
வெற்றித் தலைமுறை 6
புதிய முயற்சிகளும் தொடக்கங்களும் இருந்தால், எந்த பிசினஸிலும் சக்சஸ் சாத்தியம்தான். குறைந்த முதலீட்டில்கூட அந்த வெற்றியை சாத்தியப்படுத்திவிட முடியும் என்பதற்கு உதாரணமாக மாறி, தன் முத்திரையைப் பதித்துள்ளது ‘வி.வி.வி அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் லிமிடெட்’ நிறுவனம்.
எள்ளு வியாபாரத்தில் தொடங்கிய அவர் களின் பிசினஸ் பயணம் அடுத்தடுத்த தலைமுறையில் இதயம், மந்த்ரா, சம்பந்தி எள், ராசாத்தி நைட்டிகள், இதயம் டாட்ஸ் என்று பல்வேறு பிராண்டுகளாக வளர்ந்து, கோடி களில் டேர்ன்ஓவர் செய்யும் நிறுவனமாக உருமாறியுள்ளது.
1943-ம் ஆண்டில் வி.வி. வன்னிய பெருமாள் தொடங்கிய இந்த வெற்றிப் பயணம் சுவாரஸ்ய மானது. விருதுநகர் மாவட்டத்தைப் பூர்வீக மாகக் கொண்டவர் வன்னிய பெருமாள். சிறுவயதிலிருந்தே வியாபாரத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். பதின்ம வயதில் விவசாயிகளிடமிருந்து எள்ளை வாங்கி தன்னுடைய குடோனில் சேமித்து, எண்ணெய் நிறுவனங்களுக்குத் தேவையான போது விற்பனை செய்வதைத் தொழிலாகச் செய்து வந்தார். ஒரு சமயம், விவசாயிகளிடமிருந்து வாங்கிய எள்ளை விற்க முடியாமல் போக, குடோனில் இருக்கும் எள்ளை என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார். அந்த எள்ளை எண்ணெய்யாக மாற்றும் முயற்சியை எடுத்தார். எள்ளை விற்பதைவிட அதை எண்ணெய்யாக மாற்றி விற்பதில் லாபம் அதிகமாக இருக்கவே, எள் வியாபாரத்தை நிறுத்திவிட்டு நல்ல எண்ணெய் வியாபாரத்தைத் தொடங்கினார். சில ஆண்டுகளில் நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எனத் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளார்.

வன்னிய பெருமாளுக்கு ராஜேந்திரன், ஆனந்தம், குணசீலன் என்ற மூன்று மகன்கள். 1986-ம் ஆண்டு வரை ஆனந்தம் என்ற பெயரில் மட்டும் எண்ணெய் தயாரிப்பில் இருந்த `வி.வி.வி.அண்ட் சன்ஸ் எடிபிள் ஆயில் லிமிடெட்’ பாகப்பிரிவினை காரணமாக இரண்டு நிறுவனங்களாகப் பிரியும் சூழல் ஏற்பட்டது. ராஜேந்திரன் குடும்பத்தினர் இதயம் என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்கள். குறைந்த காலத்தில் அதிக வளர்ச்சியை எட்டி, வன்னிய பெருமாள் குடும்பத்தின் மிகப் பெரிய அடையாளமாக உருமாறியது ‘இதயம்.’ எண்ணெய் தயாரிப்பில் 80 ஆண்டுக் கால அனுபவமும், இதயம் நிறுவனத்தின் 40 ஆண்டுக் கால பயணத்தையும் குறித்து ‘இதயம்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான ராஜீவ் விக்னேஷ் நம்மிடம் பேசினார்.
“எண்ணெய் தயாரிப்பில் எங்களுக்கு 80 ஆண்டுக் கால அனுபவம் இருக்கிறது. அதனால் எள்ளின் தரம், தயாரிப்பு முறைகள், கருப்பட்டி தேர்வு எனத் தயாரிப்பு சார்ந்தவற்றில் ஆழமான புரிதல் எங்கள் குடும்பத்துக்கு இருந்தது. 80 ஆண்டுக் கால அனுபவம் இருந்தாலும், 40 ஆண்டுகள் வரை விருதுநகரைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களில் மட்டுமே எங்களுடைய எண்ணெய் புழக்கத்தில் இருந்தது.
