நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

வேண்டும் மது போதையிலிருந்து விடுதலை!

தலையங்கம்
News
தலையங்கம்

தமிழகத்தில் இன்றைக்கு மொத்தம் 5,329 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.44,985 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது.

‘தமிழகத்தில் இந்த ஆண்டு 500 மதுக்கடைகள் மூடப்படும்’ என்று சட்டமன்றத் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. தேர்தல் காலத்தில் தி.மு.க-வின் சார்பில் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிற மாதிரி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இன்றைக்கு மொத்தம் 5,329 மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.44,985 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. 2003-04-ம் நிதி ஆண்டில் இந்த வருமானம் ரூ.3,639 கோடியாக மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகளில் ஏறக்குறைய 15 மடங்கு வருமான உயர்வை மதுபான விற்பனை மூலம் அடைந்திருக்கிறது தமிழ்நாடு என்பது எந்த விதத்திலும் பெருமைபடத்தக்க புள்ளிவிவரம் அல்ல. வெட்கித் தலைகுனிய செய்யவைக்கும் விஷயமே!

தமிழகத்தில் மொத்தமுள்ள 5,000-க்கும் அதிகமான கடைகளில் வெறும் 10% கடைகள் மட்டும் மூடினால் போதுமா, அடுத்துவரும் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட அளவிலான கடைகள் மூடப்பட்டு, ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்தமாக மூடப்படும் என்கிற அறிவிப்பைத்தானே வெளியிட்டிருக்க வேண்டும். அது தானே, தி.மு.க தந்த தேர்தல் வாக்குறுதி..!

ஆனால், மதுபான விற்பனை மூலம் தமிழக அரசாங்கத்துக்கு கணிசமான வருமானம் கிடைப்பது மட்டுமல்லாமல், அரசியல்வாதிகளுக்கும் நல்ல லாபம் கிடைத்துவருவதால், சொன்னபடி மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை இவர்கள் குறைப்பார்களா என்பது சந்தேகமே! இன்றைக்கு ஆளும்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்கும் முக்கியமான அரசியல்வாதிகள் மதுபானத் தயாரிப்பாளர்களாக மாறியதுதான், தமிழகத்தில் மதுவிற்பனையைக் குறைக்க முடியாததற்கு மிக முக்கியக் காரணம்.

மதுபானங்களால் தமிழக மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்து, வருமானத்தைவிட மிக அதிகமான பணத்தை ஆண்டுதோறும் இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை தமிழக அரசியல்வாதிகளும் மக்களும் எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகிறார்களோ?

‘‘100% மதுவிலக்கு என்பது ‘உட்டோப்பியன்’ (Utopian) கனவு. அப்படிச் செய் தால், கள்ளச் சாராயம் குடித்து, பலரும் உயிரிழப்பார்கள்’’ என்று சொல்லிச் சொல்லியே, யாரோ கோடி கோடியாக கொள்ளை லாபம் சம்பாதிக்க, ஏழை மக்களின் உடல்நலத்தைதான் பகடியாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். மனித வளத்தை அழிக்கும் இந்த அரசியல்வாதிகளின் சுயநலத்தை மக்கள் புரிந்துகொண்டு, கேள்வி கேட்கத் தொடங்க வேண்டும். கூடவே, மக்களுக்கும் விழிப்பு உணர்வை ஊட்ட வேண்டும். அளவுக்கு அதிகமான ‘ஆல்கஹால்’ ஆபத்து; அதில் நம் குடலை ஓட்டை போடும் நச்சுப் பொருள்கள் அடங்கியிருக்கின்றன என்றெல்லாம் அறிவியல்பூர்வமாகச் சொல்லித் தர வேண்டும்.

இவற்றையெல்லாம் சாதித்தால் மட்டுமே ஆரோக்கியமான எதிர்கால தமிழ்நாட்டுச் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்!

- ஆசிரியர்