தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

‘கோமெக்கானிக்’ தில்லுமுல்லு... ஸ்டார்ட்அப் சந்தையில் படிந்த கறை..!

‘கோமெக்கானிக்’
பிரீமியம் ஸ்டோரி
News
‘கோமெக்கானிக்’

ஸ்டார்ட்அப்

கோவிட் இடிமுழக்கத்தின் எதிரொலிகளால் பாதிக்கப்பட்டுள்ள உலக வென்ச்சர் கேப்பிடல் சந்தையும், இந்திய ஸ்டார்ட்அப் சந்தையும் சீக்கிரம் மீண்டெழும் என்ற எதிர்பார்ப்பில் மண் விழுந்துள்ளது. கோமெக்கானிக் (GoMechanic) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் செய்துள்ள தில்லு முல்லுகளால் உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் ஜாம்பவான் என்கிற நம் பெருமையில் சிறு கறை படிந்துள்ளது. இந்த கோமெக்கானிக் செய்த தில்லுமுல்லு என்ன என்று பார்ப்போம்.

சுந்தரி ஜகதீசன்
சுந்தரி ஜகதீசன்

யுனிகார்ன் என்ற உயரிய அந்தஸ்தை எட்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்குத் தேவை யான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்தது கோமெக்கானிக். ஐ.ஐ.எம் அகமதாபாத் பட்டதாரிகளின் மூளையில் உதித்த இந்த நிறுவனம், கார் சர்வீஸை டிஜிட்டல் மயமாக்கும் புதிய தளத்தில் கால் பதித்தது. அதற்காக ஒரு ஆப்பை (app) உருவாக் கியது. நீங்கள் அழைத்தவுடன் ஆளை அனுப்பி காரை சர்வீஸுக்கு எடுத்துச் செல்வது, பழுது விவரங்களைப் பட்டியல் இடுவது, அதற்கான கட்டணங்களைத் தெரிவிப்பது, ஒவ்வொரு அரை மணி நேரமும் உங்கள் காரின் ரிப்பேர் வேலை எந்த நிலையில் உள்ளது என்பதை அறிவிப்பது என்று, கார் உங்கள் வீட்டுக்குத் திரும்ப வரும் வரை உள்ள அத்தனை வேலை களையும் உள்ளடக்கியது இந்த ஆப்.

ஓயோ நிறுவன மாடலைப் பின்பற்றி 40 நகரங்களில் 1,000 கார் ரிப்பேர் மையங் களுடன் கைகோத்தது கோமெக்கானிக். கூகுள் பிளே ஸ்டோரிலும், ஆண்ட்ராய்டு போனிலும் இதன் ஆப் குறுகிய காலத்திலேயே இடம்பிடித்தது. குறுகிய காலத்தில் ஒரு லட்சம் கார்களை சர்வீஸ் செய்த பெருமையையும் அடைந்தது. இதில் முதலீடு செய்ய செகோயியா, டைகர் குளோபல், ஓரியோஸ் வென்ச்சர்ஸ், சிராத்தே வென்ச்சர்ஸ் போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் போட்டியிட்டன. 2016-ல் சுமார் ரூ.1.5 கோடி முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், நான்கே தவணைகளில் ரூ.439 கோடியை வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடமிருந்து முதலீடாகப் பெற்றது.

‘கோமெக்கானிக்’ தில்லுமுல்லு...
ஸ்டார்ட்அப் சந்தையில் படிந்த கறை..!

இங்கு வென்ச்சர் கேப்பிடல் முதலீட்டு முறை பற்றி சொல்லியாக வேண்டும். ஒரு கம்பெனியின் ஆரம்பம் என்பது புத்திசாலி ஒருவரின் மூளையில் உதிக்கும் ஒரு சிறு விதை. அதை வளர்க்கத் தேவையான டெக்னாலஜி, உள்கட்டமைப்பு, நிர்வாகப் பொறுப்பு போன்ற அத்தனையும் பெரும் பணத்தைச் சார்ந்தவை. அத்தனை பணம் ஒரு தனிமனிதரிடம் கிடைப்பது கடினம். இந்த இடத்தில் உதவுபவை வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள். நியூயார்க்கின் டைகர் குளோபல், ஜப்பானின் சாஃப்ட்பேங்க், கலிஃபோர்னியாவின் செகோயியா போன்ற பெரும் நிறுவனங்கள் நல்ல விதைகளைத் தேடி உலகெங்கும் தங்கள் பார்வையைச் செலுத்துகின்றன. நன்கு வளர்ந்து அதிக லாபம் கொழிக்கக்கூடிய ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்கின்றன. அந்த ஸ்டார்ட்அப் லாபம் தர ஆரம்பித்து, நான்கைந்து வருடங்களில் இன்வெஸ்ட்மென்ட் பேங்கர்களின் உதவியுடன் ஐ.பி.ஓ வருகையில், தங்கள் முதலீட்டில் பெரும் பாகத்தை நம் போன்ற சாமானியர்களிடம் விற்று, பிரமிக்கத்தக்க லாபத் துடன் வெளியேறுகின்றன.

உதாரணமாக, 2021-ல் வெளிவந்த நைகா நிறுவனத் துக்கு 2019-ல் முதலீடு அளித்தது டி.பி.ஜி குரோத் என்ற வென்ச் சர் கேப்பிடல் நிறுவனம். அப்போது இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பங்கின் விலை பங்கு ஒன்றுக்கு ரூ.118 மட்டுமே. ஐ.பி.ஓ-வில் ஒரு பங்கின் விலை ரூ.1,125 என நிர்ணயிக்கப்பட்டது. தன் முதலீட்டில் பெரும் பகுதியை இந்த ஐ.பி.ஓ-வில் விற்ற வென்ச் சர் கேப்பிடல் நிறுவனம் பெற்ற லாபம் கிட்டத்தட்ட பத்து மடங்கு.

