அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் பிரபல ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜன.24 அன்று அதானி குழும நிறுவனதுக்கு எதிராக நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இது அதானி குழுமத்தை மட்டுமன்றி இந்தியப் பங்குச் சந்தையையே ஆட்டம் காணச் செய்தது. இதனால் முக்கிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யும் சரிவை சந்தித்தது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கைக்குப் பிறகு, அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை 20 முதல் 30 சதவிகிதம் வரை அடுத்த இரண்டு நாள்களில் சரிவடைந்துள்ளது.

இதன் காரணமாக உலக அளவில் மூன்றாவது பணக்காரராக இருந்த கௌதம் அதானி இரண்டு நாள்களில் நான்கு இடங்கள் பின்தங்கி ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அதானி குழுமப் பங்குகளில் அதன் நிறுவனருக்கு அடுத்தபடியாக மிக அதிக அளவிலான பங்குகளில் எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்துள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் ஏற்பட்ட சரிவு காரணமாக எல்.ஐ.சி நிறுவனம் மொத்தமாக 16,580 கோடி ரூபாய் இழந்தது.
இந்நிலையில், ``ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை இந்தியா மற்றும் அதன் அமைப்புகள், வளர்ச்சி மீது நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல்” என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கைக்குப் பதிலளித்து 413 பக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில்,
``தொடர் பங்கு வெளியீடு ஆரம்பிக்கும்போது வேண்டுமென்றே நிறுவனத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப் புறம்பான விஷயங்களைத் திரித்து ஷார்ட் செல்லிங் மூலம் லாபம் கிடைப்பதற்காக ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது. இது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் மட்டும் அல்ல, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீதும் திட்டமிட்ட தாக்குதலை ஹிண்டன்பர்க் நிறுவனம் செய்துள்ளது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவை அடிப்படை ஆதாரமற்றவை, உள்நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டுகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியாவின் மிகப் பெரிய பங்கு வெளியீடுகளில் அதானி குழுமம் வளர்ச்சி அடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில், ஹிண்டன்பர்க இப்படி குற்றச்சாட்டை வெளியிட்டது அதன் நம்பகத்தன்மை மற்றும் செயல்பாடுகள் மீது கேள்வியெழுப்புகிறது.
இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டதற்கான காரணங்களை ஹிண்டன்பர்க் வெளியிடவில்லை. சுயநலத்தை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை, பத்திரங்கள் மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களின் மீறலாகும்.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் எழுப்பப்பட்ட 88 கேள்விகளில், 65 கேள்விகளுக்கு உரிய அமைப்புகளிடம் ஏற்கெனவே விளக்கம் அளித்து அதானி குழுமம் அறிக்கை அளித்தது. மீதமுள்ள 23 கேள்விகளில், 18 கேள்விகள் பங்குதாரர்கள் மற்றும் அதானி குழுமத்தைச் சாராத நிறுவனங்கள் பற்றியவை. மற்றுமுள்ள 5 கேள்விகள் அடிப்படையற்ற, கற்பனையான தரவுகளைக் கொண்ட பொய்யான குற்றச்சாட்டுகள்” எனத் தெரிவித்துள்ளது.