நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

அரசு நிறுவனங்களுக்குப் பொருள்களை விற்க உதவும் ஜெம்... எஸ்.எம்.இ-கள் எப்படி பயன்படுத்தலாம்?

சி.ஐ.ஐ கருத்தரங்கில்...
பிரீமியம் ஸ்டோரி
News
சி.ஐ.ஐ கருத்தரங்கில்...

எம்.எஸ்.எம்.இ

இன்றைக்கு நம் நாட்டில் மிகப் பெரிய அளவில் பொருள்களை வாங்குகிற நிறுவனங்கள் என்று பார்த்தால், அவை மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள்தான். ஆனால், இந்த நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்களை சப்ளை செய்ய வேண்டும் எனில், டெண்டர் மூலம் நேரடியாக விண்ணப் பிக்க வேண்டும்; பெரும் நிறுவனங்களுடன் மோதி ஜெயித்தாக வேண்டும். இந்தப் பிரச்னைகளை எல்லாம் சமாளிக்க முடியாத எம்.எஸ்.எம்.இ-கள் என்று அழைக்கப்படும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங் கள் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்குப் பொருள்களை சப்ளை செய்யும் ஆர்டரைப் பெறுவதில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டி யிருந்தன. இதனால் இந்த ஆர்டர்களைப் பெறுவதில் இருந்து எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ஒதுங்கியே இருந்தன.

ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது. மத்திய அரசாங்கம் கொண்டுவந்திருக்கும் கவர்ன்மென்ட் இ-மார்க்கெட்ப்ளேஸ் (GeM- Government E-Marketplace) என்கிற போர்ட்டல் மூலம் அதாவது, இணையதளம்மூலம் இந்தியா முழுக்க உள்ள எஸ்.எம்.இ நிறுவனங்கள் மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு எளிதில் பொருள்களை சப்ளை செய்து, நல்ல லாபம் பெற முடியும் என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது.

சி.ஐ.ஐ கருத்தரங்கில்...
சி.ஐ.ஐ கருத்தரங்கில்...

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ‘ஜெம்’ போர்ட்டலைப் பயன்படுத்தி, அரசுப் பொதுத்துறைகளுக்கு எப்படி பொருள்களை விற்பனை செய்யலாம் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்ல சி.ஐ.ஐ எனச் சுருக்கமாக அழைக்கப்படும் கன்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரி அமைப்பு சமீபத்தில் சென்னையில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கருத்தரங்கில் முதலாவதாகப் பேசினார் பொன் பியூர் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.பொன்னு சுவாமி.

‘‘எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களை நடத்தும் பலருக்கும் ‘ஜெம்’ போர்ட்டல் என ஒன்று இருப்பதே தெரியவில்லை. 2016-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘ஜெம்’ போர்ட்டல், கடந்த 2021-22-ல் ரூ.1.06 லட்சம் கோடி அளவுக்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பொருள்களைக் கொள்முதல் செய்துள்ளன. இதில் 55% எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் பங்காக இருந்தாலும், இனிவரும் காலத்தில் இன்னும் அதிகமான அளவில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ‘ஜெம்’ மூலம் பொருள்களை விற்க வேண்டும். இன்றைக்கு விமான நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் டிராலிகளைகூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையே இருக்கிறது. இவற்றை நம்மூரில் தயார் செய்து விற்கலாமே! மத்திய, மாநில அரசு அமைப்புகளுக்கு இப்படி பல ஆயிரம் பொருள்கள் தேவைப்படுகின்றன. ‘ஜெம்’ நிறுவனத்தின் மூலம் பொருள்களை விற்கும்போது கிடைக்கும் மிகப் பெரிய நன்மை, 10 நாள்களில் பணம் கிடைத்துவிடும் என்பதுதான். பணம் வாங்க மாதக் கணக்கில் அலையத் தேவை இல்லை. இப்படி பல சிறப்புகளைக்கொண்ட இந்த ‘ஜெம்’ போர்ட்டலைப் பயன்படுத்தி, நம்மூர் எம்.எஸ்.எம்.இ-கள் அதிகளவில் பயனடைய வேண்டும்’’ என்றார்.

