Published:Updated:

பிசினஸில் ஜெயிக்க இனி ஆப்ஸ் அவசியம்... ஏன்?

ஒரு தொழில் உங்களுக்கு நன்றாக செய்யத் தெரிகிறது. அந்தத் தொழிலை இன்னும் பல லட்சம் பேருக்கு சென்றடைகிற மாதிரி வளர்த்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு ஆப்ஸ் நிச்சயம் அவசியம்.

பிசினஸில் ஜெயிக்க இனி ஆப்ஸ் அவசியம்... ஏன்?
பிசினஸில் ஜெயிக்க இனி ஆப்ஸ் அவசியம்... ஏன்?

மொபைல் அப்ளிகேஷன்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில், உலக அளவில் 14,930 கோடி அப்ளிகேஷன்கள் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கின்றன. இது 2017-ம் ஆண்டில் 19,700 கோடியாக அதிகரித்தது. 2020-ம் ஆண்டுக்குள் இதன் எண்ணிக்கை 35,290 கோடியாக அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வலைதளங்கள் கொடுக்காத எளிமையை, மொபைல் அப்ளிகேஷன்கள் வழங்குவதுதான் இதற்கு முக்கியக் காரணம். 

ஒரு தொழிலை நீங்கள் நல்லமுறையில் செய்துவரும் நிலையில், அதை இன்னும் பல லட்சம் பேருக்குச் சென்றடையும் நோக்கில் வளர்த்தெடுக்க நினைப்பவர்களுக்கு, ஆப்ஸ் அவசியம். ஏற்கெனவே உள்ள தொழில்முனைவோர்கள், புதிதாக தொழில் தொடங்குவோர், தங்களின் வியாபார நடைமுறைக்காக ஒரு ஆப் (App) அவசியம் தேவை என்பதை உணர வேண்டும். போட்டி நிறைந்த இந்த உலகில் நீங்கள் முதலில் ஆப்களைப் பயன்படுத்த தொடங்கினீர்கள் எனில், பிசினஸில் நீங்கள் இன்று மட்டுமல்ல என்றும் ஜெயிப்பீர்கள்.

ஆப்ஸ் எப்படி உருவாக்குவது?

ஒரு நிறுவனம் அனைத்து வசதிகளுடன் ஆப்களை உருவாக்க நினைத்தால், குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாய் செலவாகும். இதற்கும் குறைவான செலவில்கூட உருவாக்க முடியும். ஆனால், அதன் தரமும் எளிமையும் குறைந்தே இருக்கும். இன்றைய நிலையில் அதை உருவாக்கித் தருபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் நம்பகமானவர்களை அணுகி, உருவாக்கிக்கொள்ளலாம்.

ஆப்களை உருவாக்கிவிட்டோம். அதன் பிறகு என்ன செய்வது, இதை எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பதே உங்களின் கேள்வியாக இருக்கும். யார் உங்களுக்கு உருவாக்கித் தருகிறார்களோ, அவர்களைக்கொண்டே அனைத்து ஆப் ஸ்டோர்களில் அதை அப்லோடு செய்துவிட முடியும். அனைத்து ஆப் ஸ்டோர்களிலும் இயங்கும்விதமாகவும், அனைத்துவிதமான மொபைல் டிவைஸ்களில் செயல்படுவது மாதிரியும் ஆப்களை உருவாக்க, குறைந்தபட்சம் இரண்டு வாரம் முதல் அதிகபட்சம் எட்டு மாதம் வரை ஆகலாம்.

ஆப்ஸ் உருவாக்கும்போது..!

ஆப்கள் எளிமையாகக் கையாளக்கூடியதாகவும், வேகமாக டவுன்லோடு ஆகும்படியாகவும் இருக்க வேண்டும். ஆப்ஸின் அளவு குறைவானதாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்துவிதமான மொபைல்களில் இயங்கும் விதமாக ஆப்களின் வடிவமைப்பு இருக்க வேண்டும். ஆப்கள் மூலம் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும்படியாக இருக்க வேண்டும். ஆப்களை உருவாக்கும்போது, ஆப்ஸ் மூலம் பிசினஸ் வளர்ச்சியை எதிர்பார்ப்பதுபோல, அந்த ஆப்ஸ்களால் வருமானம் ஈட்டுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. நமது ஆப்ஸில் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலமும், கட்டணத்துக்குரிய ஆப்ஸாக உருவாக்குவதன் மூலமும் நம்மால் வருமானத்தை ஈட்ட முடியும்.

ஆப்ஸை உருவாகும்போது `இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ கான்செப்ட்டை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, ஒரு ஆப்பை அப்கிரேடு செய்யும்போது, மேலும் சில கட்டணத்துடன்கூடிய சேவைகளைத் தங்களின் வாடிக்கையாளர்களுக்குத் தர நினைத்தால், அதற்கான வருமானத்தை `இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ மூலம் பெறமுடியும். உதாரணத்துக்கு, ஃபிட்னஸ் நிலையத்தின் ஆப்பை அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருப்பதாகக் கொள்வோம். அதை அப்கிரேடு செய்யும்போது, உடற்பயிற்சி குறித்தும் உணவுமுறைகள் குறித்தும் டிப்ஸ் வழங்க நினைக்கிறார்கள். இதற்கு மாதம் 100 ரூபாய் கட்டணத்தைப் பெற இருப்பதாகக் கொள்வோம். இதை அப்கிரேடு செய்யும்போது வாடிக்கையாளர்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் தெரியப்படுத்தலாம். அவர்கள் அந்தச் சேவையைப் பயன்படுத்த நினைக்கும்பட்சத்தில், ஆப் ஸ்டோர் வழியாகக் கட்டணத்தைச் செலுத்தலாம். இதற்கு முன்னமே உருவாக்கியிருக்கும் ஆப்பில் `இன் ஆப்ஸ் பர்ச்சேஸ்’ வசதி இருக்க வேண்டும்.

