழிவுப் பொருள்களை நிர்வாகம் செய்யும் தொழிலானது 400 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. அதனால்தான் எங்கள் நிறுவனம் இந்த அளவுக்கு அதிகமாக மதிப்பிடப் பட்டுள்ளதாக’’ சொல்கிறது ராம்சரண். ஆனால், இதைத் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் ஒப்புக்கொள்வார்களா எனத் தெரியவில்லை. தவிர, தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டைப் பெற்றுத் தருவதில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்க, இந்த முதலீடு தமிழக அரசின் தொழில் முதலீட்டுத்துறை மூலம் வராமல் நேரடியாக வந்தது ஏன் என்பதும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ராம்சரண் நிறுவனம் பற்றி இப்படி பல கேள்விகள் ஒருபக்கம் என்றால், அமெரிக்க ஃபண்ட் நிறுவனமான டி.எஃப்.சி.சி குறித்து சில கேள்விகள் எழுப்பப்படுகிறது. Terra Firma Capital Corporation என்பதன் சுருக்கம்தான் டி.எஃப்.சி.சி. கனடாவில் 2009-ல் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. கடந்த காலத்தில் ரியல் எஸ்டேட் துறை முதலீட்டில் ஈடுபாடு காட்டிவந்த இந்த நிறுவனம் இப்போது திடீரென மாற்று எரிசக்தி பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்த நிறுவனம் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு முதலீடு செய்திருக் கிறது என்கிற கேள்விக்கு ‘‘பிசினஸ் முதலீடுகள் பற்றி வெளிப்படையாகச் சொல்ல முடியாது’’ என்கிறது. இந்த ஃபண்ட் நிறுவனம், ராம்சரண் நிறுவனத்தில் செய்துள்ள முதலீட்டுக்கு இந்திய அரசிட மிருந்து இனிமேல்தான் அனுமதி பெற வேண்டும் என்றும் சொல்லி யிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவின் இத்தனை பெரிய ஃபண்ட் நிறுவனத்துக்கு இந்தியாவில் தனியாக ஒரு அலுவலகம் இல்லை. ராம்சரண் நிறுவனத்தின் முகவரியிலேயே அந்த ஃபண்ட் நிறுவனத்தின் அலுவலகமும் இயங்குவதாகச் சொல்லப்படுவதும் ஆச்சர்யம்!
ராம்சரண் நிறுவனத்தில் அமெரிக்க நிறுவனம் மேற் கொண்ட முதலீடு தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்தக் கேள்வி களுக்குப் பதில் அளிக்கும்படி ராம்சரண் நிறுவனத்துக்கு இ-மெயில் அனுப்பினோம். இந்த இதழ் அச்சேறும் வரை எந்தப் பதிலும் வரவில்லை. இது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு இந்த நிறுவனம் பதில் சொல்லத் தயங்குவது ஏன் என்றும் புரியவில்லை.
இந்த நிறுவனத்தில் செய்யப் படும் முதலீடு தொடர்பான மர்மங்களை மத்திய, மாநில அரசாங்கங்கள் கவனிக்கத் தொடங்கியிருக்கிறதா என்பதும் முக்கியமான கேள்வியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீடு தொடர்பான மர்மங்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு!
2.2 பில்லியன் டாலர் முதலீடு செய்த ராம்சரண்!
மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சேர்ந்த மஸ்ரி கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் 2.2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது ராம்சரண். மஸ்ரி நிறுவனமும் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம்தான். அமெரிக்க ஃபண்ட் நிறுவனம் செய்த முதலீட்டைக் கொண்டுதான் மஸ்ரி நிறுவனத்தில் ராம்சரண் நிறுவனம் முதலீடு செய்யப்போவதாகத் தெரிகிறது. அப்படியெனில், அமெரிக்க ஃபண்ட் நிறுவனமே மஸ்ரி நிறுவனத்தில் முதலீடு செய்திருக் கலாமே என்கிற கேள்வியும் எழுகிறது.