இந்த அளவுக்கு இல்லை என்றாலும், ஒவ்வொரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவன மும் சராசரியாக 35% அளவுக்கு வருடாந்தர லாபம் பெறு கின்றன. நான்கைந்து வருடங் களுக்கு உள்ளாகவே தங்கள் முதலீட்டைப் பெரும் லாபத் துடன் திரும்பப் பெற்று அடுத்த பொன்முட்டையிடும் வாத்துகளைத் தேடுகின்றன இந்த நிறுவனங்கள்.

இது போன்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களின் உதவியால் கோமெக்கானிக்கும் மெள்ள மெள்ள வளர்ந்து வந்தது. ஐ.பி.ஓ வெளியிடும் எண்ணமும் அதற்கு இருந்தது. ஆனால், கோவிட் காலத்தில் எல்லா நிறுவனங்களையும் போல் கோமெக்கானிக்கும் பாதிக்கப்பட்டது. மாதம் 30,000 கார்கள் சர்வீஸ் செய்த இடத்தில் வெறும் 100 கார்களே சர்வீஸுக்கு வந்தன. 40 மில்லி யன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வருடாந்தர வருவாய் 10 மில்லியனை எட்ட படாத பாடுபட்டது.

ஆனால், பேராசை யாரை விட்டது? வெறும் கார் சர்வீஸில் அதிக பணம் ஈட்ட முடியாது என்று கருதி ஸ்பேர் பார்ட்ஸ் உற்பத்தியிலும், வாகன இன்ஷூரன்ஸ் துறையிலும் கால்பதிக்க எண்ணி, கையில் இருந்த மொத்தப் பணத்தையும் புது பிசினஸ்களில் முதலீடு செய்தது கோமெக்கானிக் நிர்வாகம்.

‘கோமெக்கானிக்’ தில்லுமுல்லு...
ஸ்டார்ட்அப் சந்தையில் படிந்த கறை..!

கையில் பணம் இல்லாத நிலையில், மீண்டும் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களிடம் சென்று நூறு மில்லியன் டாலர்கள் (ரூ.820 கோடி) முதலீடாகக் கேட்டது. இந்த முறை அது அணுகியது டோக்கியோவின் சாஃப்ட் பேங்க் மற்றும் மலேஷிய அரசின் கஸானா போன்ற பெரும் நிறுவனங்களை.

அவை கோமெக்கானிக் தந்த புள்ளிவிவரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ச்சி செய்ய எர்ன்ஸ்ட் & யங் என்ற நிறுவனத்தை நியமித்தன. ஆராய்ச்சியில் கோமெக்கானிக்கின் தகிடுதத் தங்கள் வெளியாகின.

கோமெக்கானிக் செய்த தில்லுமுல்லுகள் குறித்த முழுத் தகவல்களும் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், இதுவரை வந்த தகவல்கள் நம்மை அதிர வைக்கின்றன.

கோமெக்கானிக் தன் வருவாயைப் பொய்யாக அதிகரித்துக் காட்டியுள்ளது; 1,000 ரிப்பேர் மையங்கள் என்று சொன்னதிலும் முரண்பாடு இருந்தது.

2021 ஏப்ரல் 21-ம் தேதி திடீரென கோமெக்கானிக்கின் சேவையைப் புகழ்ந்து நூற்றுக்கணக்கான ரிவ்யூக்கள் வலைதளங்களில் வெளியாகியுள்ளன; அவற்றில் பல வெவ்வேறு பெயர்களில் வெளியாகி இருந்தாலும் உள்ளடக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது.

ஆக மொத்தத்தில், வாடிக்கையாளர்களின் தேவை களைப் புரிந்துகொண்டு, சரியான கட்டணத்தில் தரமான சேவையை விரைவாகத் தந்து தங்கள் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதற்குப் பதில், பொய்யாக தங்கள் ரேட்டிங்கையும் வருவாயையும் உயர்த்திக் காட்டி மக்களை மட்டுமல்லாது வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களையும் ஏமாற்றும் வேலையில் கோமெக்கானிக் ஈடுபட்டிருந்தது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது.

கோமெக்கானிக்கின் நிறுவனர் தங்கள் நிறுவனத் தின் வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் தவறான தரவுகளைத் தர நேர்ந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், “இது முயற்சி அல்ல; பேராசை; வடிகட்டிய ஏமாற்று வேலை” என்று வலைதளங்கள் கூக்குரலிடுகின்றன. 700 ஊழியர்களின் வேலை பறிபோயிருக்கிறது. வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் தங்கள் முதலீட்டை அதிக நஷ்ட மின்றி வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. கோமெக்கானிக் நிறுவனர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப் பட்டுள்ளனர்.

தொழிலை சரியாக செய்வதன் மூலம் தனது நிறுவனத்தை மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்து வந்திருக்க வேண்டிய நிறுவனம் இது. ஆனால், பிறரை ஏமாற்றி பணம் சம்பாதித்துவிட வேண்டும் என்று குறுக்கு வழியை நாடியதன் விளைவு, முதலீட்டாளரின் நம்பிக்கையை இழந்து, மோசடி நிறுவனம் என்கிற பட்டத்தைச் சுமந்து நிற்கிறது. நல்லவேளை, இந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மோசடி இப்போது தெரிந்துவிட்டது. இதுவே ஐ.பி.ஓ வந்து, சாதாரண முதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்த பின் தெரிந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.

முதலீட்டாளர்களே கவனமாக இருங்கள்!