ஆப் ஸ்டோர் அனலெட்டிக்ஸ்!

ஆப் ஸ்டோரில் ஆப்களை அப்லோடு செய்வதில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, நீங்களாகவே தனியாகக் கணக்கைத் திறந்து, ஆப் ஸ்டோர்களில் தங்களுடைய ஆப்பை லோடுசெய்வது. இன்னொன்று, ஆப்களை உருவாக்கித் தந்த நிறுவனத்தாரின் ஆப் ஸ்டோர் கணக்கு மூலம் லோடுசெய்வது. இந்த இரண்டுக்குமிடையில் பெரிய வித்தியாசமில்லை என்றாலும், நீண்டநாள் நோக்கில் ஆப் ஸ்டோரில் தங்களின் பிராண்டை உருவாக்க நினைப்பவர்கள் தனியாக கணக்கு தொடங்கி லோடுசெய்வதே நல்லது. இதன் மூலம் உங்கள் ஆப்களை எத்தனை பேர் டவுன்லோடு செய்தார்கள், எந்த வயதைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஆப்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பது போன்ற விவரங்களை ஆப் ஸ்டோர் அனலெட்டிக்ஸ் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

எல்லா தொழில்களுக்கும் ஆப்ஸ்!

இன்றைய நிலையில் ஹெல்த்கேர் சார்ந்த தொழில்களைச் செய்வோர், வீட்டுக்குத் தேவையான சேவைகளை வழங்குவோரின் தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், இவர்கள் தங்களுக்கான ஆப்களை உருவாக்கி அதன் மூலம் தங்களின் வருமானத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, இன்டீரியர் டிசைன் தொழில்களையும் ஆப் மூலம் செய்ய முடியும். உதாரணத்துக்கு, இன்டீரியர் டிசைன் தொழிலில் இருப்பவர்கள் தங்களுக்கான ஆப்பில் டிசைன்களுக்கான படங்கள், ஏற்கெனவே செய்திருக்கும் வீட்டின் இன்டீரியர் படங்கள் மற்றும் இன்டீரியர் டிசைன் சார்ந்த விவரங்கள் என அனைத்தையும் ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம். இதைப் பயன்படுத்தும்போது நேரில் சென்று டிசைன்களைப் பார்க்க வேண்டிய நேரம் வாடிக்கையாளர்களுக்கு மிச்சமாகும். தவிர, இந்தச் சேவைகளை ஆப் மூலம் தரும்போது எப்போது வேண்டுமானாலும், எங்கு இருந்து வேண்டுமானாலும் பார்த்து ஆர்டர்களைத் தர முடியும் என்பதால், கிடைக்கக்கூடிய ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.

ஆப் வகைகள்!

ஆப்ஸைப் பொறுத்தவரை, நேட்டிவ் அப்ளிகேஷன் (Native application) மற்றும் க்ராஸ் பிளாட்பார்ம் அப்ளிகேஷன் (Cross platform application) என இரண்டு வகை இருக்கிறது. நேட்டிவ் அப்ளிகேஷன் என்பது, ஒவ்வொரு ஆப் ஸ்டோருக்கும் தனியாக ஆப்பை உருவாக்கும் முறை. ஆனால், க்ராஸ் பிளாட்பார்ம் அப்ளிகேஷன் என்பது, ஒரு ஆப்பை உருவாக்கி அதை அனைத்து ஆப் ஸ்டோர்களுக்கும் ஏற்றாற்போல மாற்றிக்கொள்ளும் வசதி.

அதேபோல, இன்டர்நெட் உதவியில்லாமல் இயங்கக்கூடிய ஆப்ஸ் (இந்த ஆப்களை டவுன்லோடு செய்ய மட்டும் இன்டர்நெட் வசதி தேவைப்படும்) இன்டர்நெட் உதவியுடன் இயங்கும் ஆப்ஸ் என இரண்டு வகைகளில் ஆப்களை உருவாக்க முடியும். இதில் இன்டர்நெட் வசதி இல்லாத ஆப்கள் பெரும்பாலும் கேம்ஸ் போன்ற பொழுதுபோக்கு ஆப்களாகவே இருக்கும்.

வேலைக்கான கன்சல்டன்சி நிறுவனங்களை அமைப்பவர்கள், டுடோரியல் கல்வி நிறுவங்கள், டியூஷன் சென்டர்கள், கோச்சிங் சென்டர்களை அமைப்பவர்கள் தங்களுக்கான ஆப்களை உருவாக்கி, அதன்மூலம் தங்களின் மாணவர்களுக்கு பயிற்சி வழங்க முடியும். மாணவர்களை ஒருங்கிணைத்து ஆப்ஸ் மூலம் எளிமையான தேர்வுகளைக்கூட நடத்தும்படியாக ஆப்களை உருவாக்கிக்கொள்ளலாம். அதன்மூலம் அவர்களுக்கு பாடம் நடத்துவது, குறிப்புகளை வழங்குவது போன்ற அனைத்து விஷயங்களையும் செய்ய முடியும்.