நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பிசினஸ் பார்ட்னர்ஷிப்... சிக்கல்களைத் தவிர்க்கும் வழிகள்!

பார்ட்னர்ஷிப்
பிரீமியம் ஸ்டோரி
News
பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கும்முன் திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் கண்ணனும் குமாரும் தங்களிடம் இருந்த பணத்தை முதலீடு செய்து ஒரு உணவுக் கடையைத் தொடங்கினார்கள். அந்தக் கடை மக்களின் நன்மதிப்பைப் பெற்று, தனி அடையாளத்தைப் பெற்றது.

சில வருடங்களுக்குப் பிறகு அந்த பிசினஸ் அடுத்த தலைமுறை பிசினஸாக மாறியது. அப்படி மாறியபோது, முதல் தலைமுறை உரிமையாளர்களிடம் இருந்த நட்பு, அடுத்த தலைமுறையினரிடம் இல்லை. அதனால் பிசினஸில் தொடர்ந்து பிரச்னை வர ஆரம்பித்தது. இதற்கு என்ன தீர்வு என்று கண்டுபிடிக்க முடியாமல், நட்பிலும் பிசினஸிலும் விரிசல் ஏற்பட்டு, அந்த உணவுக்கடை வெவ்வேறு பேரில் இயங்கத் தொடங்கி, கடைசியில் மூடப்படும் நிலை உருவானது.

தொழிலில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க பார்ட்னர்ஷிப் பிசினஸில் சட்ட பூர்வமாக எவற்றை எல்லாம் கவனிக்க வேண்டும், எவற்றையெல்லாம் அவசியம் செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சௌ.பெ.மோசஸ்.

பிசினஸ் பார்ட்னர்ஷிப்... சிக்கல்களைத் தவிர்க்கும் வழிகள்!

யாருக்கு என்ன அதிகாரம்..?

“பார்ட்னர்ஷிப் பிசினஸ் என்று வரும் போது, பணத்தைத் தாண்டி, ஒருவரிடம் இருக்கும் தனித்திறமை, விட்டுக்கொடுத்துச் செல்லுதல் போன்ற பல விஷயங்கள் உள்ளன. முதலீடு என்பதைத் தாண்டி, ஒரு பிசினஸை சரியாகச் செய்ய வேண்டுமெனில், அதற்கு சரியான பிசினஸ் பார்ட்னர்ஷிப் தேவை.

பார்ட்னர்ஷிப்பில் சிலரிடம் பணம் இருக் காது; சிலரிடம் நேரம் இருக்காது; சிலரிடம் நல்ல ஐடியா இருக்கும்; சிலர் பிசினஸ் செய்வது குறித்து நன்கு தெரிந்து வைத்திருப் பார்கள். இப்படி யார் எந்த விஷயத்தில் திறமையாகச் செயல்படுகிறார்களோ, அதை அடிப்படையாகக் கொண்டு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கிக்கொள்ளலாம். அதன் அடிப்படை யில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் லாப நோக்கத்துக்காகத் தொழிலில் ஒன்றிணைவது பிசினஸ் பார்ட்னர்ஷிப் என்பார்கள்.

இந்த பிசினஸ் பார்ட்னர்ஷிப்பை ஆக்டிவ் பார்ட்னர், ஸ்லீப்பிங் பார்ட்னர், வொர்க்கிங் பார்ட்னர், நாமினல் பார்ட்னர், எஸ்டாப்பெல் பார்ட்னர், பிராஃபிட் பார்ட்னர், மைனர் பார்ட்னர் என சட்ட ரீதியாக வகைப்படுத்தலாம்.

ஆக்டிவ் பார்ட்னர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலில் முதலீடு மற்றும் உழைப்பு இரண்டும் கொண்டிருப்பவர்கள். இவர்களுக்கு பிசினஸின் லாப - நஷ்டம் இரண்டிலும் பங்கு இருக்கும். முழுக் கவனத்தையும் தொழிலில் காட்டி, முழுப் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

ஸ்லீப்பிங் பார்ட்னர்கள், உழைப்பையும், நேரத்தையும் செலவிட மாட்டார்கள். பிசினஸுக் கான முதலீட்டை மட்டும் தந்து பிசினஸின் வளர்ச்சியில் பங்கெடுத்துக்கொள்வார்கள்.

