நடப்பு
ஸ்பெஷல்
Published:Updated:

வாடிக்கையாளர் விருப்பம்...அண்ணாச்சி கடைகளா? ஆன்லைன் கடைகளா?

சித்தார்த்தன் சுந்தரம் படங்கள்: தே.தீட்ஷித்

1990-களின் மத்திய காலகட்டத்திலிருந்து இந்தியாவின் சில்லறை வணிக உலகம் மூன்று முக்கியமான வாய்ப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. அவற்றில் முதலாவது, இந்திய மக்கள்தொகையில் மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்களின் (வருடத்துக்கு ரூ.1,50,000-லிருந்து ரூ.8,50,000 வரை குடும்ப வருமானம் கொண்டவர்கள்) எண்ணிக்கை. இரண்டாவதாக, `மக்கள்தொகை பங்காதாயம்’ எனச் சொல்லக்கூடிய `டெமோகிராஃபிக் டிவிடெண்ட்’. அதாவது,  25 வயதுக்கும் குறைவானவர்கள் ஜனத்தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் இருப்பதால் ஏற்படக்கூடிய நன்மை.

இறுதியாக, கிராமப்புற நுகர்வோர்களின் வளர்ச்சி.

இதில் முதலாவது வாய்ப்பான மத்திய தர வகுப்பினர் குறித்த கணிப்புகளில் பெரும்பாலானவை எதிர்பார்த்தபடி சந்தையைத் தூக்கி நிறுத்தவில்லை. தயாரிப்பாளர்கள் நினைத்ததுபோல, அவர்களின் விருப்பு வெறுப்புகளும், நாட்டங் களும் ஒரே தன்மை (Homogeneous) கொண்டதாக இல்லை. இதனால் தங்களுடைய பொருள் மற்றும் சேவையினால் மத்திய தர வகுப்பைச் சேர்ந்த அனைவரின் தேவைகளையும் ஓரிரு பொருட்களை அறிமுகப்படுத்து வதன் மூலம் திருப்தி செய்ய முடியவில்லை.

வாடிக்கையாளர் விருப்பம்...அண்ணாச்சி கடைகளா? ஆன்லைன் கடைகளா?

இன்றைய உலகம் `வெகுஜன தனிமயமாதலை (Mass Customization)’ நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. உதாரணமாக, நீங்கள் `எக்கனாமிஸ்ட்’ பத்திரிகையின் சந்தாதாரர் எனில், உங்கள் சந்தா முடியும் தருவாயில் அந்த அலுவலகத்திலிருந்து வரும் கடிதத்தோடு உங்கள் பெயர் பொறித்த பத்திரிகையின் டம்மி அட்டையையும் இணைத்து அனுப்புவார்கள். அதைப் பார்த்தவுடன் நமக்கு ஒரு புத்துணர்வு ஏற்பட்டுவிடும்.

இப்படி நுகர்வோர்களுக்கும், வாடிக்கை யாளர்களுக்கும் தொடர்ந்து ஏதாவது ஒரு `அதிர்ச்சி வைத்தியம்’ கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், வாடிக்கை யாளர்களை நம் `எல்லைக்குள்’ வைத்திருப்பது என்பது மிகவும் கடினம்.

இரண்டாவது, மூன்றாவது வாய்ப்புகளான `மக்கள்தொகை பங்காதாயம்’, `கிராமப்புற நுகர்வோர்களின் வளர்ச்சி’ பற்றி இப்போது பார்ப்போம். நம் மக்கள்தொகையில் ஏறக்குறைய 21 கோடி பேர் 16 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்டவர்கள். `ஆப் (App) ஜெனரேஷனை’ சேர்ந்த இவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வாழும் இடம், சமூகப் பொருளாதாரத்தில் அவர்களின் நிலை, வயது என பல காரணிகளில் வேறுபட்டு இருக்கிறார்கள்.