அவருக்கு அடுத்தபடியாகப் பேசினார் ‘ஜெம்’ அமைப்பின் சி.இ.ஓ பிரசாந்த் குமார் சிங். ‘‘எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ‘ஜெம்’-ல் போர்ட்டலில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து கொள்ள எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

அரசு பொதுத் துறை நிறுவனங்கள் இன்றைக்கும் பல பொருள்களை வெளிநாடு களில் இருந்து இறக்குமதி செய்கிறது. அந்தப் பொருள் களை எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தயாரித்து, ‘ஜெம்’ மூலம் அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம். ‘ஜெம்’ மூலம் பொருள்களை மட்டு மல்ல, சேவைகளையும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு அளிக்க முடியும்.

‘ஜெம்’ மூலம் அரசு நிறுவனங் களுக்கு பொருள்களை விற்க இதற்கு மிகக் குறைந்த கட்டணத் தைக் கட்டினால் போதும். தற்போது உலக அளவில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ‘ஜெம்’, கூடிய விரைவில் கொரியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும். இந்த நிறுவனத்தின் சேவையைத் தமிழகத்தில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் இன்னும் பெரிய அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார் அவர்.

இந்தக் கருத்தரங்கில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஜி.எம் நரேந்திர ஜா, பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஜி.ரமேஷ், டி.என்.பி.எல் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் எஸ்.வி.ஆர் கிருஷ்ணன், ஐ.சி.எஃப் நிறுவனத்தின் எ.சக்திவேல், தென் இந்திய ரயில்வேயின் அவ்வரு கிரண்குமார், சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் பி.வாசுதேவன் ஆகியோர் தங்கள் நிறுவனத்துக்குத் தேவையான பொருள்களை ‘ஜெம்’ மூலம் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் எப்படி சப்ளை செய்ய லாம் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்கள். கோவையைச் சேர்ந்த டர்போ இன்ஜினீயர்ஸ் நிறுவனத்தின் எம்.டி எஸ்.சுதாகர் நன்றி சொல்ல, கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

ஏ.வி.முரளிதரன்
ஏ.வி.முரளிதரன்

‘‘ஜெம்’ போர்ட்டலை அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்!’’

‘ஜெம்’ போர்ட்டலின் இணை முதன்மைச் செயல் அதிகாரி ஏ.வி.முரளிதரன் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். ‘ஜெம்’ போர்ட்டலின் செயல்பாடுகள் குறித்து அவர் நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான பொருள்களை நேரடியாக வாங்குவதற்குப் பதிலாக, ஆன்லைன் மூலம் அனைத்துத் தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதற்காகத்தான் 2016-ல் ‘ஜெம்’ தொடங்கப்பட்டது. https://gem.gov.in/ என இன்டர்நெட்டில் டைப் செய்து இந்த போர்ட்டலைப் பார்த்தாலே இதன் செயல்பாடுகள் தெளிவாகப் புரியும்!

எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் பற்றி விவரங்களை போட்டோவுடன் ‘ஜெம்’ போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும். இதே போல, அரசுப் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு என்னென்ன பொருள்கள் தேவை என்பதை ‘ஜெம்’ போர்ட்டலில் சொல்லும். எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் எந்த நிறுவனம் பொருள்/சேவை வேண்டும் என்று சொல்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு விற்கலாம். ‘ஜெம்’ போர்ட்டலில் 47 லட்சம் பொருள்கள் விற்பனைக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன. தவிர, 295 சேவைகளையும் அரசுப் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தரலாம். ரூ.25,000-க்குள் பொருள்/சேவைகளை நேரடியாகவும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் மதிப்புவரையிலான பொருள்/சேவைகளை ‘ஜெம்’மில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுடன் ஒப்பிட்டு வாங்கிக்கொள்ளலாம். ரூ.5 லட்சத்துக்குமேல் பொருள்/சேவையை வாங்க வேண்டும் எனில், ஏலம் முறையில் கேட்க வேண்டும். ‘ரிவர்ஸ் ஆக்‌ஷன்’ (Reverse Auction) முறையில் இந்த ஏலம் நடக்கும்.