என் அப்பா முத்து 1978-ம் ஆண்டு பிசினஸில் நுழைந்தார். அப்பாவின் இலக்கு ஆனந்தம் என்ற எங்களுடைய பிராண்டை உலகம் முழுக்க தெரியப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே. அதனால் மார்க்கெட்டிங் விஷயத்தில் நிறைய கவனம் செலுத்தினார். நிறுவனத்திலிருந்த மார்க் கெட்டிங் ஊழியர்களுடன் சேர்ந்து அப்பாவும் களத்தில் வேலை செய்தார். சாம்பிள் கொடுப்பது, வீடு வீடாகச் சென்று விளம்பரம் செய்வது என நிறைய புது முயற்சிகளை மேற்கொண்டார். அப்பா பிசினஸுக்குள் வந்தபிறகுதான் எங்கள் நிறுவனத்துக்கென புது லோகோ டிசைன் செய்யப்பட்டது. விளம் பரங்கள் எடுக்கும் கான்செப்ட் வந்தது. எட்டு ஆண்டுகளில் ஆனந்தம் நிறுவனத்தை அப்பா அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார். 1986-ம் ஆண்டு குடும்பத்தில் பாகப்பிரிவினை வந்தது.
வி.வி.வி.ஆனந்தம் தாத்தா, ஏற்கெனவே இருக்கும் நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட, வி.வி.வி. ராஜேந்திரன் தாத்தா குடும்பம் புதிய பிராண்டை உருவாக்கும் சூழல் வந்தது. ஆனால், ஆனந்தம் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள், பழைய நிறுவனம் அல்லது புதிதாகத் தொடங்கப்பட உள்ள நிறுவனம் என எதில் வேண்டுமானாலும் வேலைக்குச் சேர்ந்துகொள்ளலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது.
ராஜேந்திரன் தாத்தாவின் வழிகாட்டுதலோடும் அப்பா முத்துவின் முயற்சியாலும் ‘இதயம்’ நிறுவனம் உதயமானது.ஜீரோவில் இருந்து எங்கள் குடும்பத்தின் புதிய பயணம் தொடங்கியது. பிசினஸை எந்த இடத்திலிருந்து தொடங்கினாலும், கடின உழைப்பால் வெற்றியை வசப்படுத்த முடியும் என்பதை எங்கள் தலைமுறை யினருக்கு என் அப்பா ஆழமாக பதிய வைத்தார்” என்ற ராஜீவ், இதயம் நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி பேசத் தொடங்கினார்.
“ஆரம்பத்தில் புதிய நிறுவனத் துக்கு ‘சக்தி’ என்ற பெயரையே அப்பா தேர்வு செய்தார். ஆனால், அந்த பெயரில் இன்னொரு எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் இருந்ததால், பரிசீலனையில் இரண்டாம் இடத்தில் இருந்த ‘இதயம்’ நிறுவனத்தின் பெயர் எங்களுடைய பிராண்டின் பெயராகத் தேர்வு செய்யப்பட்டது. இதயம் நிறுவனத் துக்கு லோகோ தேர்வு, பிராண்ட் நிறம் எல்லாவற்றையும் வடிவமைத் தது அப்பாவும், அவருடைய சகோதரர்களும்தான்.
நல்லெண்ணெய் கசக்கும், பொங்கும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும் என்பதே புதிய பிராண்ட் தொடங்கியவுடன் எங்களின் நோக்கமாக இருந்தது. அதனால் எண்ணெய் தயாரிப்பு முறைகளில் அப்பா மாற்றம் செய்தார். வெவ்வேறு ஊர்களில் எங்களுடைய பிராண்டை அறிமுகம் செய்யும் முயற்சி எடுத்தது, விளம்பரங்கள் செய்தது, தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை போன்ற காரணங்களால், இதயம் நிறுவனம் ஆரம்பிக்கப் பட்ட அடுத்த சில ஆண்டுகளில் ஏற்றத்தைச் சந்திக்கத் தொடங்கியது.