வாடிக்கையாளர் விருப்பம்...அண்ணாச்சி கடைகளா? ஆன்லைன் கடைகளா?

இளைஞர்கள் தங்களின் பணத்தில் 32 சத விகிதத்தைத் துணிகளுக்கும், வெளியே சாப்பிடுவதற்கும் பயன்படுத்துவதாக ஒரு சந்தை ஆய்வின் மூலம் தெரியவந்திருக்கிறது. வெளியே சென்று சாப்பிடுவது என்பது அவர்களுடைய வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. சமூகத்தில் மத்திய தர வகுப்பின் மேல்நிலையில் உள்ளவர்களும் அதற்கும் மேலான பிரிவைச் சார்ந்த இளைஞர்களும் அனைத்துப் பொருட்களுக்குமாக மாதம் ரூ.4,400 செலவழிக்கின்றனர். `நுகர்வெனும் பெரும்பசி’ இவர்களிடம் காணப்படுகிறது.

வாடிக்கையாளர் விருப்பம்...அண்ணாச்சி கடைகளா? ஆன்லைன் கடைகளா?

இன்டர்நெட்டும், மொபைல் போனும் இந்தத் தலைமுறையினர் இடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இளைஞர் களில் 51 சதவிகிதத்தினர் இன்டர்நெட் உபயோகிப் பவர்களாக இருக்கிறார் கள். இந்த வயது பிரிவைச் சேர்ந்தவர்களில் மொபைல் போன் இல்லாதவர்கள் அரிது. மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் ஏதாவது ஒரு ஸ்கின் கிரீமை பயன்படுத்து பவர்களாகவும் இருக்கிறார்கள். ஷாம்பு, ஹேர் ஆயில் இரண்டையும் தங்களது சிகை அலங்காரத்துக்கு நம்பகமான பொருளாகக் கருதுகிறார்கள். ஹேர் கலர் உபயோகிப்பவர்கள் மிகவும் குறைவு. 83 சதவிகிதமான இளைஞர்கள் செய்தித்தாள் படித்தாலும், அடிக்கடி படிப்பதில்லை.  நான்கில் மூவர் எஃப்எம் ரேடியோ கேட்கிறார்கள்.

ஆக, நவீன இன்டர்நெட் யுகத்தில் வாழும், எதாவது சாதிக்க வேண்டும் என்கிற பேரார்வம் கொண்ட இன்றைய தலைமுறையினரின் வேறுபட்ட விருப்பு வெறுப்பு, நாட்டங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப, சேவைகளையும் பொருட்களையும் தந்தால்தான் நிறுவனங்கள் வெற்றி பெற முடியும். சரி, இன்றைக்கு கிராம நுகர்வோர்கள் எப்படி இருக்கிறார்கள்?

 70 சதவிகித சாலைகள் வாகனங்கள் செல்லக்கூடியதாக இருக்கின்றன.

 தொலைத்தொடர்பு வசதி (மொபைல் போன்) கடந்த 4 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்திருப்பதாக டிஆர்ஏஐ கூறுகிறது. இது நகர்ப்புற வளர்ச்சியைவிட அதிகம்.

 கிராமங்களில் வசிப்பவர்களில் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 68 சத விகிதமாக உயர்ந்திருக்கிறது.

 மருத்துவ வசதி பெற கிராமங்களில் வசிக்கும் மக்களில் 68% பேர் 5 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.

 95 சதவிகித கிராமங்களில் மின்சார வசதி இருக்கிறது. 7,00,000 பள்ளிக்கூடங்கள், 3,88,578 கி.மீட்டர் சாலைத் தொடர்பு, கிராமச் சந்தைகள் என 47,000 சந்தைகள் உள்ளன.

