
பைனான்ஷியல் ஆப்ஸ் GADGETSஞா.சுதாகர்
மை ஃபைனான்ஸஸ்! (My Finances)

வீட்டு பட்ஜெட்டை, தினந்தோறும் சிரமமின்றி நிர்வகிக்க உதவும் ஆப்தான் இந்த ‘மை ஃபைனான்ஸஸ்’. இந்த ஆப்பை டவுன்லோட் செய்தாலே, உங்களுக்கான கணக்கை உருவாக்கிவிடும்.
பிறகு, உங்களின் தினசரி வரவு, செலவு கணக்குகளை இதில் பதிவிட்டு நிர்வகிக்கலாம். நீங்கள் தினந்தோறும் செய்யும் செலவுகளான உணவு, துணிமணிகள், கணினி, பெட்ரோல், சினிமா ஆகிய அனைத்துவிதமான செலவுகளையும் தனித்தனியாகப் பதிவிட முடியும். இதன்மூலம் உங்களால் நாள்தோறும், வாரந்தோறும், மாதந்தோறும் செய்த செலவு மற்றும் வரவு குறித்த விவரங்களைத் தெளிவாகக் கணக்கிட முடியும். அத்துடன், அந்த மாதத்தில் நீங்கள் உணவுக்காக எந்த அளவுக்குச் செலவு செய்துள்ளீர்கள், உடைகளுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்பன போன்ற விவரங்களையும் கணக்கிட முடியும் என்பதால், அதிக அளவில் செலவு பிடிக்கும் விஷயங்களைக் கண்டறிந்து, குறைக்க முடியும்.
இதே விவரங்களை சார்ட் மூலமாக, தெளிவாகப் பார்க்கும் வசதியும் இருக்கிறது. வீடு, அலுவலகம் என இரண்டு இடங்களுக்குமான வரவு, செலவு விவரங்களைக் கணக்கிட வேண்டுமானால், இரண்டுக்கும் தனித்தனியே கணக்குகளைத் தொடங்கி நிர்வகிக்க முடியும்.
வரவை விடவும், செலவு அதிகமாகப் போனால், அதை இந்த ஆப் எளிதாகக் காட்டிவிடுகிறது. இணையம் இல்லாத சமயங்களிலும் இது இயங்குகிறது. ஃபைனான்ஷியல் ஆப்களில் இருக்கும் சிக்கல்களில் ஒன்று, அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த புரிதல் இல்லாததே. இந்த ஆப்ஸை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சி வீடியோக்கள் இதில் உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் நிறங்களுடன் சிக்கல்கள் இல்லாத, எளிதான பொருளாதார ஆப்பாக இருக்கிறது இது.
ஃபாஸ்ட் பட்ஜெட் - எக்ஸ்பென்ஸ் மேனேஜர் (Fast Budget - Expense Manager)

பெயருக்கு ஏற்றாற்போல, விரைவாகப் பயன்படுத்த ஏற்றதாக இருக்கிறது ஃபாஸ்ட் பட்ஜெட் ஆப். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து, திறந்தாலே எப்படிப் பயன்படுத்துவது என்பதை கிராஃபிக்ஸ் மூலம் விளக்கி விடுகிறது. உங்களுடைய வரவு, செலவு விவரங்களை மற்ற ஆப்ஸ்களில் இருப்பதைப் போலவே, இதிலும் உள்ளீடு செய்துகொள்ள முடியும்.
இதில் நீங்கள் இ-மெயில் உதவியுடன் கணக்கு ஒன்றைத் தொடங்கி லாக்-இன் செய்வதன் மூலமாக, மேலும் நான்கு டிவைஸ்களில் இந்த பட்ஜெட் விவரங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். அத்துடன் கிரெடிட் கார்டு விவரங்களையும் இதில் இணைத்து நிர்வகிக்க முடியும்.
உங்களது வரவு, செலவு விவரங்களை மொத்தமாக நிர்வகிக்க, ஒரு குட்டி பெர்சனல் அசிஸ்டன்ட் போல செயல்படுகிறது இந்த ஆப். இதில் இருக்கும் உங்கள் தகவல்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்க, பாஸ்வேர்டு மூலம் லாக் செய்யவும் முடியும். தகவல்களை csv மற்றும் xls பார்மேட்டில் சேமித்துக் கொள்ளவும் முடியும். ஆனால், இதற்குப் பணம் செலுத்த வேண்டும் என்பது மைனஸ்.
உங்கள் மாதச் செலவு விவரங்களைக் கணக்கிட பை சார்ட் மற்றும் பார் சார்ட் வசதி இருக்கிறது. தினம்தோறும் நீங்கள் செய்யும் செலவுகளை எளிதாகப் பார்க்க காலண்டர் வசதியும் உண்டு. சிக்கலான பல்வேறு தகவல்களை நாம் பதிவுசெய்தாலும், அதை எளிதாகக் காணும் வகையில் இருக்கிறது இந்த ஆப்பின் வடிவமைப்பு.