பிரபலமான நடிகையை வைத்து இதயம் பிராண்டுக்கு விளம்பரம் எடுக்க வேண்டும், அதன் மூலம் இன்னும் நிறைய மக்களை சென்றடைய வேண்டும் என்பது அப்பாவின் திட்டமாக இருந்தது. அப்போது விளம்பர நிறுவனத்தில் சில நடிகைகளின் பெயர்களை எங்களுக்கு பரிந்துரை செய்தார்கள். அதில் இருந்து ஜோதிகா தேர்வு செய்யப்பட்டார். ஜோதிகாவின் ‘தினம்தோறும் வாங்குவேன் இதயம்’ என்ற விளம்பரம் எங்கள் நிறுவனத்தின் அடையாளமாக மாறியது. பிசினஸ் செய்பவர்கள் தரத்தில் காட்டும் கவனத்தை விளம்பரத்திலும் செலுத்த வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்லுவார். அது அந்த விளம் பரம் மூலம் உண்மையும் ஆகியது. இன்னும் அதிக வாடிக்கையாளர் களைச் சென்றடைந்தோம்.
என் சித்தப்பாக்களான அன்பு, சத்யம், தென்றல் அப்பாவுடன் இணைந்து இதயம் நிறுவனத்தை கவனித்துக்கொண்டே புதுப்புது விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். 10 வருடங்களுக்குமுன் நான்காம் தலைமுறை யினராக நானும் என் சகோதரர்களும் பிசினஸைக் கவனித்துக்கொள்ள ஆரம்பித்தோம். ஏற்கெனவே வளர்ச்சி அடைந்த பிசினஸ் என்பதால், தரத்தை தக்க வைக்க எள் உற்பத்தியை அதிகரிப்பது, எள் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, களத்துக்கு நேரடியாகச் செல்வது போன்றவை என் இலக்காக இருந்தது. நல்ல உற்பத்திப் பொருள் இருந்தால், நம் பொருளின் தரம் சிறப்பாக இருக்கும் என்பதன் அடிப்படையில் மூலப் பொருளில் நாங்கள் கவனம் செலுத்தத் தொடங்கினோம்.

மேலும், நிறுவனத்திலிருந்து அடுத்தடுத்த கிளை நிறுவனங்கள் தொடங்குவதில் கவனம் செலுத்தினோம். இப்போது சம்பந்தி எள், மந்த்ரா கடலை எண்ணெய், ஹர் தில் கடுகு எண்ணெய், மந்த்ரா கல்வி நிறுவனம், ராசாத்தி நைட்டி நிறுவனம் என்று பல்வேறு நிறுவனங் களாக வளர்ச்சி அடைந்து இருக்கிறோம். மூன்று மாவட்டங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட எங்களுடைய பிராண்ட் இப்போது 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இணைய வியாபாரத்திலும் மக்கள் எங்களை அணுகுகிறார்கள். வாடிக்கையாளர்களை தக்கவைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.எங்களுடைய சமூக வலைதளங்கள், இணையப் பக்கங் களில் நிர்வாக இயக்குநர்களின் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்திருக்கிறோம். குறைகளை நாங்களே கேட்டு நிவர்த்தி செய்கிறோம். வாடிக்கையாளர்கள்தான் எப்போதும் பிசினஸின் ராஜாக்கள்” என்ற ராஜீவ் சுவாரஸ்ய நிகழ்ச்சி ஒன்றையும் பகிர்ந்துகொண்டார்.
“ஒரு முறை வாடிக்கையாளர் ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆனந்தம் எண்ணெய் எங்கள் பகுதியில் கிடைக்கவில்லை என்றார். நான், ‘இது இதயம் நிறுவனம். ஆனாலும் உங்களுக்கு ஆனந்தம் எண்ணெய் கிடைக்க உதவுகிறேன்’ என்று சொல்லி, எங்கள் டீலர் மூலம் ஆனந்தம் எண்ணெய்யை அந்த வாடிக்கையாளருக்குக் கொடுத்து அனுப்பியதுடன், இதயம் எண்ணெய்யையும் கொடுத்து அனுப்பினேன். அந்த வாடிக்கையாளர் அதன்பின் அவ்வளவு சந்தோஷமாகப் பேசினார்.
வாடிக்கையாளர்கள் இருந்தால் போதும், எப்படிப் பட்ட வெற்றியையும் தொட்டுவிடலாம். நிறுவனமாக எத்தனையோ மாறுதல்களைச் சந்தித்து இருந்தாலும், குடும்பமாக இப்போதும் இணைந்திருக்கிறோம். எங்கள் நிறுவனம் என்பது தனிமனித முயற்சிதான். ஆனால், தலைமுறையின் வெற்றி” என்று புன்னகைத்தார் ராஜீவ்.
படங்கள்: ஜே.சுரேஷ் கிருஷ்ணா