Published:Updated:

ஷேர்லக் : இன்ஃபோசிஸை கேள்வி கேட்ட செபி !

ஷேர்லக் : இன்ஃபோசிஸை கேள்வி கேட்ட செபி !

ஷேர்லக் : இன்ஃபோசிஸை கேள்வி கேட்ட செபி !

ஷேர்லக் : இன்ஃபோசிஸை கேள்வி கேட்ட செபி !

Published:Updated:
##~##

வந்ததும் வராததுமாக, ''இந்திய ரூபாயின் மதிப்பு என்ன என்று பார்த்துச் சொல்லும்'' என்றார் ஷேர்லக். ''57.66 - என்ன இது, கரன்சி டிரேடிங் காய்ச்சல் உமக்கும் வந்துடுச்சா?'' என்று கலாய்த்தோம்.

''கடந்த சில நாட்களில் மத்திய அரசு எடுத்த சில அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ரூபாய் மதிப்பு உயர்ந்தது. அது தொடர்கிறதா, இல்லை மீண்டும் சரிந்துவிட்டதா என்பதைத் தெரிந்துகொள்ளவே பார்க்கச் சொன்னேன்!'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அது சரி, இன்ஃபோசிஸ் நிர்வாகத்தில் மீண்டும் நாராயணமூர்த்தி இணைந்தவுடன் ஊதிய உயர்வு அறிவித்துவிட்டாரே!'' என்றோம்.

''ஆமாம், மனிதர் உள்ளே நுழைந்தவுடன் அதன் 1.5 லட்சம் பணியாளர்களுக்கும் எதிர்பாராதவிதமாக சம்பள உயர்வு கிடைத்து விட்டது. உள்நாட்டு பணியாளர்களுக்கு 8 சத விகிதமும், வெளிநாட்டு பணியாளர்களுக்கு 3 சதவிகிதமும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஊழியர்கள் அனைவரும் மீண்டும் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். இது ஒருபக்கமிருக்க, கடந்த ஒன்றாம் தேதி நடந்த இயக்குநர் குழு கூட்ட விவரங்கள் பற்றி செபி பல கேள்விகளை எழுப்பி இருக்கிறதாம். இன்ஃபோசிஸை உயர்த்துவதோடு, இந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டிய கடமை நாராயணமூர்த்திக்கு வந்துசேர்ந்திருக்கிறது'' என்றவருக்கு, ஒரு  தட்டில் மாம்பழத் துண்டுகளை வைத்துத் தந்தோம்.

''பங்குச் சந்தை வேகமாக சரியத் தொடங்கும்போது, அதை தடுத்து நிறுத்துவதை நிதி அமைச்சர் வாடிக்கையாக வைத்திருக்கிறாரே..?'' என்றோம்.

''உலக நாடுகள் இந்தியப் பொருளாதாரத்தைப் பங்குச் சந்தையின் செயல்பாட்டை வைத்துதான் முடிவு செய்கின்றன என்பதால், அதற்கு மத்திய அரசும் நிதி அமைச்சரும் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அடுத்த சில வாரங்களில் தொடர்ச்சியான பொருளாதார மாற்றங்கள் கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் உறுதி அளித்தபிறகு சந்தையும் இந்திய ரூபாயும் ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு (எஃப்.டி.ஐ.), எஃப்.ஐ.ஐ. முதலீடு போன்றவற்றில் முதலீட்டை கணிசமாக அதிகரிக்க விதிமுறைகளை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எஃப்.ஐ.ஐ.கள் செபியிடம் பதிவு செய்ய தேவை இல்லை என்பதுபோல விதிமுறை தளர்த்தப்பட இருக்கிறதாம். ஆனால், இதை செபி ஒப்புக்கொள்ளுமா?  

ஷேர்லக் : இன்ஃபோசிஸை கேள்வி கேட்ட செபி !

அந்நிய முதலீடுகளை இந்தியாவுக்குள் கொண்டுவர விதிமுறைகளைத் தளர்த்துவோம் என்று சொல்லும் நிலையில், அதையே காரணம் காட்டி, இந்தியாவின் வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டில் 5.7 சதவிகிதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இது, இதற்கு முன் 6.1 சதவிகிதமாக இருக்கும் என கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது'' என்றார்.

''சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான ஃபிட்ச், இந்திய நிறுவனங்களின் தரக்குறியீட்டை உயர்த்தி இருக்கிறதே?'' என்று கேட்டோம்.

''இந்திய முன்னணி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கான தரக்குறியீட்டை நெகட்டிவி லிருந்து ஸ்டேபிள்-ஆக மாற்றம் செய்துள்ளது. கெயில், ஐ.ஓ.சி., என்.டி.பி.சி., என்.ஹெச்.பி.சி., செயில், எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, பி.என்.பி., ஐ.சி.ஐ.சி.ஐ., கனரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐ.டி.பி.ஐ. பேங்க் உள்ளிட்டவைகளுக்கான தரக்குறியீடு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்த பங்குகளை கொஞ்சம் கவனிக்கத் தொடங்கலாம்!'' என்று சிக்னல் காட்டினார்.