வொர்க்கிங் பார்ட்னர்கள் நிதி சார்ந்த முதலீடு செய்ய மாட்டார்கள். ஆனால், அந்த பிசினஸுக் குத் தேவையான முழு உடல் உழைப்பைக் கொடுப்பார்கள்.

நாமினல் பார்ட்னர்கள் பிரபலங்களாகவோ, சமுதாயத் தில் நல்ல அந்தஸ்திலோ இருப்பவர்களாக இருப்பார்கள்.அந்தப் பிரபலம் மூலம் அந்தத் தொழிலின் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கச் செய்வதே, இவர் களின் முக்கியமான பங்களிப்பாக இருக்கும். இவர் மூலம் பெறும் நற்பெயருக்கு நம்பகத்தன்மைக்கு மற்ற பார்ட்னர்கள் ராயல்டி தொகை கொடுக்க வேண்டும்.

எஸ்டாப்பெல் பார்ட்னர்கள், அந்த பிசினஸில் தானும் ஒருவர் என்பது போல் வெளியில் காட்டிக்கொள்வார்கள். இதன் மூலம் முதலீட்டாளர்களை பிசினஸுக்குள் அழைத்து வருவார்கள். முதலீட்டாளர்கள் அந்தத் தொழில் மீது கொண்ட நம்பிக்கையைவிட அந்த நபரின் மீது கொண்ட நம்பிக்கையில் முதலீடு செய்வார்கள். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்படும் போது, முதலீட்டாளர்கள் முதலீடு செய்த தொகைக்கு முழுப் பொறுப்பு அந்தத் தனி நபரை மட்டுமே சேரும். இவரை நம்பி முதலீடு செய்த முதலீட் டாளர்கள், மற்ற பார்ட்னர் களைக் கேள்வி கேட்க இயலாது.

பிராஃபிட் பார்ட்னர்கள், பிசினஸுக்குத் தேவையான தொகையை முதலீடு செய்து விட்டு, லாபத்தில் மட்டும் பங்கு கேட்பார்கள். இவர்கள் நஷ்டத் தில் பங்கேற்க மாட்டார்கள்.

மைனர் பார்ட்ர்னர்கள் என்பவர்களின் பணி சற்று வித்தியாசமானது. இந்திய ஒப்பந்தச் சட்டத்தின்படி, 18 வயதுக்குக்குள் இருப்பவர்கள் கையொப்பம் இடும் உடன் படிக்கைகள், பத்திரங்கள் செல்லாது. ஆனால், இந்தியன் பார்ட்னர்ஷிப் சட்டம் பிரிவு-30 கீழ் அந்தத் தொழில் உள்ள மற்ற பார்ட்னர்கள் சம்மதித்தால், 18 வயதுக்கு உட்பட்டவரைத் தொழில் பார்ட்னராக இணைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர் எந்தவித நஷ்டத்திலும் பொறுப் பேற்க மாட்டார் என்பது குறிப் பிடத்தக்கது.

சௌ.பெ.மோசஸ்
சௌ.பெ.மோசஸ்

பத்திரத்தில் என்ன குறிப்பிட வேண்டும்?

பார்ட்னர்ஷிப் மூலம் தொழில் செய்கிறவர்கள் முதலில் ஒரு தொழில் உடன்படிக்கை செய்து கொண்டு, அதைப் பத்திரத்தில் எழுதிக்கொள்ள வேண்டும். அதாவது, யாரெல்லாம் பார்ட்னர் களாக இணையப்போகிறார்கள், அவர்களுடைய முதலீடு எவ்வளவு, அவர்களுடைய வேலை என்ன, ஒவ்வொருவருக்கும் என்ன பொறுப்பு, லாப, நஷ்டத்தில் எவ்வளவு பங்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பிசினஸில் யார் யார் என்ன முடிவெடுக்க வேண்டும், யாருக்கு என்ன அதிகாரம் இருக் கிறது என்பதையெல்லாம் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மேலும், இந்த முடிவு எந்தத் தேதியில் எடுக்கப்பட்டது என்பது போன்ற தகவல்களும் அவசியம் இருக்க வேண்டும்.