கிராமங்களின் மொத்த எஃப்எம்சிஜி விற்பனையில், பத்து மாநிலங்களைச் சேர்ந்த கிராமங்களில் மட்டும் 72% விற்பனை ஆவதாக நீல்சனின் சந்தை ஆய்வு கூறுகிறது. அதுபோல, 19,000 கிராமங்கள் மட்டும் 66 சதவிகித குளிர்பான விற்பனைக்கு காரணமாக இருப்பதாகவும் அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

வாடிக்கையாளர் விருப்பம்...அண்ணாச்சி கடைகளா? ஆன்லைன் கடைகளா?

கிராமத்தில் வசிக்கும் மக்களின் வருமானமும் அரசாங்கத்தின் பலவித பணித் திட்டங்களால் கடந்த ஐந்தாண்டுகளில் உயர்ந்திருக்கின்றன. அதுபோல, அவர்களின் விருப்பு வெறுப்புகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக் கின்றன. ஹரியாலி கிஸான் பஜார், ஆதார், சவுபால் சாகர், கிஸான் சன்சார் போன்ற நவீன தொடர் கடைகளும் இந்தியாவின் பல பகுதிகளில் தொடங்கப்பட்டு `கல்லா’ கட்டி வருகின்றன. நீல்சன் ஆய்வின்படி, ஏறக்குறைய ரூ.90,000 கோடியாக (15 பில்லியன் டாலர்) உள்ள எஃப்எம்சிஜி விற்பனை இன்னும் பத்து வருடங்களில் 100 பில்லியன் டாலரைத் தொடக்கூடும் என கணித்திருக்கிறது.

ஆன்லைன் யுகத்தில், வீட்டில் உட்கார்ந்து கொண்டே கிராமத்தில் இருக்கக்கூடிய நுகர்வோர்கள் பொருட்களை வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. கிராமத்தில் மொபைல் போன் வைத்திருப்பவர்களில் சுமார் 35% பேர் இன்டர்நெட்டை உபயோகிப்பவர்களாக இருக்கிறார்கள். இதில் 87% பேர் தங்கள் போன் மூலமாகவும், 10% பேர் தங்கள் வீடுகளிலோ அல்லது நண்பர்களின் வீடுகளிலோ உபயோகப்படுத்துபவர்களாகவும், 1% கிராமத்தில் உள்ள இன்டர்நெட் கஃபே மூலமாகவும், 2% கிராமத்துக்கு வெளியே உள்ள இன்டர்நெட் கஃபே மூலமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

இப்போது வங்கிகளின் ஏடிஎம்மும் கிராமங்களைச் சென்றடைந்துவிட்டன. அண்ணாச்சிக் கடையிலிருந்து ஆன்லைன் கடை வரை நுகர்வோர் கலாசாரம் பரந்து விரிந்திருக்கிறது. 2012-ல் 816 மில்லியன் டாலராக இருந்த ஆன்லைன் வர்த்தகம், 2013ல் 1,983 மில்லியனாகவும், 2016-ல் 8,519 மில்லியனைத் தொடும் என்றும் கணிக்கப் பட்டிருக்கிறது.

மேலே குறிப்பிட்ட மூன்று வாய்ப்புகளுடன் நகர்ப்புற நுகர்வோர்களைப் பற்றியும் ஒரு பருந்துப் பார்வை பார்த்துவிடலாம்.எஃப்எம்சிஜி வணிகத்தைப் பொறுத்த வரையில் இந்திய நுகர்வோர்கள், குறிப்பாக, நகர்ப்புற நுகர்வோர்கள், மத்தியில் வாய் வழியாகத்தான் (word of mouth) அதிகமாக இருக்கிறது. இன்டர்நெட் பரவலாக்கத்துக்குப்  பிறகு, மூன்றுக்கு ஒரு நுகர்வோர் மாடர்ன் டிரேட் சென்று பொருட்கள் வாங்குவதற்கு முன்பாக இணையத்துக்குச் சென்று தேவை யான தகவல்களைத் திரட்டிக்கொள்கின்றனர்.  பெரும்பாலான நேரங்களில் திட்டமிட்டதற்கும் அதிகமாக மக்கள் பொருட்களை வாங்கிக் குவிப்பார்கள். இதற்கான காரணங்கள் மூன்று:

1. கடையில் பொருளைப் பார்த்தவுடன் நினைவுக்கு வந்து வாங்குவது. 2. புதிய பொருளைப் பார்த்தவுடன் வாங்குவது. 3. கடையில் பொருட்கள் வாங்கும்போது கண்ணில்படும் புரமோஷன்கள்/தள்ளுபடிகள்.

வாடிக்கையாளர் விருப்பம்...அண்ணாச்சி கடைகளா? ஆன்லைன் கடைகளா?

90 சதவிகிதமான நுகர்வோர்கள் அதிகமாக வாங்கித் தள்ளுவது, இந்த மாதிரியான அறிவிப்புகளைப் பார்த்த பிறகுதான்.

நகர்ப்புற நுகர்வோர்களில் 44 சதவிகிதத்தினர் மாதம் ஒருமுறையாவது மாடர்ன் டிரேடுக்கு விசிட் அடிப்பவர்களாக இருக்கிறார்கள். இது 2007-ம் ஆண்டு 18 சதவிகிதமாக இருந்தது. நம் நாட்டினர் தங்களது மாதாந்திர செலவில் பெரும் பங்கை மாடர்ன் டிரேடில் செலவழிப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. நகர்ப்புற எஃப்எம்சிஜி விற்பனையில் மாடர்ன் டிரேடின் பங்கு சுமார் 10 சதவிகிதமாகும்.

வாடிக்கையாளர் விருப்பம்...அண்ணாச்சி கடைகளா? ஆன்லைன் கடைகளா?

இணையத்தில் தகவல் சேகரித்துக் கடைகளுக்குச் சென்று வாங்குவதும், கடைகளில் பார்த்துவிட்டு வந்து அதே பொருட்களை மிகவும் குறைவான விலைக்கு (சில சமயங்களில் அடிமாட்டு விலைக்குக் கூட) ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவதும் வழக்கமாகிவிட்டது. ஆக, ஆன்லைன் என்பது பொருட்கள் வாங்குவதற்கான இன்னொரு வாயிலாக இருந்தாலும் இனி வரக்கூடிய நாட்களில் இதன் ஆதிக்கம் அதிகரிக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் குறிப்பிடத் தக்கவை:

1) அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு, 2) விலை மலிவு, 3) இருந்த இடத்திலிருந்தே ஆர்டர் செய்யக்கூடிய வசதி, 4) கேஷ் ஆன் டெலிவரி, 5) ஆன்லைன் டெலிவரியில் வரவிருக்கும் புதுமைகள் (ஆளில்லா ட்ரோன் மூலம் டெலிவரி, ஆன்லைன் – ஆஃப்லைன் கடைகளுக்கிடையேயான ஒப்பந்தம் முதலியவை), 7) கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்து வதில் உள்ள பாதுகாப்புத் தன்மை,
8) பணத்தை முதலீடு செய்யத் தயாராக இருக்கும் பன்னாட்டு முதலீட்டு நிறுவனங்கள்.

ஆக, முன்பு பொருட் களைத் தொட்டுப் பார்த்து, திருப்தி ஏற்பட்ட பிறகே வாங்கிய நாம், இன்று காய்கறி, பழங்களைக்கூட ஆன் லைனில் வாங்குகிறோம். எனினும் எஃப்எம்சிஜி பொருட்களைப் பொருத்த வரை, நுகர்வோர்களின் ஆபத்பாந்தவராக இருப்பவர்கள், நம் வீடுகளுக்குப் பக்கத்திலிருந்து `தேவை’ அறிந்து `சேவை’ செய்யும் நம் அண்ணாச்சிகளே!

(நன்றி: Comscore.com, IAMAI, Nielsen reports, Marketing white book 2013/14, IMS Health, Rural Electrification corporation, Unicef, Census 2011)