
சோலார்
சூரிய சக்தி (Solar Energy) உபகரணங்களின் விலை 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 20% வரை அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் அடுத்த ஓர் ஆண்டுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பாலி சிலிக்கான், ஈ.வி.ஏ, பேக் சீட்ஸ், அலுமினியம் ஃபிரேம், சோலார் கண்ணாடிகள் போன்றவற்றின் விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்துக்கான காரணங்கள் மற்றும் இந்தியாவில் இந்தத் துறை சிறப்பாகச் செயல்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறனவா என்பதை விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

நிலக்கரி தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலை அதிகரித்துக்கொண்டே செல்வது, உலக அளவிலான மாசு கட்டுப்படுத்தலை விரைவாகச் செயல்படுத்துவதற்கு செயலாக்கத்தில் முனைப்புக் காட்டுவது... இவை அனைத்தும் மாற்று எரிசக்திக்கான வழிமுறைகளை ஆராய்வது மட்டுமல்லாமல், அதற்குத் தீர்வு காண்பதற்கான இலக்குகளை நிர்ணயம் செய்வதில் அரசாங்கம் தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாட்டில் கடந்த 7 வருடங்களில், சூரிய சக்தி உற்பத்தி 17 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. அதாவது, 45 ஜிகா வாட்ஸ் என்ற அளவுக்குக் காணப்படுகிறது. அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதால், வருகிற ஆண்டுகளில் இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகின்றன.
சோலார் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம்...
சீனாவில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது, சீனாவின் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் அனைத்தும், தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை நிலக்கரி மூலம் பூர்த்தி செய்து வருகிறது. சீனாவின் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் மின்சாரத்தை விநியோகிப்பதில் அரசாங்கம் விலை நிர்ணயம் செய்வதும், நிலக்கரியை மட்டும் சந்தை விலைக்கு வாங்கச் செய்வதும், மின் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால், சென்ற ஜூலை மாதத்துக்குப் பிறகு, மாற்று மின்சக்திகளான காற்றாலை, சோலார், அணுசக்தி சார்ந்த மின் உற்பத்திகளின் தேவை அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

இந்தியாவின் பங்களிப்பு...
மத்திய அரசின் சார்பாக நிதி உதவி அளிக்கும் நிறுவனமான இந்திய மாற்று சக்தி வளர்ச்சிக் குழுமம் (ஐ.ஆர்.டி.ஏ) சுமார் ரூ.4,500 கோடி அளவில் பங்களிப்பு செய்ய முடிவு செய்துள்ளது. இதனால், சுமார் ரூ17,200 என்ற அளவுக்கு நேரடி முதலீடு என்ற வகையில் ஈர்க்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. இதுவரை 95% வரையிலான சோலார் பி.வி தயாரிப்புக்கான அனைத்து உபகரணங்களுக்கும் சீனா வையே இந்தியா நம்பி யிருக்கிறது. 2010-ம் ஆண்டு வாக்கில் இது வெறும் 60 மெகாவாட் என்ற அளவுக்கு உற்பத்தி இருந்து வந்த நிலையில், இந்திய மாற்றுச் சக்தி வளர்ச்சிக் குழுமத்தின் நிதி உதவியால் 10 ஜிகா வாட் என்ற அளவுக்கு பி.வி தயாரிப்புகளை அதிகரிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மொத்த அளவு என்று பார்க்கும்போது பாலி சிலிக்கான் உற்பத்தி 30,000 மெட்ரிக் டன்களாக (2011-ல் 2000 மெட்ரிக் டன்கள் இருந்தது) உயரக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முதலீடு அதிகம் தேவைப் படுவதும், குறிப்பிட்ட காலத்துக்குள்ளாக உற்பத்தியைத் தொடங்காமல் காலம் தள்ளிப் போவதால் நிதிச் சுமை அதிகரித்துகொண்டே செல்வதும் சோலார் உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிற முக்கிய சவால்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலியம் போன்ற ஃபாசில் எரிசக்தி தவிர்த்து மற்ற வகையிலான மின்சார உற்பத்தியில் இதுவரை 38% உற்பத்தி செய்துள்ளது; 2030-ம் ஆண்டுக்குள்ளாக 66% என்ற இலக்கை அடைய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 28% என்ற அளவுக்கு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வண்ணம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்தி யுள்ளது. மத்திய மின் உற்பத்தி வாரியத்தின் அறிக்கையின்படி, 2030–ம் ஆண்டுவாக்கில் இந்தியா வின் மொத்த மின் தேவை 817 ஜிகா வாட்டில் (GW) பாதிக்கும் மேலாக கிளீன் எனர்ஜி என்று சொல்லக்கூடிய வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதாவது, 450 ஜிகா வாட்ஸ் எனவும், அதில் சோலார் மூலமாக மின் உற்பத்தி செய்யப் படுவது சுமார் 280 ஜிகா வாட் ஆக இருக்கும் எனவும் கணக்கிடப் பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சோலார் மின் உற்பத்தி, அதற்கான உபகரணங்கள் தயாரித்தல், ஹைட்ரஜன் தயாரிப்பு, இ- ஃப்யூல் (e fuel) மற்றும் எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த இருக்கிறது. இந்த நிறுவனம், வரும் பத்தாண்டுகளில் சுமார் 100 ஜிகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுதோறும் ரூ.750 பில்லியன் அளவுக்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 25 ஜிகா வாட்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம், ஜப்பான் நாட்டின் எஸ்.பி எனர்ஜி நிறுவனத்துடன் 3.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந் தத்தை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் மாற்று எரிசக்தி துறையில் போடப்பட்டுள்ள மிகப் பெரிய ஒப்பந்தம் இது.
டாடா பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார், மின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. 7 ஜிகா வாட்ஸ் என்ற அளவுக்குத் திட்டமிட்டுள்ளது.
சோலார் உற்பத்திக்கான மூலப்பொருள்கள்
இந்தியாவில் சோலார் உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள், சோலார் செல்கள் மற்றும் உபகரணங்கள் 90% இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் பெரும் பாலானவை (80% வரை) சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை 3100 மெகா வாட்ஸ் அளவுக்கு செல் உற்பத்தியும், 9000 மெகா வாட்ஸ் அளவுக்கு உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொள்ளும்போது, இத்துறைக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதை உணர முடிகிறது. சோலார் உற்பத்திக்கான கட்டமைப்பு செலவினங்கள் தற்போதைய நிலையில் மிக அதிகமாக இருப்பதால் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அடுத்த பத்தாண்டுகளில், இத்துறையின் செயல்பாடுகளால், நம் நாட்டின் இறக்குமதிச் செலவினங்கள் கணிசமாகக் குறையும் என்பதால், அரசாங்கத்தின் முழுக் கவனமும், இத்துறை வளர்ச்சியின் மீது தொடர் கண்காணிப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். முதலீட்டாளர்களும், இத்துறையில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்களின் நிதி நிலைமையும், நிர்வாகத்தின் மேலாண்மை எப்படி இருக்கிறது என்பதையும், வர்த்தக செயல்பாடுகளை நிறுவனங்கள் எவ்வாறு கையாள்கின்றன என்பதையும் ஆராய்ந்து முதலீடு செய்யும்பட்சத்தில், நல்ல பலன்களைப் பெறலாம் என்பதில் சந்தேகம் இல்லை.
எரிசக்தி சேமிப்பு வரைவு!
2022-ம் ஆண்டுக்குள்ளாக 100 ஜிகா வாட்ஸ் தயாரிப்பு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக, சுற்றுச் சூழலைப் பாதிக்காத வண்ணம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமிப்பு செய்வதற்காக ‘எரிசக்தி சேமிப்பு வரைவு’ தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
2050-ம் ஆண்டுக்குப் பிறகு, நிலக்கரிக்கான தட்டுப்பாடு இருக்க வாய்ப்புண்டு என்பதால், மாற்று மின் உற்பத்திக்கான வழிவகைகளை ஆராய்ந்து, அதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கத் தொடங்கியுள்ளது.