இந்த ஏலம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும். இதில் மனிதர்கள் யாரும் தலையிட முடியாது. விற்பவர், வாங்குபவர் ஆகிய இருவருக்கும் உகந்த ஆகச் சிறந்த விலை என்பது இதில் கிடைக்கும் என்பது முக்கியமான விஷயம்.

இந்த ஏலம் முடிந்து பொருள்களைத் தருவதற்கான ஆர்டர் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், நீங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பொருள்களை அனுப்பலாம். இந்தப் பொருள்கள் சரியாக இருந்தால், அடுத்த சில தினங்களுக்குள் பொருள்களுக்கான பணம் உங்களுக்குக் கிடைக்கும். பொருள்களின் தரம் திருப்திகரமாக இல்லை எனில், திரும்ப அனுப்பப்படும். பொருள்கள் அனுப்பிய பின் அடுத்த ஒன்றிரண்டு வாரங்களுக்குள் பொருள்களின் தரம் பற்றி வாங்குபவர்கள் எதுவும் சொல்லவில்லை எனில், அந்தப் பொருள்களின் தரம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும்.

‘ஜெம்’ போர்ட்டல் 2016-ல் தொடங்கப்பட்டபோது முதலாம் ஆண்டில் வெறும் ரூ.422 கோடி அளவுக்கு மட்டுமே பொருள்கள் விற்கப்பட்டன. இது 2020-21-ல் ரூ.38,580 கோடியாக உயர்ந்து, கடந்த 2021-22-ல் ரூ.1,06,759 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் 19-ம் தேதி வரையில் ரூ.55,781 கோடி அளவுக்குப் பொருள்களும் சேவைகளும் ‘ஜெம்’ மூலம் விற்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 65,506 எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ‘ஜெம்’ இணையதளத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டுள்ளன. ஆனால், இதில் 3,911 நிறுவனங்கள் மட்டுமே ‘ஆக்டிவ்’வாக உள்ளன. இந்த நிதி ஆண்டில் இதுவரை ரூ.18.21 கோடி அளவுக்கு எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் ‘ஜெம்’ மூலம் பொருள்களை விற்றுள்ளன. இது மிகவும் குறைவுதான். தமிழகத்தில் இருந்து பல ஆயிரம் கோடி அளவுக்கு எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் பொருள்களை விற்க முடியும்.

‘ஜெம்’ போர்ட்டல் மூலம் பொருள்களை வாங்குவதில் உ.பி மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த 2021-22-ல் அந்த மாநில அரசாங்கம் ரூ.11,272 கோடி அளவுக்கு பொருள் மற்றும் சேவையை வாங்கியிருக்கிறது. அடுத்து, குஜராத்தும் (ரூ.3,486 கோடி) மகாராஷ்டிராவும் (ரூ.2,260) உள்ளன. ஆனால், தமிழ்நாடு அரசாங்கம் ‘ஜெம்’ போர்ட்டல் மூலம் கடந்த 2021-22-ல் ரூ.221 கோடிக்கு பொருள் மற்றும் சேவையை வாங்கியிருக்கிறது. தமிழக அரசுக்குத் தேவையான பொருள்களை வாங்க முறையான அமைப்புகளை வைத்திருப்பதால், ‘ஜெம்’ மூலம் குறைவாக வாங்குகின்றன. எனினும், ‘ஜெம்’ மூலம் தமிழக அரசாங்கம் பொருள் மற்றும் சேவைகளை வாங்குவது வேகமாக அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்னும் அதிகமான எம்.எஸ்.எம்.இ-கள் ‘ஜெம்’-ல் உறுப்பினர் ஆவது எப்படி என்பதை தமிழில் விளக்கிச் சொல்லும் சேவை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. ‘ஜெம்’-ல் பதிவு செய்துகொள்ள ஏதாவது சிரமம் இருந்தால், இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் உயரதிகாரியைத் தொடர்பு கொண்டு உறுப்பினர் ஆகலாம்’’ என்றார் அவர்.