''ஹெச்.டி.ஐ.எல். பங்குக்கு என்ன ஆச்சு. அதன் விலை அநியாயத்துக்கு குறைந்திருக்கிறதே?'' - கொஞ்சம் பதற்றத்துடன் கேட்டோம்.

''நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் இந்தப் பங்கின் விலை 66 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், இந்நிலையில் இருந்து இந்தப் பங்கின் விலை 20 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புண்டு என பல பங்கு தரகு நிறுவனங்கள் சொல்கின்றன. இருந்தாலும் சிறு முதலீட்டாளர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம், இன்றைய தேதியில் ஹெச்.டி.ஐ.எல்-ன் கடன் ரூ.3,822 கோடி. மேலும், இந்நிறுவனத்தின் பணவரத்திலும் சிக்கல்தான்'' என்று எச்சரித்தார்.

''எம்.எம்.டி.சி. பங்கின் விலையும் 72 சதவிகித தள்ளுபடியில் அல்லவா கிடைத்தது.  அதை வாங்கலாமா என பல வாசகர்கள் கேட்கிறார்கள்?'' என்றோம்.

ஷேர்லக் : இன்ஃபோசிஸை கேள்வி கேட்ட செபி !

''பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகள் மக்களிடம் 10 சதவிகிதம் இருக்கவேண்டும் என்கிற செபியின் ஆணையை நிறைவேற்றவே இப்படி செய்தது மத்திய அரசாங்கம். கடந்த புதன்கிழமை அன்று அந்தப் பங்கின் முடிவு விலை 211.45 ரூபாயாக இருக்க, வெறும் 60 ரூபாய் என்கிற அளவில் அந்தப் பங்கு விற்கப்பட்டது. விலை மலிவு என்பதால் பங்குகள் வேண்டி 1.55 மடங்கு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. வழக்கம்போல மொத்த பங்கு விற்பனையில் எல்.ஐ.சி.யின் பங்கு 25 முதல் 30 சதவிகிதமாக  இருக்கும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இதன் மதிப்பு சுமார் 200 முதல் 250 கோடி ரூபாய்'' என முக்கியமான புள்ளிவிவரங்களை நமக்கு புட்டுப்புட்டு வைத்தார் ஷேர்லக்.

''ஒருபக்கம் பல நிறுவனங்கள் தங்கள் பங்குகளை பொதுமக்களுக்கு விற்க, இன்னொரு பக்கம் சில நிறுவனங்கள் பங்கை திரும்ப வாங்க ஆரம்பித்திருக்கிறதே?'' என்றோம்.

''சந்தை சரிந்து பல நிறுவனப் பங்குகள் கவர்ச்சிகரமான விலையில் வர்த்தகமாகி வருவதை சாக்காக வைத்து முன்னணி நிறுவனங்கள் அவற்றின் பங்குகளை வாங்க ஆரம்பித்திருக்கின்றன. பார்தி ஏர்டெல் குழுமத்தைச் சேர்ந்த பார்தி டெலிகாம் நிறுவனம் ரூ.50 கோடி மதிப்புள்ள பங்குகளை கடந்த வாரத்தில் வாங்கி அதன் பங்கு மூலதன விகிதத்தை 45.77-லிருந்து 45.81 சதவிகிதமாக அதிகரித்துள்ளது'' என்றார்.

''ஜைலாக் சிஸ்டத்தில் என்ன பிரச்னை? மீண்டும் அதன் விலை உயருமா?'' என்றோம்.  

''2012 அக்டோபரில் ஜைலாக் சிஸ்டம் நிறுவனத்தின் பங்கின் விலை ஒன்று 300 ரூபாயாக இருந்தது. அதே ஆண்டு நவம்பரில் 77 ரூபாய்க்கு வீழ்ச்சி கண்டது. இதற்கு காரணம், அந்நிறுவனத்தின் புரமோட்டர் சுதர்சன் வெங்கட்ராமன் என செபி இப்போது கண்டுபிடித்துள்ளது. இதற்கடுத்து அவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதை செபி தடை விதித்துள்ளது. ஆக, இந்தப் பங்கு விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது!'' என்றவர், ஒரு சந்தோஷமான செய்தியைச் சொன்னார்.

''துபாய் என்.ஆர்.ஐ.களுக்கு சென்செக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பு விரைவில் கிடைக்க உள்ளது. இந்தியாவின் எம்.சி.எக்ஸ்., துபாய் கோல்டு அண்ட் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஒரு பகுதி பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இந்நிறுவனங்களின் முயற்சியால் சென்செக்ஸ் ஃப்யூச்சர்ஸ் கான்ட்ராக்ட் அதில் கொண்டு வரப்பட உள்ளது. இது ஜூலை மாதம் முதல் வாரத்தில் வர்த்தகமாக வாய்ப்புள்ளது. தற்போது சென்செக்ஸ் ஃப்யூச்சர்ஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மட்டும் வர்த்தகமாகி வருகிறது'' என்றவர், ''சந்தை இன்னும் வாலட்டைல் ஆக இருப்பதால், ஷேர் டிப்ஸ் இந்த வாரமும் வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு, வீட்டை நோக்கிப் பறந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism