அதானி குழுமத்தின் மீதான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அதானி குழுமம் மீது பணமோசடி, பங்கு மோசடி உள்ளிட்டப் பல முறைகேடான புகார்களை முன்வைத்து அமெரிக்க ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை அதானி குழுமத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அதானி குழுமப் பங்குகள் சரசரவென சரிந்து பெரும் இழப்பைச் சந்தித்தன. இதனால் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடுமையாகக் குறைந்ததால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருந்தவர் 35-ம் இடத்துக்கு அப்பால் தள்ளப்பட்டார். அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை முறையாக விசாரிக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்தன.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது. இந்தக் குழு இதுவரையில் எந்த அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில், அதானி விவகாரத்தில் நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு, அதானிக்கு நற்சான்றிதழ்தான் அளிக்கும். எனவே, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைதான் வேண்டுமென காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ``அதானி விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியிலிருந்து இதுவரை மத்திய அரசிடம் 99 கேள்விகள் கேட்டிருக்கிறோம். இப்போது 100-வதாக ஒரு கேள்வி கேட்கிறோம். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி தேசநலனுக்காக செயல்படுவீர்களா மாட்டீர்களா? அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2-ம் தேதி ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. ஆனால், அக்குழுவுக்கு விசாரணை குழுக்கள் மீதான முறையான அதிகாரம் இல்லை.

இந்த நிபுணர் குழுவுக்கு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நண்பர்களுடனான நெருக்கம் பற்றியோ, நண்பர்களை செழிப்பாக்குவதற்காக அரசை சேர்ந்தவர்கள் ஆட்சியை பயன்படுத்தியது பற்றியோ விசாரிக்க நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை. மேலும், இந்த நிபுணர் குழு அதானிக்குச் சாதகமாக சான்றிதழ் அளிக்கும் குழுவாகவே இருக்கும். மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீதும், சிவில் அமைப்புகள் மீதும், சுதந்திரமான தொழில் நிறுவனங்கள் மீதும்தான் விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.
ஆனால், அதே தீவிரத்தை 1947-ம் ஆண்டுக்குப் பிறகு நாட்டில் நடந்திருக்கும் பெரிய ஊழலான அதானி குழும ஊழலை விசாரிப்பதில் காட்டலாம். அதற்கேற்ப விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துங்கள். எனவே, அதானி ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் விரிவாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுதான் சரியானது.
இதற்கு முன் நடந்த பங்குச் சந்தை ஊழல்களை விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழுவைத்தான் இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசுகளும், பா.ஜ.க அரசுகளும் அமைத்தன. தற்போதுள்ள அரசு ஏன் அதற்குத் தயக்கம் காட்டுகிறது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. அதானிக்கும், தற்போதுள்ள பா.ஜ.க அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையெனில், அதானி குறிப்பிடுவதுபோல யாருடைய உதவியும் இல்லாமல் தானே தன் உழைப்பில் வளர்ச்சி அடைந்தேன் என்பது உண்மையெனில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியதுதானே.

ஆனால் மாறாக, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு விடுக்கும் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கைவிட்டால், ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என மத்திய அரசு தரப்பில் சொல்வதாகக் கூறப்படுகிறது.
அதானி விவகாரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கும், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பதற்கும் என்ன தொடர்பு என்பதுதான் புரியவில்லை. பா.ஜ.க அரசின் இது போன்ற முரணான நடவடிக்கைகள் மேலும் மேலும் சந்தேகத்தைக் கிளப்புவதாகவே இருக்கிறது" என்று அவர் பேசினார்.