பத்திரப் பதிவு அவசியம்...

இந்தப் பத்திரத்தை எழுதினால் மட்டும் போதாது. அது சட்ட ரீதியாகச் செல்ல வேண்டும் எனில், அந்தப் பத்திரத்தைப் பதிவு செய்வது அவசியம். தொழில் என்பது பணம் தொடர்பானது என்பதால், சில நேரங்களில் முன்பு ஒப்புக்கொண்ட முடிவை பிற்பாடு மாற்றிப் பேச வாய்ப்பிருக்கிறது. ‘கட்டாயத்தின் பேரில்தான் கையெழுத்து போட்டேன்’ என்று சொல்லவும் வாய்ப்பிருக்கிறது. எனவே, உங்கள் பார்ட்னர் அனைவரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டபின் அதைப் பத்திரத்தில் எழுதி கையொப்பம் வாங்குவதுடன், பதிவுத்துறையில் பதிவதும் அவசியம். பார்ட்னர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஊரில் வசித்தாலும், பிசினஸை எங்கு ஆரம்பிக்கிறீர்களோ, அந்தப் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டால் போதும்.

பார்ட்னர் இறந்துவிட்டால் செய்ய வேண்டியது என்ன?

உங்களின் பிசினஸ் பார்ட்னராக இருந்த ஒரு நபர் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் யாரேனும் ஒருவர் பார்ட்னராக இணைய விருப்பம் தெரிவித்து, அதை மற்ற பார்ட்னர்கள் ஏற்றுக்கொண்டால், அவரை சேர்த்துக்கொள்ளலாம். கருத்து முரண்பாடுகள் இருக்கும்பட்சத்தில் நீங்கள் முன்பே பத்திரத்தில் குறிப் பிட்டதுபோல, அந்த பார்ட்னருக்கான லாப - நஷ்ட விகிதத்தைப் பிரித்துக் கொடுத்துவிடலாம். லாபத்தில் பங்கு இருப்பது போன்றே இறந்தவரின் குடும்பத்தினர் நஷ்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பது நிச்சயம்.

பிசினஸ் பார்ட்னர்ஷிப்... சிக்கல்களைத் தவிர்க்கும் வழிகள்!

பார்ட்னர் விலக நினைத்தால்...

பார்ட்னர்ஷிப் ஒருவர் திடீரென விலக நினைத்தால், அவர் முதலீடு செய்த தொகையை அவருக்குத் திரும்பித் தர இயலாது. அதே நேரம், அப்போது பிசினஸ் லாபத்தில் செல்கிறதா, நஷ்டத்தில் இருக்கிறதா என்பதைக் கணக்கிட்டு பத்திரத்தில் அவர்களின் லாப - நஷ்ட பங்கு விகிதத்தின்படி கணக்கிட வேண்டும். பிறகு, பார்ட்னர்ஷிப் மூலப் பத்திரத்தில் திருத்தங்கள் செய்து, சம்பந்தப்பட்டவரின் கையெழுத்து வாங்கிய பின் செட்டில்மென்ட் செய்யலாம்.

பார்ட்னர்களால் ஏமாற்றப்பட்டால்...

ஒரு தொழிலில் நீங்கள் ஏமாற்றப்பட்டால், முதலில் அது என்ன மாதிரியான குற்றம் என்பதைப் பார்ப்பது அவசியம். சில முடிவுகளை உங்களைக் கேட்காமல் எடுத்திருந்தால் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம். வங்கிக் கணக்கைத் தவறாகப் பயன்படுத்துதல், உங்களின் கையொப்பத்தை அவர்களே ஈட்டுக்கொள்தல் போன்ற குற்றங்களில் எனில், காவல் நிலையத்தில் புகார் அளித்து, குற்றவியல் நீதிமன்றம் வரை செல்லும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது” என விளக்கமாக எடுத்துச் சொன்னார் வழக்கறிஞர் மோசஸ்.

பார்ட்னர்ஷிப் மூலம் பிசினஸ் செய்ய நினைப்பவர்கள் இந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது!