இந்தியாவில் மட்டுமல்லாது ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானி இப்போது அந்த இடத்தை இழந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அதானி நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தது.

இதனால் கடந்த சில நாள்களாக இந்திய பங்குச்சந்தையில் அதானியின் நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகள் 5 லட்சம் கோடியை இழந்துள்ளன. இந்த இழப்புக்களிடையே அதானி நிறுவனம் எஃப்.பி.ஓ முறையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து 20,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது.
மார்க்கெட்டில் அதானியின் பங்குகள் சரிந்தாலும் FPO முறையில் அதானியின் நிதி திரட்டும் திட்டத்துக்கு மக்களிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் வரவேற்பு இருக்கத்தான் செய்தது. முழுமையாக 20,000 கோடியும் இதில் அதானிக்கு கிடைத்தது. ஆனால், திடீரென நேற்று இரவு இந்த 20,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தை அதானி திரும்ப பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அதானி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மார்க்கெட்டில் நிலவும் ஏற்ற இறக்கம் மற்றும் தெளிவற்ற சூழ்நிலை ஆகியவற்றால் முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு எஃப்.பி.ஓ திரும்ப பெறப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

அதானி நிறுவனத்தின் நிர்வாகக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்துக்குப் பிறகு, கௌதம் அதானி வெளியிட்ட வீடியோ அறிக்கையில், எஃப்.பி.ஓ-வுக்கு மக்கள் காட்டிய ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மார்க்கெட்டில் ஏற்ற இறக்கம் காணப்பட்டபோதிலும், எங்கள் மீதும் எங்களது கம்பெனி மீதும் நம்பிக்கை வைத்து முதலீடு செய்ததற்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சந்தை தெளிவற்ற நிலையில் இருக்கிறது. நமது பங்குகளின் விலையும் இறக்கமாக இருக்கிறது.
இந்த அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எஃப்.பி.ஓவை முன்னெடுத்துச் செல்வது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது என்று கருதுகிறோம். முதலீட்டாளர்களின் நலன் முக்கியமானது. எனவே, முதலீட்டாளர்களை இழப்பிலிருந்து பாதுகாக்க எஃப்.பி.ஓவை முன்னெடுத்துச் செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம். எனவே, வசூலிக்கப்பட்ட பணம் அனைத்தும் முதலீட்டாளர்களிடம் திரும்ப வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பானிக்கு மீண்டும் முதலிடம்!
அதானியின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தை அதானி இழந்துள்ளார். அந்த இடத்தை முகேஷ் அம்பானி மீண்டும் தக்க வைத்துக்கொண்டார். ஆசியாவிலும் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை அம்பானி பிடித்துள்ளார். அம்பானிக்கு 99.7 பில்லியன் டாலர் சொத்து இருக்கிறது. அதானிக்கு 98.7 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து இருக்கிறது.
உலகப் பணக்காரர்கள் பட்டியலின் Real Time Billionaires தரவரிசையை வெளியிட்டுள்ளது Forbes பத்திரிகை. இதில் முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு இந்தியரின் பெயர் உள்ளது.
உலகின் டாப் 10 பணக்காரர்களில் 9வது இடத்தில் வீற்றிருக்கிறார் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு உலகப் பணக்காரர்களில் ஒருவராகவும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும் இருந்த கௌதம் அதானி தனது சொத்து மதிப்பை இழந்தார். உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இருந்தும் வெளியேறினார்.